இந்து சமய
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் என்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில்
அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதற்காக அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை
வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலின்போது, `கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும்' என்ற வாக்குறுதியை தி.மு.க அளித்திருந்தது. இதையொட்டி அதற்கான நடவடிக்கைகளை
அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த 12 ஆம் தேதி கோயில்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர்
செய்தியாளர்களிடம் பேசியவர்,
` தமிழில் அர்ச்சனை
செய்வதற்கான பயிற்சியை அனைத்து அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் ஏற்கெனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. தற்போது முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றபெயர்ப் பலகையை வைக்க உள்ளோம். அதில் அர்ச்சகர்களின் பெயர்கள், கைப்பேசி எண்கள் இடம்பெறும்' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ` அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் எடுக்க விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி
அளித்து அர்ச்சகராக்குவதற்கான முயற்சியை முதலமைச்சர் அனுமதியுடன் செயல்படுத்துவோம்' என்றார்.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர்
சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழாவில் பேசிய அவர்,
` தமிழ்நாட்டில்
அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது.முதல்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில்
அர்ச்சனை நடைபெறும். இதற்காக `அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட உள்ளது. முதலில் பெரிய கோயில்களில் இது
நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் சிறிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார்.