இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” - எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (28/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளால், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நேற்று (27/06/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதிலும் அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறியள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை

ஊழல் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியின்படி, இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டதில் அரசுக்கு 811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொடுக்கப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி, 7 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணை போகாத அளவுக்குக் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்," என்று கூறியுள்ளார்.

போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்

தமிழகத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அரசு அமைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்ற செய்தி பெற்றோருக்குக் கவலையளிக்கிறது.

பாலியல் வழக்குகளில் தவறு செய்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தூக்கு தண்டனை என்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

போக்சோ சட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு பிரத்யேக நீதிமன்றமாவது அமைக்கப்பட வேண்டும். 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பிரத்யேக நீதிமன்றமாவது அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க திண்டுக்கல், தருமபுரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. அவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்.

வழக்கின் தேக்கம் என்பது பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே போக்சோ வழக்குகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் நீதிமன்றத்துக்கும் உண்டு. மாநிலத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: