You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஜப்பானில் பெரும் நிலச்சரிவு – 20 பேரை காணவில்லை

மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை தரவுகளின் அடிப்படையில் இதைக் கண்டறிந்ததாகவும், டெல்டா கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பு மருந்து 65.2 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசிதமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தமிழ்ப் பேராசிரியர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார்

    திருச்சியில் உள்ள ஓர் தனியார் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

    கல்லூரியின் விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்ற சூழலில், மாவட்ட நிர்வாகமும் இரண்டாவது நாளாக விசாரணையை நடத்தியுள்ளது.

    புகாரில், `வகுப்புகளில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தங்களுக்கு அருகில் மிக நெருக்கமாக வந்து அமர்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார். வகுப்பறையில் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் தனது அறைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவார். இதற்கு பெண் உதவிப் பேராசிரியை ஒருவரும் உடந்தையாக இருந்தார்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்தப் புகாரை கல்லூரியின் முதல்வரிடம் மாணவிகள் அளித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், விசாகா கமிட்டியின் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக விசாகா கமிட்டியினர் விரிவாக விசாரணை நடத்திய பிறகு, முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

  3. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4,013 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழ்நாட்டில் இன்று 4,013 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 4,724 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும் தமிழ்நாடு சுகாதார அமைச்சகம் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

    இன்று ஒரே நாளில் 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும், 35,881 பேர் இன்னமும் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும் தமிழ்நாடு சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  4. ஸ்டாலின் செயல்பாடு எப்படி? பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் விசாரித்த நரேந்திர மோதி, ஆ. விஜயானந்த், பிபிசி தமிழுக்காக

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். தி.மு.க அரசின் செயல்பாடுகள், கமல்ஹாசனின் அரசியல், பா.ஜ.க செய்ய வேண்டிய பணிகள் எனப் பல விஷயங்களை பிரதமர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோதியிடம் வாழ்த்துப் பெறும் வகையில் ஒரு சந்திப்பை அமைக்க அவரிடம் தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையால் சற்று தாமதம் ஏற்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.

    இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் டெல்லி சென்றனர். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன், எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

  5. உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி

    உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்று நான்கே மாதங்களில் விலகிய திராத் சிங் ராவத்தை தொடர்ந்து, புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் புஷ்கர் சிங் தாமி.

    உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இந்த மாற்றம் நடந்துள்ளது.

    அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவர் நாளை மாலை பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் அம்மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

  6. ஜப்பானில் பெரும் நிலச்சரிவு – 20 பேரை காணவில்லை

    ஜப்பானின் அடாமி நகரில் கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் நிலசரிவில் இதுவரை 20 பேரை காணவில்லை.

    சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்றில் மலை உச்சியில் இருந்து பெரும் கருப்பு மணல் மேடு சரிந்து, கடலுக்கு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

    பல வீடுகள் பாதிக்கப்பட்டு, மண்ணுக்குள் புதைந்தன.

    பாதிக்கப்பட்டவர்களின் இரண்டு உடல்கள் போர்ட் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதாக க்யோடோ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    பசிபிக் கடற்கரையில் பெய்த மிக கன மழையால் ஏற்பட்ட அவசர நிலையை சரிசெய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளார் பிரதமர் யோஷிஹிடே சுகா.

  7. இரண்டு டோஸ் செலுத்தினால் 98 % பாதுகாப்பு

    ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பும், இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டால் 98% பாதுகாப்பும் கிடைக்கும் என்று சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது ஓர் இந்திய அரசு ஆய்வு நிறுவனம் ஆகும்.

    இந்தியாவில் இதுவரை நான்கு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடுப்பூசியை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவியில்லை.

  8. மு.க. ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனை

    தமது வழக்கமான அரையாண்டு மருத்துவப் பரிசோதனைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை தங்கள் மருத்துவமனைக்கு வந்ததாக சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    பரிசோதனை முடிந்த உடனேயே அவரை மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  9. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி, தரவுகளை வெளியிட்ட அரசு

    நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா 95 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 7,10,000 கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக வெள்ளியன்று இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2021-22ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியா செய்துள்ள ஏற்றுமதி,2020 -2021ஆம் நிதி ஆண்டின் இதே காலாண்டில் செய்த ஏற்றுமதி அளவை விட 85 சதவிகிதம் அதிகம்.

    சென்ற ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 51.44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.இந்த ஆண்டு இது 95.36 பில்லியன் டாலராக உள்ளது.

    ஜூன் மாதத்தில் இந்திய அரசின் வர்த்தக பற்றாக்குறை 9.4 பில்லியன் (சுமார் 70,000 கோடி இந்திய ரூபாய்) அமெரிக்க டாலராக இருந்தது என்று அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

    இதேபோல இந்தியாவின் இறக்குமதி இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 60.65 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஒட்டு மொத்த இறக்குமதியின், மதிப்பு இந்த ஆண்டு 126. 14 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் 9,41,000 இந்திய ரூபாய்) உள்ளது.

  10. கோவேக்சின் தடுப்பூசி - பாரத் பயோடெக் 3ஆம் கட்ட ஆய்வறிக்கை

    இந்தியாவின் பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பு மருந்து கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 77.8 சதவிகிதம் திறனுடன் செயல்படுவதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இதைக் கண்டறிந்ததாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் கூற்று வல்லுநர் குழுவால் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படவில்லை.

    தீவிர கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 93.4% அளவுக்கு கோவேக்சின் செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் கூறுகிறது.

    தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பு மருந்து 65.2 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாகவும் பாரத் பயோடெக் கூறுகிறது.

    18-98 வயதுக்கு உள்பட்ட, அறிகுறிகள் தென்படும் 130 கொரோனா தொற்றாளர்களிடம் மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

  11. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள்.