டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ANI
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூலை 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட நகர அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்ட இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் கெய்த், "200 விவசாயிகள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பேட்ஜுகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்று கூறினார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் ஒரே இயக்கமாக செயல்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதனால் எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஜந்தர் மந்தரில் தங்களின் போராட்டத்தை நடத்த டெல்லி காவல்துறையிடம் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி வழங்க எந்த எழுத்துபூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ஜூலை 22ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி தருவதாக அறிவித்தது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை நகர அரசு வழங்கியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு





