You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல்கள் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சமூக வலைதளங்களை கண்காணிக்க உண்மை சரிபார்ப்புப் பிரிவு - மத்திய அரசு அறிவிப்பு

    சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் கண்காணிக்க, உண்மைச் சரிபார்ப்பு பிரிவை உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு உருவாக்கப்படுகிறது.

    "தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 3 இன் துணை விதி (1) இன் உட்பிரிவு (பி) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தவொரு உண்மைச் சரிபார்ப்பையும் செய்ய முடியும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் கீழ் உள்ள பிரிவு, வணிகம் தொடர்பாக மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவாகும்." என்கிறது அந்த அறிவிப்பு.

    இந்த பிரிவை அமைப்பதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனு கடந்த, மார்ச் 13-ம் தேதியன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, உண்மை கண்டறியும் பிரிவை அமைக்க அரசுக்கு சுதந்திரம் அளித்துள்ளது.

  2. கோவை தொகுதியில் போட்டியிட திமுக உறுதி காட்டுவதன் பின்னணி என்ன?

  3. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை?

    நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தன்னுடன் இணைந்து போட்டியிடும் கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்து வருகிறது.

    இன்று காலை புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து தொகுதி பங்கீடும் இறுதியாகியுள்ளது.

    அதிமுக - தேமுதிக இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணி சார்பாக மத்திய சென்னை, தஞ்சாவூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும்.

    கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "2011இல் உருவான வெற்றி கூட்டணி மீண்டும் உருவாகியிருக்கிறது. 2011 வரலாறு மீண்டும் திரும்பும்," எனத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றார்.

  4. பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் இதற்கான அறிவிப்பை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டார்.

    அப்போது பேசிய டி.டி.வி. தினகரன், "பாஜக கூட்டணியில் எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகள் எவை என்பதை, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானவுடன் தெரிவிப்போம். எங்களுக்கு ஒதுக்கிய 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்," என்று தெரிவித்தார்.

    அத்துடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை டி.டி.வி. தினகரன் தொடங்குவது குறித்த அறிவிப்பையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி முதல், அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி. தினகரன் தேனியில் தனது பரப்புரை தொடங்கவுள்ளார்.

  5. "கழிவறை பயன்படுத்த பணம் இல்லாததால், இரவில் தண்ணீர் குடிக்க மாட்டேன்" - முதல்முறை பெண் வாக்காளர்

    நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் ஆயிஷா ஷேக் முதன்முறையாக வாக்கு செலுத்தவுள்ளார். இவர், கிழக்கு மும்பையின் புறநகரில் குறைவான வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் கோவண்டி எனும் பகுதியில் 10-க்கு பத்து அடியே கொண்ட அறையில் வசிக்கிறார். அவருடைய வீட்டில் கழிவறை இல்லை. அப்பகுதியில் உள்ள பொது கழிவறையையே அவர் பயன்படுத்துகிறார்.

  6. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு

    நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியை அதிமுக வழங்கியுள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்து இட்டனர்.

    அதே போல அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு இடங்களை இறுதி செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தம் கைழுத்தானது. அதன் அடிப்படையில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். தேமுதிக போட்டியிடும் இந்த தொகுதிகள் குறித்த விவரம் இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  7. வேட்புமனு தாக்கல் செய்ய சவப்பெட்டியுடன் வந்தவர்

    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய, கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு நூர் முகமது என்பவர் சவப்பெட்டியுடன் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

    மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம் மனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர், கடந்த பல ஆண்டுகளாக தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வருகிறார்.

    இதுவரை 42 முறை அவர் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் உட்பட பல்வேறு தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு உள்ளார்.

    ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்வது மற்றும் பல்வேறு வேடங்கள் அணிந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என அவர் யுக்திகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மக்களவை தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று மனு தாக்கல் செய்வதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

    அப்போது நாட்டில் ’ஜனநாயகம் இறந்துவிட்டது’ என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனு தாக்கல் செய்ய அவர் வந்தார்.

    ஆட்சியர் அலுவலகத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அவரை தடுத்து நிறுத்திய போலீஸார்,. சவப்பெட்டியுடன் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தொடர்ந்து காரில் இருந்து சவப்பெட்டியை இறக்குவதற்கு முன்பே, அதனை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    தொடர்ந்து அவரை மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு வருமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.

  8. திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

    சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுகவில் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தர் அறிக்கையை வெளியிட, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி அந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார்.

    திமுகவின் தேர்தல் அறிக்கையில், தாயகம் திரும்பிய இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெறுள்ளன.

    சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை

    • திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி, ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
    • மாநிலங்களுக்கு உண்மையான சுயாட்சி அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
    • மாநில ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
    • தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
    • மீண்டும் ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
    • புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
    • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்

    • மத்திய அரசுப் பணிகளில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மத்திய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்த நடவடிக்கை.
    • அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
    • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், எழிலன் நாகநாதன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகளை மேற்கொண்டது.

  9. அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியல்கள் வெளியீடு

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக மற்றும் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிமுக 16 தொகுதிகளுக்கும், திமுக தான் போட்டியிடம் 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

  10. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் தகவல்களை உடனுக்குடன் தரும் பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.