You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோக்யோ ஒலிம்பிக்: 13 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற இந்தியா, இனிதே நிறைவடைந்த ஒலிம்பிக்
கடந்த இரு வாரங்களுக்கு மேல் நடந்து வந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் இனிதே நிறைவடைந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தங்க பதக்கத்தோடும், மொத்தம் ஏழு பதக்கங்களோடும் நிறைவு செய்திருக்கிறது இந்தியா.
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய அணிவகுப்பை வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடி ஏந்திச் சென்றார்.
பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடந்தாலும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் தத்தமது நாடுகளில் இருந்தபடியே கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் படங்கள் ஒரு பெரிய திரையில் காட்டப்பட்டது.
காணொளிகளை அனுப்புவதற்கான இணைப்பை ஒலிம்பிக் கமிட்டி இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது.
'ஒமோதெனாஷி' வழக்கத்தைக் கடைபிடிக்கும் விதத்தில், விளையாட்டு வீரர்கள் தளர்வாக உணர்வதற்காக ஒலிம்பிக் மைதானத்தின் தளம் புல்வெளியாக மாற்றப்பட்டிருந்தது.
'ஒமோதெனாஷி' என்பது 'விருந்தினர்களை முழு மனதுடன் கவனித்துக் கொள்ளும்' ஜப்பானிய பாரம்பரிய வழக்கத்தைக் குறிக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பிடமான கிரேக்க நாட்டை (கிரீஸ்) கௌரவிக்கும் வகையில், ஒலிம்பிக் நிறைவு விழாவின்போது, ஒலிம்பிக் கொடி மற்றும் ஜப்பான் தேசியக் கொடியுடன் கிரீஸ் தேசியக் கொடியும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்டது.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2024இல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கிறது. அந்த ஒலிம்பிக் போட்டிக்கு உலகை வரவேற்கும் வகையில், ஒலிம்பிக் மைதானத்தில் பிரான்ஸ் நாட்டின் கொடியும் கிரீஸ் கொடிக்கு அருகே இறுதியாக ஏற்றப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய தன்னார்வலர்களின் பங்கை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் அவர்களது படங்கள் ஒலிம்பிக் ஸ்டேடியம் திரையில் காட்டப்பட்டது.
2016க்கு பின் 2020இல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. எனினும் 'டோக்யோ ஒலிம்பிக் 2020' என்றே இந்த ஒலிம்பிக் அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டது.
இந்த ஒலிம்பிக்கில் தொடக்க விழா ஜூலை 23ஆம் தேதி நடந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்