IND vs ENG கிரிக்கெட்: நம்பிக்கையை காப்பாற்றிய நடராஜன்; சாம் கரன், விராட் கோலி பாராட்டு
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் புனேவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
ஆட்ட நாயகனாகத் தேர்வான இங்கிலாந்து அணியின் சாம் கரன் ஆடிய அதிரடி ஆட்டம் அந்த அணி வெற்றியைத் தட்டிச்செல்ல உதவவில்லை.
ஆட்டத்தின் முடிவை நிர்ணயிப்பதாக அமைந்தது பரபரப்பான கடைசி ஓவர். அதை வீசியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி. நடராஜன்.
முக்கியமான கடைசி ஓவரில் வெறும் ஆறு ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார் நடராஜன். நடராஜன் கடைசி ஓவர் வீசிய விதத்தை சாம் கரன் வெளிப்படையாகப் பாராட்டினார்.
இந்திய மண்ணில் நடராஜனுக்கு முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுதான்.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இழந்துவரும் இங்கிலாந்து அணி நேற்றுடன் முடிவடைந்த தொடரையும் இழந்தது.
நேற்றைய போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவன் - ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடியது. விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை இந்திய அணி கடந்து இருந்த நிலையில் ரோகித் 37 ரன்களில் வீழ்ந்தார். தவன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விராட் கோலி ஏழு ரன்களுக்கு வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது.
35 ஓவர்களுக்குள் இந்திய அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் வெளியேறிய நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை இந்திய அணியின் ரன் ரேட்டை மளமளவென உயர்த்தியது.
ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 64 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது அந்த அணியின் இளம் வீரர் சாம் கரன் ஆடிய ஆட்டம், இங்கிலாந்து அணி ஒருவேளை வெற்றி பெற்று விடுமோ என்று நினைக்க வைத்தது.
அப்படி ஒரு சூழலில் கடைசி ஓவரை நடராஜனுக்கு வழங்கினார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி.
நடராஜனும் தனக்கான வாய்ப்பை நியாயப்படுத்த கடைசி ஓவரை நம்பிக்கையுடன் வீசினார்.
முக்கியமான இந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் நடராஜன் . கடைசியாக இந்தியா வெற்றி பெற்றது.
எட்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி 83 பந்துகளில் 95 ரன்கள் எடுத்த சாம் கரனின் முயற்சி இங்கிலாந்து அணிக்கு உதவவில்லை.
இங்கிலாந்துடனான டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகிய மூன்று தொடர்களிலும் வென்று முத்திரை பதித்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாகச் சென்று கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா மற்றும் நடராஜன் ஆகியோர் அதை இந்தியாவின் பக்கம் திரும்பியதாகப் பாராட்டினார் கோலி.
பேட்டிங் செய்ய சாதகமான இதுபோன்ற ஆடுகளங்களில் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருதும், புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்படாதது குறித்து தாம் வியப்படைந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- “தமிழர்கள் நரேந்திர மோதி முன் தலைவணங்க விரும்பவில்லை” - ராகுல் காந்தி
- நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா
- இதுவரை 400 பேருக்கு மேல் பலி; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மியான்மர் ராணுவத்துக்கு எதிர்ப்பு
- சென்னை மாநகராட்சி: எந்த தொகுதியில் என்ன பிரச்னை? வாக்காளர்கள் எதிர்பார்ப்பு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: