புதுச்சேரி பாஜக தலைமையிடம் முற்றுகை
புதுச்சேரியை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாக கூறி அவரது ஆதரவாளர்கள் பாஜக தலைமை அலுவலனத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜான்குமார். இதேபோன்று அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து ஜான்குமார் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பாஜக தலைமையிடத்தை அவர் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் நிலவி வந்த காரணத்தினால் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து நேற்று தீடீரென ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவருக்கு பதில் வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. இதனிடையே ஜான்குமார் தனது மகன் ரிச்சார்ட்டுடன் பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஜான்குமார் ஆதராளவளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்த பெயர் பலகையைக் கிழித்தும், அலுவலக கதவை உடைக்கவும் செய்தனர். இதனையடுத்து டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் தனது ஆதரவாளர்களிடம் ஜான்குமார் பேசியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் மேலாகியும் இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. மேலும் கடந்த ஒரு மாத காலமாக அமைச்சரவை பங்கீட்டில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஒன்றாக இருக்கிறது. மேலும் கூட்டணி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியுடன் அமர்ந்து பேசி அனைத்திற்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இதற்கிடையில் அமைச்சர் பதவி தொடர்பாக பாஜக கட்சிக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் கூறுகையில், "இது குறித்து தாம் ஜான்குமாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தமக்கு எதுவும் தெரியாது என ஜான்குமார் கூறிவிட்டார். மேலும் அமைச்சர் பதவி குறித்து தலைமை முடிவெடுக்கும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என ஜான்குமாரின் ஆதரவாலர்களிடம்கூறியுள்ளார். மேலும் இது உட்கட்சி விவகாரம் என்பதால் போராட்டத்தில் யார் யார் ஈட்டுப்பட்டர்கள்என்பது குறித்து விசாரித்து அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.