இந்திய கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் பொறுப்பேற்பு

இந்திய கடற்படை தலைமைத் தளபதி பதவியில் இரண்டு ஆண்டுகளாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் ஓய்வு பெற்றதையடுத்து அந்த பதவிக்கு அட்மிரல் ஹரி குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நவம்பர் 30ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. நாடாளுமன்ற அமளி: கைகோர்த்த மோதி அணி - பிளவுபட்ட எதிர்கட்சிகள் - நடந்தது என்ன?

    இந்திய நாடாளுமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்கிழமை 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

    முந்தைய மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி இரண்டு நாட்களில் எதிர்கட்சிகளை சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி அவர்களை, நடப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காதவாறு இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

    இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டபோதும் அதை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

    அவரது நடவடிக்கையை நியாயப்படுத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவையின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    "மழைக்கால கூட்டத்தொடரில் நாங்கள் கண்கூடாகப் பார்த்த ஒழுங்கீனமான செயல்பாடு முன்னெப்போதும் இல்லாதது. சில எதிர்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டதுடன், விசில் அடித்தும் அமளியில் ஈடுபட்டனர். எம்பி ஒருவர் எல்இடி திரையை உடைக்க முயன்றார்," என்று பியூஷ் கோயல் கூறினார்.

    "மழைக்கால கூட்டத்தொடரின் போது சில எம்.பி.க்கள் பெண்கள் மார்ஷல்களை தாக்கினர். அவையின் புனிதத்தையும் கண்ணியத்தையும் காக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் அலுவலின்போது என்ன நடந்தது? இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  3. திருச்சியில் துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, ஜி. மணிவண்ணன், திருச்சி

    திருச்சியில் துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பவானி. இவர் திருவாரூர் மாவட்ட துணை ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியாற்றிய இடங்களில் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் உள்ள பவானியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பவானிக்கு சொந்தமானதாக கூறப்படும் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள வாளாடி பெட்ரோல் நிலையம், அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலை மற்றும் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சாலையில் உள்ள SVR மேல்நிலைப் பள்ளி போன்ற இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கோகுல் என்ற தனி வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், மேற்றொரு துணை ஆட்சியர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரவலான கவனத்தை ஈர்த்துள்து.

  4. முல்லை பெரியாறு: 142 அடியை எட்டிய நீர் மட்டம் - மகிழ்ச்சியில் விவசாயிகள், ஜி. மணிவண்ணன், திருச்சி

    முல்லை பெரியாறு
    படக்குறிப்பு, 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்

    உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு நான்காவது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியிருக்கிறது. இதனால் அந்த அணையின் நீர் வளத்தை நம்பியிருக்கும் தமிழக பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேனி,திண்டுக்கல், மதுரை,சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. அதன் நீர்மட்டம் இன்று அதிகாலை 3.55 மணி அளவில் நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது.

    அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பின்னர் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2014ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டிய போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டிய போது இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.55 மணிக்கு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதையடுத்து கேரள பகுதிக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் கேரளாவிற்கு திறக்கப்பட்டது.

    தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,875 கன அடியாக உள்ளது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,300 கனஅடி நீரும்,கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 2575 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியிருக்கிறது.

    இதனால் தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழக பொதுப்பணித் துறையினர் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் முகாமிட்டு அணை நீர்வரத்து மற்றும் வெளியேற்ற நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  5. ஒக்கி புயல் நினைவு தினம்: பாம்பன் மீனவர்கள் நினைவஞ்சலி, பிரபுராவ் ஆனந்தன்

    தமிழக கடலோர பகுதிகள்
    படக்குறிப்பு, ஒக்கி புயலால் இறந்தவர்களின் நினைவாக கடலோரத்தில் மலரஞ்சலி செலுத்திய பாம்பன் பகுதி மீனவர்கள்

