You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மக்களவைத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம்

இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நிலவரம் தொடர்பான தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு - 72.09% வாக்குகள் பதிவு

  2. இந்திய பொருளாதார வளர்ச்சி, மோதி பிரசாரம் பற்றி சீனா கூறுவது என்ன?, இந்திய பொருளாதார வளர்ச்சி, மோதி பிரசாரம் பற்றி சீனா என்ன சொல்கிறது?

    இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை, பொருளாதாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி மற்றும் தெற்கு ஆசியாவில் குறைந்து வரும் இந்தியாவின் செல்வாக்கு ஆகியவை குறித்து பல கோணங்களிலும் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு வருகிறது.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அரசு விளம்பரப்படுத்தும் அளவுக்கு பிரகாசமானதாக இல்லை என்று நிபுணர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி சீன அரசு செய்தி முகமையான ஸின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

    மோதியின் பிரசாரம் இந்து தேசியவாத தொனியில் இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியிருப்பதாகவும் ஸின்ஹூவா குறிப்பிட்டுள்ளது.

    இந்தியா - சீனா எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்க பிரதமர் மோதி அழைப்பு விடுத்திருப்பதை குறிப்பிட்டு, சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவின் பக்கச்சார்பான நிலைப்பாடு காரணமான இந்தியா - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்திருந்த வேளையில், இந்திய தேர்தலுக்கு முன்பாக மோதி அந்த கருத்துகளை தெரிவித்ததாக தி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

  3. திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் பாஜக- விசிகவினர் மோதல் - என்ன நடந்தது?, சிதம்பரம் தொகுதியில் பாஜக- விசிகவினர் மோதலால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதம்

    சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அருகே பாஜக - விசிக தொண்டர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்கபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே, பா.ஜ‌க வை சேர்ந்த அருண் என்பவர் அங்குள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திரும்பி வந்துள்ளார்.

    அப்பொழுது பள்ளி முன்பு அதே ஊரைச் சேர்ந்த அஜித், செல்வகுமார் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் வெளியே அனுப்புமாறு காவரிடம் அருண் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து வெளியே வந்த அஜித், செல்வகுமார் ஆகிய இருவரும் அருணிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் அருண் காயமடைந்தார். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த மூன்று பேருமே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த மோதலால் காலை 7 மணிக்கு திட்டமிட்டபடி வாக்குப்பதிவை தொடங்க முடியவில்லை. சுமார் ஒரு மணிநேர தாமதத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி, அமைதியாக நடைபெற்று வருகின்றது

  4. வாக்குச்சாவடியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய நடிகர் சூரி - வாக்களிக்க முடியாதது ஏன்?, வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்களிக்க முடியாமல் நடிகர் சூரி ஏமாற்றம்

    வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி - என்ன நடந்தது? சென்னையில் மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் சூரி வாக்கு செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    நடிகர் சூரி சென்னையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மனைவியுடன் வாக்களிக்கச் சென்றார். அங்கே சென்ற பிறகுதான், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே வாக்களித்தார். வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய நடிகர் சூரி, அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

    அதில், "இதுவரை எல்லா தேர்தல்களிலும் தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றி வந்துள்ளேன். அதேபோல்தான் இந்த முறையும் வாக்களிக்க வந்தேன். ஆனால், என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தேன். இது யாருடைய தவறு என்று தெரியவில்லை.

    வாக்களிக்க முடியாத ஏமாற்றத்தில் இருக்கும் நான், நீங்கள் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை என்னால் வாக்களிக்க முடியும் என்று நம்புகிறேன்." என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

  5. இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு

  6. தென்காசியில் வெறிச்சோடிக் காணப்பட்ட வாக்குச்சாவடி

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

    அக்கிராமத்தில் மொத்தம் 1,045 ஓட்டுகள் உள்ள நிலையில், இதுவரை அங்கு 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

  7. அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்த கிருஷ்ணகிரி கிராம மக்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த மேடு அக்ரஹாரம் பஞ்சாயத்தில் உள்ள கடவரஹல்லி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பலமுறை கேட்டும் அரசாங்கம் வசதிகளைச் செய்து தரவில்லை என்றும் கூறி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கள் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால், அருகிலிருக்கும் நகரத்துக்குச் செல்ல 5கி.மீ. தொலைவு நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளதாக அக்கிராமத்தின் மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லையென்றும், பல முறை அவற்றைச் செய்துதரக் கேட்டும் அரசு செவி சாயிக்காததால் கடவரஹள்ளியில் உள்ள 520 வாக்காளர்களும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

    இதனை அறிந்த கலால் டி.எஸ்.பி சிவலிங்கம் மற்றும் காவல் துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும், உடன்படாமல் அம்மக்கள் வாக்களிக்கவில்லை.

