You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஆப்கானிஸ்தானில் தீவிரமாகும் இறுதிகட்ட மீட்பு பணிகள் - முக்கிய தகவல்கள்

பாகிஸ்தான் உடனான எல்லை வாயிலாக ஆப்கானியர்கள் தங்கள் தாய் நாட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    உங்களுக்கு இந்த இரவு இனிதாகட்டும்.

  2. ஆப்கானிஸ்தான் - இறுதிக்கட்ட மீட்பு பணிகள் தீவிரம்

    தங்கள் நாட்டின் குடிமக்களை ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் கடைசி விமானம் அங்கிருந்து கிளம்பி விட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இனி ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பி வரும் விமானங்கள் மூலம் பிரிட்டனின் வெளியுறவு அதிகாரிகளும் பாதுகாப்பு படையினருமே அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவும் தமது மீட்பு நடவடிக்கைகளை மிகவும் துரிதப்படுத்தி உள்ளது.

    எனினும் மேலதிக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் காபூல் விமான நிலையம் வருவதை தவிர்க்குமாறு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை ஐந்தாயிரம் ஆப்கானிஸ்தான் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றி உள்ளதாக அறிவித்துள்ளது இத்தாலி. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒன்றால் அதிகபட்ச ஆப்கானியர்கள் மீட்கப்பட்டது இதுதான் என்றும் இத்தாலி அரசு கூறுகிறது.

    பாகிஸ்தான் உடனான எல்லை வாயிலாக ஆப்கானியர்கள் தங்கள் தாய் நாட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  3. ஆப்கானிஸ்தான் -அமெரிக்க அதிபர் பைடன் அதிருப்தி

    "பேரழிவை ஏற்படுத்தும் தவறு இது. இதை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும்" சொந்த கட்சியில் அமெரிக்க அதிபர் பைடன் மேல் உள்ள அதிருப்தி குறித்த சிறப்புக் காணொளி.

  4. கொரோனா தடுப்பூசி - விழிப்புணர்வை ஏற்படுத்த 15 வயது மாணவர் முயற்சி, பிரபுராவ் ஆனந்தன்

    மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 15 வயது மாணவர் ஒருவர் 15 மணி நேரம் ஆணிப் படுக்கையில் நின்று வாள் சுழற்றி சாதனை முயற்சி செய்துள்ளார்.

    மதுரை கோசாகுளத்தை சேர்ந்த 15 வயது மாணவர் கிருத்தீஷ், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிலம்பம், வாள் சண்டை, மான் கொம்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால், தினமும் காலை, மாலை என இரு வேளை செய்த கடின பயிற்சியின் மூலமாக சிலம்ப உத்திகளில் தேர்ந்தார். கடந்த 2020 ஜனவரி 2ஆம் தேதி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து, நேற்று (ஆகஸ்டு 27) மாலை 5:45 மணி முதல் இன்று (ஆகஸ்டு 28) காலை 8:45 மணி வரை தொடர்ச்சியாக 15 மணி நேரம் வாள் சுழற்றி சாதனை படைக்க முயற்சி செய்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 12 ஆயிரத்து 800 ஆணிகள் கொண்ட ஆணி படுக்கை மீது நின்று கிருத்தீஷ் படைத்த இந்த சாதனைகள் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இந்த சாதனைக்காக தினமும் 4 மணி நேரம் ஆணி படுக்கை மீது நின்று வாள் சுழற்றி பயிற்சி மேற்கொண்ட கிருத்தீஷ், நேற்று தொடர்ச்சியாக 15 மணி நேரம் நின்றதாலும், தூக்கம், உணவு இன்றி சாதனை மேற்கொண்டதாலும் நடுவில் ஒரே ஒரு முறை 10 நிமிடம் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார்.

    பின்னர், அந்த 10 நிமிடத்தையும் கடைசியில் சமன் செய்துள்ளார். இந்த சாதனைக்கு பின்னர் அவரது கால் பாதங்களில், ஆணிகளால் ஏற்பட்ட அழுத்தத்தால் கடும் கால் வலி ஏற்பட்டுள்ளது. இருந்தும், இதை விட மேலான ஒரு சாதனையை செய்ய வேண்டும் என உறுதி பூண்டுள்ளார்.

    அடுத்து வேறொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 15 மணி நேரம் ஆணி படுக்கை மீது நின்று ஸ்கிப்பிங் செய்து சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளார்.

    "கின்னஸ் சாதனை முயற்சிக்கு அதிக செலவாகும் என்பதால், சோழன் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி எடுத்துள்ளதாகவும், மாணவன் கிருத்தீஷின் இந்த முயற்சியின் மூலம் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்" என அவரது பயிற்சியாளர் சண்முகவேல் தெரிவித்தார்.

