You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விமானத்தில் திருமணம் செய்த மதுரை தம்பதியினர்: விமான நிறுவனம் விளக்கம்

மதுரையிலிருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி செல்லும் போது வான்வெளியில் மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.‌ மேலும் அவர்கள் விமானத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் வைரலாக பரவியது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் பகிர்ந்திருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி.

  2. சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் கொரானாவால் உயிரிழப்பு

    சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 57,913 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 51,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போது 5,707 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 811 உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 966 நபர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தொற்று காரணமாக தினந்தோறும் சிகிச்சை பலனின்றி 15 யிலிருந்து 20 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

  3. தமிழக முதல்வரை அரை நிர்வாணமாக சித்தரித்து புகைப்படம்: தீயணைப்பு வீரர் மீது வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை அரை நிர்வாணமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய புகாரில் தக்கலை தீயணைப்பு நிலைய வீரரொருவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெரால்ட். இவர் தக்கலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொற்றில் இருந்து மீண்டு நேற்று முன்தினம் முதல் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஹெரால்ட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அரை நிர்வாணமாகவும் (சட்டமன்றத்தில் இருந்து சட்டையை கிழத்து கொண்டு உள்ளாடையுடன் வருவது போன்று) அதன் அருகே அமைச்சர் துரைமுருகன் நிற்பது போன்றும் சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக தக்கலை தி.மு.க வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஜெகதேவ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தக்கலை போலீசார் ஹெரால்ட் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு விசாரணை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், “தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் படத்தை அரை நிர்வாணமாக சித்தரித்து பதிவேற்றி களங்கம் விளைவித்த தீயணைப்பு துறை வீரர் ஹெரால்ட் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தக்கலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஜெகதேவ் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

    ஹெரால்ட் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதால் அவரிடம் நேரில் சென்று விசாரிக்க முடியவில்லை. அதனால் இன்று காலை ஹெரால்டிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் குறித்து விசாரித்தபோது, “கடந்த 2018ஆம் ஆண்டு நான் இந்த பதிவை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன்; சமீபத்தில் தமிழக முதல்வர் குறித்து நான் எந்த பதிவும் செய்யவில்லை” என்று ஹெரால்ட் கூறியதாக காவல் ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கறிஞர் ஜெகதேவ் புகாரில் கொடுத்த புகைப்படத்திலும் 2018ஆம் ஆண்டு என குறிப்பிட்டிருந்தது. எனவே 2018ஆம் ஆண்டு அந்த படம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் தற்போதுதான் அந்த புகைப்படத்தை தான் பார்த்ததாகவும், எனவே தீயணைப்பு வீரர் ஹெரால்ட் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஹெரால்ட் மீது எடுக்கப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட துணை தீயணைப்பு அதிகாரி இமானுவேல் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழக முதல்வரின் அரை நிர்வாண புகைப்படத்தை காவலர் ஹெரால்டே சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்தாரா அல்லது வேறு யாரும் சித்தரித்த படத்தை இவர் பதிவு செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி உத்தரவின் பேரில் நிச்சயம் துறை ரீதியாக ஹெரால்ட் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

  4. ‘தி ஃபேமிலி மேன் - 2’ - இணையத் தொடருக்கு எதிராக தமிழக அரசு கடிதம்

    மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற இணையத் தொடர் விரைவில் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதில் ஈழத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கதைக்களம் இருப்பதாக கூறி அதற்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், இந்த இணையத் தொடர், ஈழத் தமிழர்களை மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் சித்தரிப்பதாகவும், தொடரில் கண்டிக்கத்தக்க, பொருத்தமற்ற மற்றும் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்கள் இருப்பதாகவும் கூறி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதியுள்ள கடிதத்தில், “சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட மேற்கூறிய தொடரின் முன்னோட்டம் இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்களின் நீண்டகால போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதையும் சிதைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் போராட்டமும் தியாகங்களும் வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழ்நாடு மக்களிடமிருந்தும், மாநிலத்தின் அரசியல் கட்சிகளிடமிருந்தும் வலுவான மற்றும் பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இணையத் தொடர் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது என்பதால், இதை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டால், அது மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு எதிராக அமையும் என்றும் நான் கூற விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் “தி ஃபேமிலி மேன் - 2” வெளியீட்டை நிறுத்த அல்லது தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. விமானத்தில் திருமணம் செய்த மதுரை தம்பதியினர்: சர்ச்சையின் பின்னணி

