இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இல்ல பாதுகாப்பு விவகாரத்தில் முன்னாள் என்கவுன்ட்டர் ஸ்பெலிஸ்ட் பிரதீப் சர்மாவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.
மும்பையில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அம்பானியின் வீடு அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காருக்கு சொந்தக்காரரான மன்சுக் ஹிரன் மார்ச் 5ஆம் தேதி மும்பை கடல் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த 11ஆம் தேதி சந்தோஷ் ஷேலர், ஆனந்த் ஜாதவ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெடிமருந்துகளை காரில் நிரப்பியதில் தொடர்புடையதாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, காவல் அதிகாரிகளான சச்சின் வாஸே, ரியாதின் காஸி, சுனில் மானே ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. பிறகு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். கிரிக்கெட் சூதாட்ட ஏஜென்ட் நரேஷ் கோர், முன்னாள் காவலர் விநாயக் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் காவல் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை கடந்த சில நாட்களாக விசாரித்து வந்த என்ஐஏ, கடைசியாக கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் சோதனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மும்பை காவல்துறையில் ஆய்வாளர் அந்தஸ்தில் பணியாற்றிய பிரதீப் சர்மா, அந்த மாநில காவல்துறையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக பரவலாக அறியப்பட்டவர்.
2008ஆம் ஆண்டில் இவர் மீது ஊழல் புகார்கள் கடுமையாக இருந்ததால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அந்த புகார்கள் ஆதாரமற்றவை எனக்கூறி 2017இல் அவர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பணியில் தொடர்ந்த அவர், 2019ஆம் ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக காவல் பணியைத் துறந்தார்.
அந்த தேர்தலில் அவர் போட்டியிட சிவசேனை கட்சி வாய்ப்பளித்தது. ஆனால், 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில், அம்பானி வீடருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி மருந்து பதுக்கியிருந்தது மற்றும் அந்த காரின் உரிமையாளர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அவரை தற்போது என்ஐஏ கைது செய்துள்ளனர்.