You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு: முழு அடைப்பு அழைப்பு, முஸ்லிம் கட்சி, எம்.பி. ஆதரவு
இலங்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு அடைப்புக்கு (ஹர்த்தால்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7 அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கிளிநொச்சியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் சார்பில் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி ஊடக சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் முஸ்லிம்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியும், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை புறக்கணித்தும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும்: றிசாட் பதியுதீன்
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மை சமூகங்களுக்கு தற்போதைய அரசாங்கம் இழைக்கும் அநீதிகளைக் கண்டித்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு பூரண ஒத்துழைப்பை முஸ்லிம் மக்கள் வழங்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கை சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் - ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்".
"முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய பேதங்களை மறந்து ஒன்றுபடுமளவுக்கு பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம் கருதுகிறோம்".
"எனவே, நாளை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்த முழு அடைப்பை ஆதரிப்பது அவசியம்".
"ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகளிலிருந்து நமது சமூகங்கள் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்கள், இந்த ஒத்துழைப்புக்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்" எனவும், றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
தமிழர்கள் மத்தியில் ஆவேசம்: தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பெருமளவிலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
5 பல்கலைக்கழக மாணவர்களும், ஒரு பாடசாலை மாணவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாணவர்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என பலரும் போராட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தூபியை மீள நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், சில சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்புக்கு (ஹர்த்தால்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 வரை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்