    மதுரையை சேர்ந்த இளம் தம்பதியினர் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெங்களூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மணமக்கள் ராகேஷ் மற்றும் தீக்‌ஷனா இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக திருமண மண்டபங்கள் கிடைக்க சிரமமாக இருந்த காரணத்தினால் இவர்களது திருமணம் உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இருந்தபோதிலும், வித்தியாசமாக முறையில், விமானத்தில் திருமணம் செய்துகொள்ள மணமக்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்காக தனியார் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை சென்று வர ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி மணமக்கள் இருவரும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் பயணித்தனர். விமான பயணத்திற்கு முன்னதாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரையிலிருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி செல்லும் போது வான்வெளியில் மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.‌ மேலும் அவர்கள் விமானத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் வைரலாக பரவியது.

    ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில் கொரோனா விதிமுறைகளை மீறி முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் விமானத்தில் திருமணம் செய்து கொண்டதற்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்த நிலையில், மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் தனியார் விமான நிறுவன மேலாளர் மகேஷ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன், "மதுரையிலிருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி செல்லும் வான்வெளியில் இந்த திருமணம் நடைபெற்றது என அறிந்தேன். தனியார் விமான நிறுவன மேலாளரிடம் இதுதொடர்பாக தகுந்த விளக்கம் கேட்டுள்ளேன். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது," என்று கூறினார்.

    தொடர்பாக விளக்கமளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், திருமணத்திற்கு பிந்தைய பயணத்திற்காக மதுரையைச் சேர்ந்த முகவர் ஒருவர் விமானத்தை பதிவு செய்ததாகவும், அரசின் தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. எனினும் பயணிகள் அதனை பின்பற்றவில்லை என்பதால் விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

  6. ஜப்பானில் கொரோனா நிலவரம் என்ன?

    ஜப்பானில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால், மக்களுக்கு பரவலாக கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    ஜப்பானிய ராணுவம் கொரோனா தடுப்பூசி மையங்களைத் தொடங்கி, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    ஜப்பானின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், இதுவரை 5 சதவீதம் பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவலால், ஜப்பானின் சுகாதார உள்கட்டமைப்பின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. சில மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

  7. இஸ்ரேல் காசாவின் கூகுள் படங்கள் ஏன் மங்கலாக தெரிகின்றன?

    மக்கள் அதிகமாக உள்ள காசா, கூகுள் வரைப்படத்தில் மங்கலாக தெரிவது ஏன்?

    இதை, பொதுவெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு (Open source), வரைபட தகவல் உட்பட, ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரியப்படுத்துகின்றனர்.

    இம்மாதிரியாக படங்கள் மங்கலாக தெரிவதனால் தாக்குதல்கள் மற்றும் சேதங்களை கணக்கிடுவது கடினமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விரிவாகப் படிக்க: இங்கே சொடுக்கவும்

  8. உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், கட்சியும் இருக்கும் - கமல்ஹாசன்

    என் உயிருள்ளவரை நான் அரசியலில் இருப்பேன், மநீம கட்சியும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தன் மீது குற்றம்சாட்டி சமீப காலங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்கள் தொடர்பாக பதிலளித்துள்ளார்.

    அதில், திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை வழங்கியது, ஜனநாயகத்தின் உச்சமாக அவர்கள் (கட்சியில் இருந்து விலகியவர்கள்) நினைத்திருக்கிறார்கள். தோல்விக்கு பிறகு அவரவர்க்கு உரிய பொறுப்புகளை உணர்வதுதான் ஜனநாயகம். அது தற்கால தாகசாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்கு தெரியாது என்று குறிப்பிட்டு தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் கமல்ஹாசன்.

  9. பாலியல் தொந்தரவு வழக்கு - சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்

    சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை கே.கே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, புகாருக்குள்ளான நபர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி அறிந்தது.

  10. கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவியேற்ற உறுப்பினர்

    கேரள மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

    இதையடுத்து, கடந்த 20 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்ட்டிரல் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

    அவருக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 21 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

    அப்போது தேவிகுளம் தொகுதி சி.பி.எம் எம்.எல்.ஏ வழக்கறிஞர் ராஜா, தமிழில் உறுதிமொழி வாசித்துப் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து விரிவாகப் படிக்க: கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்க் குரல்

  11. ஃபைசர், மாடர்னா கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்கள் நேரடியாக வழங்க மறுப்பு - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

    அமெரிக்காவைச் சேர்ந்த கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களான ஃபைசரும், மாடர்னாவும் நேரடியாக மாநில அரசுகளிடம் கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியாது என்று கூறியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் 18 முதல் 44 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து போடும் திட்டத்தை கடந்த சனிக்கிழமை தொடங்க அரசு உத்தேசித்திருந்தது. ஆனால், போதிய தடுப்பூசி இல்லாததால் அந்த பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "நேரடியாக கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க அமெரிக்க நிறுவனங்களான ஃபைசர், மாடர்னாவிடம் கோரினோம்.

    ஆனால், நேரடியாக மத்திய அரசுடன்தான் நாங்கள் பேசுவோம் என்று கூறின. எனவே, டெல்லிக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறினார்.

    இரு தினங்களுக்கு முன்புதான் மாடர்னா நிறுவனத்திடம் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பேசி, கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அந்த மாநில அரசுக்கும் நேரடியாக தடுப்பூசி மருந்தை வழங்க முடியாது என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்து விட்டது என்று அமரிந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

    டெல்லியில் தடுப்பூசி போடும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால், தினமும் 80 லட்சம் டோஸ்களாவது தேவைப்படும். ஆனால், மே மாதத்தில் 16 லட்சம் டோஸ்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு ஜூன் மாதம் பாதியாக குறைக்கப்பட்டு எட்டு லட்சமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். அதில், தலைநகர தேவையை பூர்த்தி செய்யும் வகையில், டெல்லிக்கு நேரடியாக தடுப்பூசி மருந்துகளை வழங்குமாறு சர்வதேச கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர்களிடம் மத்திய அரசு பேச பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டிருந்தார்.

  12. தமிழக ஊரடங்கு: "கெஞ்சிக்கேட்கிறேன், வெளியே வராதீர்கள்" - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றுமாறு மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் உருக்கமாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து வெளியே வராதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அந்த காணொளியில் அவர், "கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கே ஒரே வழி. கொரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன், யாரிடமிருந்தும் பெற மாட்டேன் என பொதுமக்களே உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை தினமும் 37 ஆயிரமாக உள்ளது. அதிகப்படியான மக்களின் நடமாட்டமே இதற்கு காரணம். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டதேயொழிய கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவ தேவை தவிர, வேறு காரணங்களுக்காக வெளியே வர வேண்டாம். அரசு உத்தரவை பின்பற்றுங்கள். கொரோனாவை விரட்ட தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே வழி. அதுவே ஆயுதம்," என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.அவரது காணொளியை முழுமையாக பார்க்க

  13. தமிழக முழு முடக்கம்: பொது இடங்களில் அனுமதியின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

    தமிழ்நாட்டில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளதால், உரிய அனுமதியின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

    இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அரசு அறிவித்துள்ள முழு முடக்கம் அமலில் இருக்கும்.

    எனவே, வெளியே சுற்றும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலமாகவே திருப்பித் தரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    முழு முடக்க காலத்தில் மருந்தகங்கள், பால் பொருட்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  14. நரேந்திர மோதி அரசை விமர்சிக்கும் ராகுல் காந்தி: 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்'

    கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்ததற்கு இந்திய அரசுதான் காரணம், இதற்கு அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை நதிக்கரையோரம் விட்டுச் சென்றவர்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். இது அவர்கள் தவறல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    .

  15. இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் இதுவரை அந்த வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.

    இந்த உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை, அதிகமாக இருக்கலாம் என எச்சரிக்கும் நிபுணர்கள், பல மரணங்கள், கொரோனாவால் ஏற்பட்டவை என பதிவாகமலேயே போயுள்ளன என்கிறார்கள்.

    இந்தியாவில் தற்போதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 26 மில்லியன் ஆக உள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் அதிக பாதிப்புகளை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, இப்போது கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பை அதிகம் சந்திக்கும் நாடாக உள்ளது.

    இதேபோல, உலக அளவில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 3 லட்சம் கொரோனா மரணங்கள் பதிவான நாடாகவும் இந்தியா இருக்கிறது. இங்கு ஒரு லட்சம் இறப்புகள், ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் பதிவாகியுள்ளன.

    அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முடியாத வகையில் சுகாதார கட்டமைப்பு திணறி வருகிறது. இந்த நிலைமைக்கு, சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையின் தீவிரமே காரணம் என்று நம்பப்படுகிறது.

    பல மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, முக்கியமான கொரோனா எதிர்ப்பு மருந்துகள் உரிய காலத்தில் கிடைக்காதது போன்றவை தற்போதைய நிலைமைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு இடையே, கொரோனா பெருந்தொற்று நோயாளிகளை எளிதாக தாக்கும் கருப்புப்பூஞ்சை எனும் மோசமான பூஞ்சை நோய் தாக்கமும் உயிரிழப்புக்கு காரணமாகி வருவது மருத்துவத்துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளது.

    சில இடங்களில் கொரோனா சடலங்களை சமாளிக்க முடியாத அளவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மயானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அவற்றை கையாளும் திறன் குறைந்து காணப்படுகிறார்கள்.

    கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசு பதிவு செய்யும் மரணங்களின் எண்ணிக்கையை விட, பல மாநிலங்களில் பணியாற்றும் ஊடக செய்தியாளர்கள் தாங்களாகவே கணக்கிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாடு எட்டாத நிலை நிலவுகிறது.

  16. யாஸ் புயல்: மூன்று மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

    வங்க கடலில் இன்று உருவாகும் யாஸ் புயல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஷா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் முதல்வர்களுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

    வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமாகி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கூறியுள்ளது.

    இந்த புயல் வரும் 26ஆம் தேதி மணிக்கு மேற்கு வங்கம், ஒடிஷா இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது 155 கி.மீ முதல் 165 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பேரிடர் அதிவிரைவு மீட்புப்படையைச் சேர்ந்த 60 அணிகள் தயார்நிலையில் உள்ளன.

  17. சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனை

    இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐயின் இயக்குநராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறது.

    இந்த குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    விதிகளின்படி 1984 முதல் 87ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் உள்ள உயரிதாரிகளில் இருந்து சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதி வாய்ந்தவரை இந்த குழுவே இறுதி செய்யும்.

    அசாம்-மேகாலயா பிரிவைச் சேர்ந்த 1984ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவரும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநருமான ஒய்.சி. மோதி, குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்தவரும் எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநருமான ராகேஷ் அஸ்தானா, ஹரியாணா பிரிவைச் சேர்ந்தவரும் இந்திய, திபெத்திய எல்லை காவல் படை தலைமை இயக்குநருமான எஸ்.எஸ். தேஸ்வால், உத்தர பிரதேச காவல்துறை தலைமை இயக்குநரான எச்.சி. அவஸ்தி, கேரள காவல்துறை தலைமை இயக்குநரான லோக்நாத் பெஹரா, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார், மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் எஸ்.கே. ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் பெயர்கள் சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    பணி மூப்பு, நேர்மை, ஊழல் தடுப்பு வழக்குகளில் புலனாய்வுத்திறன், காவல் நிர்வாக அனுபவம் உள்ளிட்டவை, இந்த பதவிக்குரிய முக்கிய தகுதிகளாக கருதப்படுகின்றன.

    சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்படும் உயரதிகாரி, பதவியேற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியை தொடருவார்.

  18. கொரோனா தடுப்பூசி - ஆற்றில் குதித்த மக்கள்

    கொரோனா வைரஸ் தடுப்பூசி போட சுகாதார அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வந்ததை கண்ட உத்தரப் பிரதேச கிராமமொன்றில் உள்ள மக்கள், அதிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த சரயு நதியில் குதித்துள்ளனர்.

    பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சிசார்ஹாஎனும் கிராமத்தில் இந்த நிகழ்வு சனிக்கிழமை நடந்துள்ளது.

    இது தடுப்பூசி அல்ல விஷ ஊசி என்று சிலர் சொன்னதால் தாங்கள் நதியில் குதித்து தப்பிக்க முயன்றதாக உள்ளூர் கிராம மக்கள் கூறுகின்றனர் என்கிறது பிடிஐ செய்தி முகமை.

    தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தாம் எடுத்துக் கூறிய பின்பு அந்த ஊரில் இருந்த 18 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று ராம் நகர் துணை ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.

  19. பிபிசி தமிழ் - இன்றைய நேரலை தொடங்கியது

    வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய மற்றும் இலங்கை அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.