    ஒக்கி புயல் பாதிப்பின் நான்காம் ஆண்டு நினைவு நாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    2017ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை ஒக்கி புயல் தாக்கியது. இதனால் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 149 மீனவர்கள் உட்பட 197 பேர் காணாமல் போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த புயல் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினம் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    அங்குள்ள மீனவ குடும்பத்தினர், உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிகழ்வில் பாம்பன் தீவு விசைப்படகு, மறலறும் நாட்டுபடகு மீனவர்கள், மீனவ பெண்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

    கடலில் காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க செயற்கைக்கோளுடன் இணைந்த நவீன தொடர்புக் கருவிகளை விசைப்படகுகள், நாட்டு படகுகளுக்கு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பேரிடர் காலங்களில் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் கடற்கரைப் பகுதியில் ஹெலிகாப்டரை தயார் நிலையில் நிறுத்தவும், அதிவேக நவீன விசைப்படகு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தினர்.

  6. சர்ச்சைக்கு மத்தியில், கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணிக்கு தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் நியமனம், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கையின் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டது.

    16 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த செயலணியில், தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

    கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என மூவின சமூகங்களும் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன.

    எனினும், ஜனாதிபதியினால் 16 பேரை கொண்டு நியமிக்கப்பட்ட செயலணியில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

    கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி செய்வுள்ளது.

    இவ்வாறான எதிர்ப்புகள் வலுப்பெற்று வந்த பின்னணியில், சுமார் ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்த நிலையில், இந்த செயலணிக்குள் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

    இந்த செயலணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த நில அளவையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எஸ்.பீ.தென்னக்கோன், அரர சேவையிலிருந்து ஓய்வுப் பெற்ற நிலையில், அந்த வெற்றிடத்தை நிரம்பும் வகையில் புதிய நில அளவையாளர் நாயகம் ஆரியரத்ன திஸாநாயக்க செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    அத்துடன், ஓய்வுப் பெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினராகவும், விரிவுரையாளர் முபிசால் அபுபக்கர் செயலணியின் முஸ்லிம் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை

    பட மூலாதாரம், GOVERNMENT OF SRILANKA

  7. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

    கொரோனா

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, மன்சூக் மாண்டவியா, இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    கொரோனா வைரஸின் புதிய திரிபு ஆக அறியப்படும் ஓமிக்ரான் வைரஸின் ஒரு பாதிப்பு கூட இந்தியாவில் இதுவரை பதிவாகவில்லை என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பேசிய மன்சூக் மாண்டவியா, "இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    "சந்தேகத்திற்கிடமானதாக நாங்கள் கருத்தும் அனைத்து பாதிப்புகளையும் நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். மரபணு வரிசைமுறையின் முழு செயல்முறையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கொரோனா நெருக்கடியின் போது நாம் நிறைய கற்றுக்கொண்டோம்,. இன்று நம்மிடம் பல வளங்கள் உள்ளன, ஆய்வகங்கள் உள்ளன. எந்த சூழ்நிலையையும் எங்களால் சமாளிக்க முடியும்” என்று மன்சூக் மாண்டவியா தெரிவித்தார்.

    ஒமிக்ரான் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

  8. இந்திய கடற்படை தலைமை தளபதியானார் அட்மிரல் ஆர். ஹரி குமார்

    இந்திய கடற்படை

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, அட்மிரல் ஆர். ஹரி குமார், இந்திய கடற்படை தலைமைத் தளபதி

    இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவி ஓய்வு பெறுவதையொட்டி அவரிடம் இருந்து புதிய பொறுப்பை ஹரி குமார் ஏற்றுக் கொண்டார்.

    தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் முன்பு மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதியாக ஹரி குமார் பணியாற்றினார்.

    1962ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்த ஹரி குமார், 1983ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்திய கடற்படை பணியில் சேர்ந்தார். தனது 38 வருட அனுபவத்தில் இந்திய கடலோர காவல் படையின் சி-01 கப்பல், இந்திய கடற்படைக்கு சொந்தமான நிஷாங்க், கோரா, ரன்வீர், விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றின் கமாண்டர் ஆக பதவி வகித்துள்ளார்.

    இந்திய கடற்படை தளபதி

    பட மூலாதாரம், ANI

  9. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், பரணிதரன், கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்