You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
நாடாளுமன்ற தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?
அனைவரும் வாக்களிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குச்சாவடிகளில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 16.5 கோடி மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தல்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஜனநாயகத்தின் வெளிப்பாடு. இதற்காக, வாக்குப்பதிவு எளிமையாகவும் தடைகள் இல்லாமலும் நடைபெற, இந்திய தேர்தல் ஆணையமும் அதன் பல லட்சம் அதிகாரிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளனர்.
குடிநீர், கழிப்பறை, சாய்வுதளம் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற வசதிகள் வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு (39), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1) மற்றும் லட்சத்தீவு (1) ஆகிய தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
யுக்ரேன் போர்: சொந்த வீரர்களையே கொடூரமாக பலி கொடுக்கும் ரஷ்யா - பிபிசி ஆய்வில் உறுதி
இரான் சிறைபிடித்த கப்பலில் இருந்து இந்தியா திரும்பிய பெண் பணியாளர்
இரானில் பிடிபட்ட எம்.எஸ்.சி ஏரீஸ் என்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் இந்தியா திரும்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி இந்தியா நோக்கி வந்த எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்குக் கப்பலை இரான் கடற்படை கைப்பற்றியது. அக்கப்பலில் பணியாளர்கள் 25 பேர் இருந்தனர்.
இவர்களில் 17 பேர் இந்திய குடிமக்கள். இரானில் கைப்பற்றப்பட்ட கப்பலில் பணிபுரிந்த இந்தியர்களின் குடும்பத்தினர், அவர்களை விரைவில் விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை கப்பலில் இருந்த இந்தியர்களை அவர்களது குடும்பத்தினருடன் பேச இரான் அனுமதித்தது. இஸ்ரேலுடன் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இரான் இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்தக் கப்பலின் உரிமையாளர் இஸ்ரேலிய தொழிலதிபர்.
வெளியுறவு அமைச்சகம் என்ன சொன்னது?
சரக்குக் கப்பலில் இன்னும் இந்தியர்கள் 16 பேர் இருப்பது குறித்து, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் பேசி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கப்பலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனுடன் பேசியதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு மாதிரி சோதனையில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகளா? - தேர்தல் ஆணையம் விளக்கம்
கட்டுரை தகவல் - எழுதியவர், உமாங் போட்டார்
- பதவி, சட்ட விவகாரங்களுக்கான செய்தியாளர்
கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி சோதனையின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு கிடைத்ததாக வெளியான தகவல் தவறானது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி தவறானது என்றும் இதுதொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான மனுதாரர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், பிரசாந்த் பூஷன் கேரளாவில் ஏப்ரல் 17ஆம் தேதி 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஒருமுறை பட்டனை அழுத்தும்போது பாஜகவுக்கு கூடுதல் ஒப்புகை சீட்டுகள் காண்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட செய்திகளைக் குறிப்பிட்டார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு அமர்வு மீண்டும் கூடியபோது, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி நிதிஷ் குமார் வியாஸ், “இந்தச் செய்திகள் பொய்யானவை” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் நீதிமன்றத்தில், “இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சரிபார்த்துள்ளோம். இந்தச் செய்தி தவறானது என்று தெரிகிறது, நாங்கள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பிப்போம்,” என்றார்.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி சோதனையில் பாஜகவுக்கு ஆதரவாக தவறுதலாக வாக்குகளைப் பதிவு செய்ததாக ஆன் மனோரமா செய்தி வெளியிட்டிருந்தது.
குற்றாலம்: வாக்குப் பதிவையொட்டி வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என காவல்துறையினர் சோதனை
மக்களவைத் தேர்தலையொட்டி தென்காசியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்து திடீர் சோதனையை மேற்கொண்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தங்களது தீவிர பிரசாரத்தை நிறைவு செய்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள், ஊர்வலம் மற்றும் பிரசாரத்திற்காக வந்த கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் மண்டபம், விடுதிகள் (Lodges) போன்றவற்றில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தென்காசி நகர் பகுதி மற்றும் குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையிலான காவல்துறையினர் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்து இரவு நேரத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டார். மேலும், வெளியூர் நபர்களை தேர்தல் நடத்தை விதிமுறைப்படி தொகுதியை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.
இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் இந்த முதல் கட்டத்திலேயே வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தெரிவித்தார்
"தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறவிருக்கிறது. மாநிலத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி பேர் ஆண்கள். 3.17 கோடி பேர் பெண்கள். 8,467 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 4,61,771. 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,002. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 190 கம்பனி மத்திய ஆயுத காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குப் பதிவு முடிந்த பிறகு 15 கம்பனி வீரர்கள் மட்டும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்துவிட, பிறர் திரும்பிச் செல்வார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும் 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை நடந்த சோதனைகளில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு வரை ரொக்கமாக 173.85 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. 6.67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1.13 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,083 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த உலோகங்கள் (தங்கம், வெள்ளி) பிடிபட்டுள்ளன.