  5. நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி

    நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார்.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

  6. ஆஃப்கன் விவகாரம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தைக் கூட்ட மலேசியாவின் பாரிசான் கூட்டணி வலியுறுத்தல், சதீஷ் பார்த்திபன்

    ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மலேசியா குரல் கொடுக்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் நடுநிலையான, உலக அரங்கில் மதிப்புமிக்க இஸ்லாமிய நாடாக விளங்கும் மலேசியாவுக்கு என சொந்த செல்வாக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    "கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள தாலிபன் குழுவுடன் மலேசியா முன்கூட்டியே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், தேவை ஏற்படும் பட்சத்தில், ஆஃப்கன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை எளிதில் கொண்டு சேர்க்க முடியும்."

    "மேலும், தாலிபன் அரசு அல்லது ஆட்சியை அங்கீகரிக்கும் விஷயத்தில் நீண்டகாலமாக மலேசியா கடைப்பிடித்து வரும் அனைத்துலக உறவுகள் தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகளை நமது அரசாங்கம் பின்பற்ற வேண்டும். தாலிபன்களுக்கு என இதில் தனிச் சலுகைகள், சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் இருக்கக்கூடாது," என்று பொதுச் செயலாளர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

    தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேசனல் கூட்டணியில், மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவர்களான மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் அம்னோ (UMNO), மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் (MCA) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  7. மதுரையில் பிரம்மாண்ட பாலம் இடிந்து விழுந்தது; ஒருவர் பலி, முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    மதுரையில் நத்தம் சாலையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவந்த உயர்மட்டப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த தொழிலாளர் ஒருவர் உயரிழந்தார்.

    மதுரையில் நத்தம் சாலையில், தல்லாகுளம் பகுதியிலிருந்து செட்டிகுளம் பகுதி வரை சுமார் 7.3 கி.மீ. தூரத்திற்கு மிக நீண்ட உயர்மட்டப் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 694 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் இந்தப் பாலத்தில் இரு தூண்களுக்கு இடையிலான பகுதி இன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் குமார் தலைமையில் மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.

    தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலங்களில் ஒன்றாக இந்தப் பாலம் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பாலம் கட்டப்பட்டுவருகிறது. இந்தப் பாலத்தைப் பொறுத்தவரை இரு தூண்களுக்கு இடையிலான பகுதிகள் துண்டுதுண்டாக வேறு இடத்தில் செய்யப்பட்டு, இங்கே கொண்டு வரப்பட்டு கம்பிகளால் இணைக்கப்படுகின்றன.

    இதற்கான இயந்திரம் இன்று சோதிக்கப்பட்டுவந்த நிலையில்தான் இந்த விபத்து நேரிட்டதாகச் சொல்லப்படுகிறது.

    "இந்த இணைப்புப் பணிகள் சரியாக நடந்ததா என்பதை சோதிக்க வேண்டும். தவிர தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்ததா என்பதையும் விசாரணை நடத்த வேண்டும்" என பிபிசியிடம் தெரிவித்தார் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

  8. கொழும்பில் 100 சதவீதம் டெல்டா திரிபு பரவுகிறது - பேராசிரியர் தகவல், ரஞ்சன் அருண்பிரசாத்

    கொழும்பில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

    இந்த வைரஸ் திரிபு சூப்பர் டெல்டாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

    பேராசிரியர் நீலிகா மலவகே மற்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

    இலங்கையில் பரவி வருவதாக சந்தேகிக்கப்படும் சூப்பர் டெல்டா பிறழ்வு குறித்து, தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இலங்கையில் இதுவரை பதிவான தினசரி கோவிட் மரணங்களிலேயே அதிகப்படியான மரணம் நேற்று முன்தினம், அதாவது ஆகஸ்ட் 26ல் பதிவானது. அன்றைய தினம் 214 பேர் கோவிட் நோயால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.

    அதற்கு முதல் நாள், 25ம் தேதி, கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இதுவரை 4,16,961 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 353,191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    அத்துடன், 8,371 கோவிட் உயிரிழப்புக்கள் நாட்டில் பதிவாகியுள்ள அதேவேளை, 55,399 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் இடை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கிறது.

    இதேவேளை, கடந்த 20ம் தேதி நள்ளிரவு 10 மணிக்கு அமல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, நாளை மறுதினம் (30) தளர்த்தப்படவிருந்த பின்னணியில், மீண்டும் ஊரடங்கு கால எல்லை எதிர்வரும் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    கோவிட் - 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த ஊரடங்கு கால எல்லை நீடிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

    இதேவேளை, கொழும்பில் நூறு சதவீதம் டெல்டா பிறழ்வு பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

    டெல்டாவின் மற்றுமொரு பிறழ்வே, கொழும்பில் பரவி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

    இவ்வாறு கொழும்பில் பரவி வரும் டெல்டா பிறழ்வானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

    இவ்வாறான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி, இலங்கையை செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை மூடினால், சுமார் 7500 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும், அக்டோபர் 3ம் தேதி வரை நாட்டை மூடினால் மேலதிகமாக 10,000 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

    நாட்டில் தற்போது கோவிட் வைரஸ் பரவியுள்ள விதத்தை அவதானிக்கும் போது, வைரஸை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

    மக்கள் மிகவும் பொறுப்புடன் நடத்துக்கொள்ளாத பட்சத்தில், நாட்டை மேலும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என விசேட மருத்துவர் டாக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகிறார்.

  9. சுருக்குமடி வலை விவகாரம்: புதுச்சேரியில் இரு மீனவ கிராமங்கள் இடையே மோதல்‌

    புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரத்தில் வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவ கிராம மக்கள் இடையே கடுமையாக மோதிக்கொள்ள முயன்றதால் பதற்றம் தோன்றியது.

    சுளுக்கிக் கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களோடு அவர்கள் மோதிக் கொள்ள முயன்றனர். ஆனால், காவல் துறையினர் விரைந்து சென்று இரு தரப்பு மீனவர்களையும் அப்புறப்படுத்தியதால், பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    புதுச்சேரி அடுத்த நல்லவாடு கிராம மீனவர்கள் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்று வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு கிராம மீனவர்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் தங்களது பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி, நல்லவாடு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருப்பதாக வீராம்பட்டினம் மீனவர்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து இரு கிராம மீனவர்களுக்கு இடையே இந்த விஷயம் சம்பந்தமாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    கரையில் இரு கிராம மீனவர்களும் இதைக் கேள்விப்பட்டதும், சுளுக்கி, கம்பு போன்ற ஆயுதங்களுடன் திரண்டு மோதி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

    தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களை கலைந்து போகச் செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இது பற்றி கூறிய ஜிந்தா, "இந்தப் பிரச்சனை தொடர்பாக இரு கிராம மக்களையும் அழைத்து மேலதிகாரிகள் முன்னிலையில் அமைதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம். இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.

  10. ஜஸ்டின் ட்ரூடோவை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள்

    கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொள்ள இருந்த தேர்தல் பொதுக்கூட்ட நிகழ்விடத்தை கோபம் மிகுந்த போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கொண்டதால், அந்த பொதுக் கூட்டத்தையே ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

    ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள போல்டன் என்னுமிடத்தில் தமது ஆதரவாளர்களிடையே உரையாற்ற இருந்தார் ட்ரூடோ.

    எனினும் போராட்டக்காரர்கள் அங்கு வந்த பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பே கனடா தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தார்.

    இந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியும் என்று அவர் நம்புகிறார். எனினும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் அரசின் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக நடக்கும் போராட்டங்கள் சமீப நாட்களாக தேர்தல் பரப்புரைகளை பாதித்து வருகின்றன.

  11. உலகின் வடகோடியில் உள்ள தீவு கண்டுபிடிப்பு

    கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வட கோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

    இதுவரை உலகிலேயே மிகவும் வட கோடியில் இருக்கும் தீவு என்று நம்பப்பட்ட ஊடாக் தீவில் மாதிரிகளை சேகரிப்பதற்காக ஜூலை மாதம் அறிவியலாளர்கள் இந்தத் தீவை சென்றடைந்தனர். ஊடாக் தீவு 1978இல் கண்டறியப்பட்டது.

    ஆனால் அந்த தீவுக்கு சென்ற பின்பு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய ஆர்டிக் தீவுகளின் நிலையை பதிவு செய்வதற்கான பொறுப்பில் உள்ள டென்மார்க் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள், ஊடாக் தீவிலிருந்து மேலும் 800 மீட்டர் வடக்கே இருப்பது தெரியவந்தது.

    60 X 30 மீட்டர் அளவுள்ள இந்த தீவுதான் வட துருவத்துக்கு மிகவும் அருகிலுள்ள நிலப்பகுதி என்று அவர்கள் கூறுகிறார்கள். கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும்.

  12. இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம்

    இந்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் "மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையை அழிப்பதாகவே இருக்கின்றன என்றே வேளாண் பெருங்குடி மக்கள் சொல்லிவருகிறார்கள். அதனை உணர்த்துவதற்காக கடந்த ஆண்டு முதல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    சுதந்திர இந்தியாவில் இவ்வளவு எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை; இவ்வளவு நீண்ட காலம் நீடித்ததும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது," என்று தெரிவித்தார்.

    தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்.

  13. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு நாள்களே ஆன நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ்-கே அமைப்பைச் சேர்ந்த ஒருவரை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றதாக கூறியிருக்கிறது அமெரிக்கா. முன்னதாக இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்களை "மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம். வேட்டையாடுவோம்" என்று நேற்று தெரிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

  14. டோக்யோ பாராலிம்பிக்: இறுதிப் போட்டியில் பவினா பட்டேல்

    டோக்யோ பாராலிம்பிக் போட்டியின் பெண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் பவினா பட்டேல், அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.

  15. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் பிற உலக நாடுகள் தொடர்பான இன்றைய செய்திகளை, நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.