வாட்ஸ்ஆப் தனியுரிமை: அபராதத்திற்கு பிறகு ஐரோப்பாவில் கொள்கையை மாற்றும் நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images
வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில், தரவு பாதுகாப்பு தொடர்பாக பெரும் அபராதத்தை எதிர்கொண்ட பின்னர், தனது தனியுரிமை கொள்கையை மாற்றி எழுதுகிறது.
ஒரு விசாரணைக்கு பிறகு, ஐரிஷ் தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது. இது பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation -GDPR) வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய அபராதமாகும். மேலும், வாட்சப் தனது கொள்கையை மாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸஆப் நிறுவனம் அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது; ஆனால், ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் தனது கொள்கை ஆவணங்களில் திருத்தம் செய்கிறது.
இருப்பினும், தனது உண்மையான சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
அதற்கு மாறாக, "எங்களின் தற்போதைய நடைமுறைகளில் கூடுதல் தகவல் சேர்பதற்காகவே" இந்த திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனியுரிமை கொள்கையின் ஐரோப்பிய பதிப்புருவில் மட்டுமே இருக்கும். இது ஏற்கனவே உலகில் உள்ள மற்ற நாடுகளை விட வேறுபட்ட பதிப்புரு என்பது குறிப்பிடத்தக்கது.
பயனாளர்களுடனான எங்களின் செயல்முறைகள் அல்லது உடன்படிக்கை ஒப்பந்தங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. வாட்சப் பயன்படுத்த, பயனாளர்கள் எதையும் ஓப்புக்கொள்ளவோ அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ அவசியம் இல்லை", என்று இந்த திருத்தத்தை அறிவிக்கும்போது, அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய கொள்கை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிளிர்ச்சியடைந்த பயனர்கள்
ஜனவரி மாதம், வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அந்நிறுவனத்தின் விதிமுறைகளில் நடந்த புதுப்பிப்பு மாற்றம் குறித்து புகார் எழுப்பினர். தங்களின் தரவுகள் தற்போது மெட்டா (Meta) என்று அழைக்கப்படும் வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் உடன் பகிரப்படும் என்று பலரும் நம்பினர்.
இந்த புதிய விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்ள மறுத்தால், தங்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று பலரும் கருதினர்.
உண்மையில், சிறிய அளவிலான மாற்றமே நடந்தது. இருப்பினும், வாட்சப் நிறுவனம் இந்த மாற்றங்களை செயல்படுத்த தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது; மேலும், அதற்கு மாறாக, பொதுமக்களின் பார்வையை மாற்ற பல மாதங்களை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த குழப்பத்திற்கு இடையே, பல லட்ச பயனாளர்கள், வாட்சப் நிறுவனத்தின் போட்டியாளரான 'சிக்னல்' அப்-பை பதிவிறக்கம் செய்தனர்.
ஐரிஷ் தரவு பாதுகாப்பு ஆணையரின் (Irish Data Protection Commissioner - DPC) தேவை ஏற்ற புதிய திருத்தங்கள் குறித்து எழுதுகையில், வாட்சப் நேரடியாக இந்த விவகாரங்களை குறிப்பிட்டது.
"இந்த புதுப்பிப்பு, மெட்டா உட்பட யாருடனும் பயனாளர் தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம், பயன்படுத்துகிறோம் அல்லது பகிர்கிறோம் என்பதில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை. எங்கள் சேவையை நாங்கள் எவ்வாறு இயக்குகிறோம் என்பதையும் இது மாற்றாது" என்று அந்நிறுவனம் எழுதியுள்ளது.
மேலும், "வாட்ஸ்ஆப் பயன்படுத்த, பயனர்கள் எதையும் ஓப்புக்கொள்ளவோ அல்லது எந்த நடவடிக்கை எடுக்கவோ அவசியம் இல்லை", என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தனது சேவை, தொடர்ந்து, மறையாக்கம் (End to End Encrypted) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்துவதில் அந்நிறுவனம் முனைப்பாக உள்ளது. அனுப்புனர் மற்றும் பெறுபவர் மட்டுமே இந்த குறுஞ்செய்திகளை படிக்கமுடியும் என்பதே மறையாக்கத்தின் பொருள்.
பயனாளர்களின் தகவலைக் கொண்டு குறிப்பாக என்ன செய்யப்படுகிறது என்பது குறித்தும், வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் வாட்ஸ் அப் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும் அதிக அளவிலான தகவலை இந்த புதிய தனியுரிமை கொள்கை கொண்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வாட்சப்புக்கு விதிக்கப்பட்ட அபராதம், பல ஆண்டுகளாக நடந்த விசாரணையின் விளைவாகும். போதிய வெளிப்படைத்தன்மையுடன் பயனர் தகவலை இந்த சமூக வலைத்தளம் ஜம்பவான் கையாளுகிறதா என்பதே இந்த விசாரணை ஆகும்.
மற்ற பகுதிகளை தவிர்த்து, சில பகுதிகளில் ஐரிஷ் டி.பி.சி (DPC), வாட்சப் நிறுவனத்திற்கு எதிராக கண்டுப்பிடித்தது. இதன்மூலம், 30 - 50 மில்லியன் யூரோ அபராதம் முன்மொழிந்தது.
ஆனால், அதன் செயல்முறையின் ஒரு பகுதியாக, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கட்டுப்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த தொகையை மறு மதிப்பீடு செய்தது.
அமேசான் நிறுவனத்திற்கு மட்டுமே இதுவரை பெரும் ஜி.டி.பி.ஆர் (GDPR) அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் தொடர்ந்து இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. தனது பயனர்களுக்கு தேவையான தகவல்களை எப்போதும் அந்நிறுவனம் வழங்குவதாக நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- எஸ்ஐ பூமிநாதன் கொலை: இரு சிறார்கள் உள்பட மூன்று பேர் கைது - என்ன நடந்தது?
- “வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு காரணம் பஞ்சாப், உ.பி மாநில தேர்தல்கள்தான்”: பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம்
- அதிக நேரம் தூங்கினால் உடல் எடையை குறைக்க முடியுமா?
- அமேசான் காடுகள்: 13,235 சதுர கிமீ வனம் அழிப்பு - 15 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம் இது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்