மார்ச் 27ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 26,50,943 பேருக்குப் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் பிற அடையாள அட்டைகளையும் வாக்களிக்கப் பயன்படுத்த முடியும்.
இந்தத் தேர்தலில் காவல் பணிகளுக்காக சுமார் ஒரு லட்சம் காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முன்னாள் ராணுவத்தினர் 12,220 பேரும் ஓய்வுபெற்ற காவலர்கள் 1,931 பேரும் கர்நாடகா, ஆந்திரா காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் 3,500 பேரும் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவர்கள் தவிர, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையின 2,500 பேரும் தெலுங்கானாவை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் 2000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் 1,58,568 வாக்குப் பதிவு இயந்திரங்களும் 86,157 கன்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்படும்.
விளவங்கோடு இடைத் தேர்தலில் 325 வாக்குப் பதிவு இயந்திரங்களும் 326 கட்டுப்பாட்டு மையங்களும் பயன்படுத்தப்படும். மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்களோடு, சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகளோ வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச் சாவடி, முழுமையாக பெண் அலுவலர்களால் இயக்கப்படும். மாநிலம் முழுவதிலும் உள்ள வாக்குப் பதிவு அலுவலர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாகவே இருப்பார்கள்.
தேர்தல் காலகட்டத்தில் பெரும் தொகையை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் எல்லா இடங்களிலும் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை நீடிக்கும். இருந்தபோதும், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இரான் தாக்குதல்: இஸ்ரேலின் தற்காப்புக்கு முஸ்லிம் நாடான ஜோர்டான் வந்ததன் பின்னணி
கோவையில் பா.ஜ.க-வினரிடம் இருந்து ரூ.81,000 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு (புதன்கிழமை ஏப்ரல் 17) தகவல் வந்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படை குழு சோதனையில் ஈடுபட்டனர்.
பூலுவபட்டியில் ஒரு டீக்கடையில் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை பறக்கும் படையினர் நள்ளிரவு பிடித்தனர்.
தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜக-வின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.81,000 பணத்தை கைப்பற்றி, பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.
அவர்களிடமிருந்து வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் மீட்பது எப்படி? முழுமையான தகவல் இங்கே.
‘ஐ.நா. சபை பாதுகாப்பு அவையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கிறது’
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் கொண்டுவருவதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செய்தி செயலாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் இதுபற்றிப் பேசிய டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், இந்தியாவை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்.
இந்த கோரிக்கைக்கு வேதாந்த் படேல் பதிலளித்துள்ளார்.
வேதாந்த் படேல், “அதிபர் இதைப்பற்றிப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போது இதைப்பற்றிச் சொல்வதற்கு அதிகம் இல்லை. ஆனால் சீர்திருத்தத்தின் அவசியத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்றார்.
அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராகாதது அபத்தமானது என்று மஸ்க் கூறியிருந்தார்.
இந்தியாவைத் தவிர, ஆப்பிரிக்காவிற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தை மஸ்க் கோரியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு இதைப்பற்றி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த மஸ்க், பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
டியூட்டி ஃப்ரீ உணவால் பிழைத்திருக்கிறோம்: துபாய் விமான நிலையங்களில் சிக்கிய பயணிகள்
துபாயின் முக்கிய விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள், ‘உணவு வேண்டி தவிப்பதாகவும்’ குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
துபாய் விமான நிலையத்திலிருந்து பிபிசி-யிடம் பேசிய பயணிகள், துபாயின் இரண்டு பெரிய சர்வதேச விமான நிலையங்களில் அவர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு மிகக்குறைந்த அள்வே தகவல்களும் உதவியும் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
புதன்கிழமை (ஏப்ரல் 17) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் `மற்றும் அக்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் எலிசபெத் டெவைன் தம்பதியினர், சிட்னியில் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது, விமானம் திசைதிருப்பப்பட்டதால், அவர்களது ஆறு மாத மகனுடன் துபாய் மத்திய விமான நிலையத்தில் சிக்கியிருக்கின்றனர்.
அவர்கள் ‘டியூட்டி ஃப்ரீ’ உணவை உண்டு வாழ்வதாகவும், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள்.
கைக்குழந்தைகளுக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் இருக்கும் விமான நிலையத்தில் பல நூறு பேர் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியிருப்பவர்கள் தரும் தகவலின்படி பயணிகள் கூச்சலிட்டபடியும், பிரச்னை செய்தபடியும் இருக்கின்றனர். மக்கள் காத்திருப்பு அறைகளில் படுத்து உறங்குகின்றனர். தரையெங்கும் உனவுப் பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.
பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்
வெப்ப அலை: கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
லண்டன் பள்ளியில் தொழுகைக்கு தடை - மாணவரின் முறையீடு நீதிமன்றத்தில் நிராகரிப்பு, லண்டன் பள்ளியில் தொழுகை நடத்த தடை - மாணவரின் முறையீடு நீதிமன்றத்தில் நிராகரிப்பு
லண்டன் பள்ளி ஒன்றில் பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வெம்ப்லே பகுதியில் உள்ள மைக்கேலா பள்ளி மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
பள்ளியில் தொழுகை செய்ய அனுமதிப்பது மாணவர்கள் மத்தியில் மதவேறுப்பாட்டை ஏற்படுத்தும் என்று பள்ளி சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி தாமஸ் லிண்டன் தனது 83 பக்க தீர்ப்பில், "வழக்குத் தொடுத்த மாணவர், பள்ளியில் சேரும்போதே, தனது மத சம்பந்தமான அடையாளங்களை வெளிப்படுத்த மாட்டேன் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்." என குறிப்பிட்டுள்ளார்.
ஃப்ரீ பள்ளியின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான கேத்தரின் பீர்பால் சிங், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசுகையில், ``இது அனைத்து பள்ளிகளுக்கும் கிடைத்த வெற்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
தொழுகை செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்து, மேல்முறையீடு செய்து அதில் தோல்வியுற்றதை தொடர்ந்து, பள்ளியிலேயே தங்கி, GCSE தேர்வுகளில் கவனம் செலுத்தி வருவதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.
“நான் தோல்வியுற்றேன்” என்று குறிப்பிட்ட மாணவர், தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம், ``நான் செய்தது சரி என்றே நினைக்கிறேன். நான் மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக எனக்கும் என் மதத்திற்கும் உண்மையாக இருந்தேன்.’’ என்றார்.
தமிழ்நாட்டில் தொகுதிகளை வெல்லும் அளவுக்கு பாஜக வலுப்பெற்றுள்ளதா?
இரான் சிறைபிடித்த கப்பலில் உள்ள 4 தமிழர்கள் யார்? தற்போதைய நிலை என்ன?
இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன், ‘வரும் நாட்களில்’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், அந்த அமைப்பும் இதே நோக்கில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.இரானின் ஏவுகணைத் திட்டத்திற்குத் தடைவிதிக்குமாறு இஸ்ரேல் தனது நட்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் மீது ஐக்கிய நாடுகளின் தடை இருந்தது. அது கடந்த வருடம் அக்டோபரில் காலாவதியானது. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அந்த ஒப்பந்தம் இருந்தது.
இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இரான் மீது தங்கள் பொருளாதாரத் தடைகளைத் தக்கவைத்து, மேலும் முதிய தடைகளைச் சேர்த்தன.
இரானின் சமீபத்திய தாக்குதலுக்குக் கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி திங்களன்று (ஏப்ரல் 15) கூறினார்.
இரானின் 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலுடன் அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து வழியிலேயே தாக்கி அழித்தது எப்படி? முழு தகவல்கள் இங்கே.
யுபிஎஸ்சி நேர்காணலுக்கு முன் புற்றுநோயால் இறந்த தாய், இரண்டாம் இடம் பிடித்த மகன்
யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.இம்முறை, ஒடிஷாவைச் சேர்ந்த 24 வயது போட்டியாளரான அனிமேஷ் பிரதான் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவர் தனது முதல் முயற்சியிலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.அவர் குறித்து செய்தி வெளியொட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அனிமேஷ் பிரதான் யுபிஎஸ்சி நேர்காணலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் புற்றுநோயால் இறந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறது.தனது பொறுமை மற்றும் உறுதிப்பாடு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க தனக்கு உதவியதாக அனிமேஷ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.“நான் தேர்வுக்குத் தயாராவதற்கு என் தாயார் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் அவருக்காகத்தான் குடிமைப் பணிகள் தேர்வுக்குப் படிக்க விரும்பினேன்,” என்றார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் அனிமேஷ் மேலும் கூறுகையில், "அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் தாந்து கடைசி நாட்களில் புற்றுநோயுடன் போராடினார். என் அம்மா என்னைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்பதற்காக நான் கூடிய விரைவில் யுபிஎஸ்சி-யில் தேர்ச்சி பெற விரும்பினேன்,” என்றார்.அனிமேஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அதாவது என்ஐடி ரூர்கேலாவில் பி.டெக் படித்துள்ளார்.
காலநிலை நெருக்கடி: அரசியல் கட்சிகளிடம் எண்ணூர் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?