  8. எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கா? - சென்னை வாக்குச்சாவடியில் சர்ச்சை, எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கா? - சென்னை வாக்குச்சாவடியில் சர்ச்சை

    சென்னையில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே பதிவானதாக சர்ச்சை எழுந்தது.

    சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 150வது வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு எதிரே உள்ள விளக்கு எரிவதாக வாக்காளர் ஒருவர் புகார் அளித்தார்.

    இதையடுத்து, திமுக, அதிமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் தர்ணாவில் ஈடுப்பட்டனர். இதற்குப் பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர் கூறியபடி எதுவும் நடக்கவில்லை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பொய்யான தகவல் அளித்ததாக அந்த குறிப்பிட்ட வாக்காளரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  9. தமிழகத்தில் மதியம் 1:00 மணிவரை 40.05% வாக்குப்பதிவு

    தமிழகத்தில் மதியம் 1:00 மணிவரை சராசரியாக 40.05% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

    அதிகபட்சமாக தர்மபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

    அதைதொடர்ந்து 44% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சி இரண்டாம் இடத்தில் உள்ளது.

    மாநிலத்திலேயே குறைவான வாக்குகள் மத்திய சென்னை தொகுதியில் பதிவாகியிருக்கின்றன, அங்கு 32.31% வாக்குகளே பதிவாகியுள்ளன. வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்று, அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

  10. மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி கிராம மக்கள்

    தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் கழிவு மீன் நிறுவனங்கள் தங்கள் கழிவுகளை அருகே உள்ள குளங்களில் கொட்டுவதாலும் விளைநிலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் இரவு நேரங்களில் திறந்து விடுவதாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு அந்த பகுதியில் உள்ள ஆடு மாடு உள்ளிட்டவை அந்த கழிவுகளை தின்று இறக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

    இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

  11. வேங்கைவயல் கிராம மக்கள் புறக்கணிப்பை கைவிட்டு கடைசி நேரத்தில் வாக்களிப்பு, வேங்கைவயல் கிராம மக்கள் புறக்கணிப்பை கைவிட்டு கடைசி நேரத்தில் வாக்களித்தனர்.

    வேங்கை வயல் கிராம மக்கள் கடைசி நேரத்தில் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர். அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 62 வாக்குகளே பதிவாயின.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் 2022 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இதனைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

    மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் 561 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக இறையூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை மக்கள் அறிவித்திருந்ததால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி இருந்தது. வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.

    இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக, கடைசி நேரத்தில், அதாவது வாக்குப்பதிவு முடிவடைய கால் மணி நேரமே இருந்த போது அவர்கள் வாக்களிக்க சம்மதித்தனர். இதையடுத்து, 5.45 மணிக்கு அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மணியளவில் வாக்குப்பதிவு நேரம் முடிவுக்கு வந்ததால், அப்போது அங்கே இருந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.

    அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 62 வாக்குகள் பதிவாயின. மொத்தமுள்ள 561 வாக்காளர்கள் 499 பேர் வாக்களிக்க வரவில்லை. முடிவில், பதிவான 62 வாக்குகளுடன் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

  12. சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த இரண்டு முதியவர்கள் மரணம்

    சேலம் மாவட்டத்தின் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்த இரண்டு முதியவர்கள் இறந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சின்னப்பொன்னு (77) என்பவரை அவரது உறவினர்கள் தள்ளுவண்டியில் அமர வைத்து வாக்களிக்க அழைத்து வந்தனர்.

    விரலில் மை வைத்தபின் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அழைத்துச் செல்லும் போது அம்மூதாட்டி திடிரென மயங்கி விழுந்து வாக்குச்சாவடி மையத்திலே உயிரிழந்தார்,

    இதுகுறித்து தகவலறிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது.

    மற்றொரு சம்பவத்தில் சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சூரமங்கலம் பகுதியை சார்ந்த பழனிச்சாமி ( 65) என்பவர் வாக்களிக்க வந்த போது உயிரிழந்தார்.

  13. மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 11:00 மணி வரை 24.37% வாக்குப்பதிவு

    தமிழகத்தில் காலை 11:00 மணி வரை 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை மாநிலத்தில் 12.55% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு மணி நேரத்தில் மேலும் 12% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது வரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக, திண்டுக்கல்லில் 26.34%, நாமக்கல்லில் 26.07%, கரூரில் 26.07%, சேலத்தில் 25. 97% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  14. ரயில்வே தரைப்பாலம் அமைக்கக்கோரி தேர்தலைப் புறக்கணித்த தர்மபுரி கிராம மக்கள்

    தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர்.

    தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக இக்கிராமத்தில் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்த கிராம மக்களும் இன்று (வெள்ளி, ஏப்ரல் 19) நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

    இதனால் இக்கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கிராமத்தில் ஆண் வாக்காளர்கள் 768 பேர், பெண் வாக்காளர்கள் 668 பேர் என மொத்தம் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. தற்போது வரை எந்த ஒரு தேர்தல் அதிகாரியும் கிராமத்துக்கு வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  15. திருமண உடையில் வாக்களித்த தம்பதி

    இன்று தேர்தல் நடக்கும் பல்வேறு மாநிலங்களில் ஒன்றான வட இந்திய மாநிலமான உத்தராகண்ட் மாநிலத்தில், திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகள் திருமண உடையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

  16. தேர்தலைப் புறக்கணித்த பரந்தூர் கிராமம்

    சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

    நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர்.

    இந்தக் கிராமத்தினரை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய பரந்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    "எங்கள் ஊரில் மொத்தம் 1,375 வாக்குகள் உள்ளன. தமிழ்நாடு அரசுக்கு எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று வாக்களிக்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அரசு வேலையில் உள்ள ஒரு சிலரை தவிர வேறு யாரும் இதுவரை வாக்களிக்கவில்லை," என்று பாலசுப்பிரமணியன் கூறினார்.

    இந்த விஷயம் குறித்து பிபிசி தமிழின் விரிவான கள ஆய்வை இங்கே வாசிக்கலாம்.

  17. தமிழகத்தில் காலை 9:00 மணிவரை 12.55% வாக்குப்பதிவு

    தமிழகத்தில் காலை 9:00 மணி வரை 12.55% வாக்குகள் பதிவாகியுள்ள.

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19) காலை 7:00 மணிக்கு தொடங்கியது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், அஜித் குமார், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் என பலரும் காலையிலேயே வாக்களித்துவிட்டனர்.

    தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அடுத்தபடியாக மேற்கு மாவட்டங்களில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. தருமபுரியில் 15.04%, சேலத்தில் 14.79%, கரூரில் 14.41%, நாமக்கலில் 14.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    வழக்கமாக சென்னை மாவட்டத்தில் தான் குறைவான வாக்குகள் பதிவாகும். அதே போல, கடந்த இரண்டு மணி நேரத்தில் குறைந்தபட்சமாக பதிவான மூன்று தொகுதிகளும் சென்னையில் உள்ளவை. மத்திய சென்னையில் 8.59%, வட சென்னையில் 9.73%, தென் சென்னையில் 10.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    வாக்குப்பதிவு முடிவுற ஐந்து மணி நேரங்களுக்கும் அதிகமாக இருப்பதால் இந்த நிலைமைகள் மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு.

  18. வாக்குச்சாவடி மையங்களில் ‘செல்ஃபி பூத்’கள்

    தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்த பின் நின்று ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான புகைப்பட பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் இளைஞர்கள், முதியவர்கள், பிரபலங்கள் என பலரும் நின்று புகைப்படம் எடுத்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

    வாக்குச்சாவடி மையங்களில் விளம்பரப்படுத்தியிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்து தேர்தல் குறித்த விழிப்புணர்வு வினாடிவினா போட்டியிலும் வாக்காளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

  19. பொதுத்தேர்தல் - வாக்களிக்க ஆர்வத்துடன் வரும் வாக்காளர்களின் புகைப்படத் தொகுப்பு

    ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு செய்ய 7 மணிக்கு முன்னதாகவே வாக்குசாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்த பெண்கள்.

    சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தில் ஆர்வமுடன் கை குழந்தையையுடன் வந்து வாக்களித் பெண்.

    கோவை தொகுதியில் முதல் முறையாக வாக்குசெலுத்த இளம் வாக்காளர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் முதல்முறை வாக்காளர்கள் ஒட்டு போட்ட காலை முதலே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த பெண் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    சிவகங்கையில் தனது பேரனுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த பாட்டி.

  20. கோவையில் திமுக, அதிமுக ரூ.1,000கோடி செலவிட்டுள்ளனர்: அண்ணாமலை

    கோவையில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று கரூரில் வாக்களித்த பின் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். அதன்பின் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், தி.மு.க பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என்று நினைத்துள்ளதாகவும், கோவையில் யாரேனும் ஒருவர் தனது ஓட்டுக்குப் பா.ஜ.க பணம் கொடுத்தாகச் சொன்னால் அந்த நிமிடம் அரசியல் விட்டு விலகிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

    மேலும் பேசிய அவர், கோவையில் திமுக, அதிமுக இருவரும் ரூ.1,000கோடி செலவிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.