சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய டிஜிட்டில் விதிகளின்படி சமூக ஊடகங்கள் மே 26 முதல் இயங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது செய்தி இணையதளங்கள் அந்த விதிகளுக்கு உடன்படுவது தொடர்பான தங்களின் முடிவை 15 நாட்களுக்குள் தரும்படி இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த புதிய விதிகள் தொடர்பான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், ஓடிடி தளங்கள் போன்றவற்றுக்கான புதிய விதிகள் மே 26 அமலுக்கு வந்தன.
இந்த நிலையில், புதிய விதிகளுக்கு கட்டுப்படுவது தொடர்பான தங்களின் முடிவை டிஜிட்டல் ஆன்லைன் செய்தி ஊடகங்கள் தெரிவிக்க 15 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து டிஜிட்டல் ஊடக தளங்களும் அவற்றுக்கு வரும் புகார்களுக்கு தீர்வு காண ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி, புகார்கள் மீதான தீர்வை கண்டறிவது, ஆட்சேபகர இடுகைகளை தணிக்கை செய்து நீக்குவது, அவை தொடர்பான அறிக்கையை பராமரிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் அனைத்தும் இந்திய பத்திரிகை கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
செய்தி இன்டர்நெட் தளங்களை பொறுத்தவரை, பதிப்பகத்தார் சுயமாக இந்த விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிப்பக அமைப்புகள் மூலம் அவை மேற்பார்வையிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு மேற்பார்வை குழுவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி இடம்பெறுவார் என்றும் அதில் அரசின் விதிகள், கோட்பாடுகள் போன்றவை பின்பற்றப்படுகின்றவை என்பது கண்காணிக்கப்படும்.
ஊடகங்கள் மீதான புகார்கள் தொடர்பாக பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு குறைதீர் விசாரணை கூட்டங்களை நடத்தும். சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெறும் பக்கத்தை முடக்கும் உத்தரவை பிறப்பிக்க, இணைச்செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த புதிய விதிகள், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பேச்சு சுதந்திரத்துக்கு முரணானது என்றும் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஊடக தளங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. ஆனால், இது முற்போக்கான, சுதந்திரமான, பலதரப்பட்ட மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை என்று இந்திய அரசு கூறியுள்ளது.