You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா தொற்றுக்கு அன்புக்குரிய பலரை இழந்துவிட்டோம்: கண்கலங்கிய பிரதமர் நரேந்திர மோதி

தமது சொந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பனாரசில் கொரோனா முன்களப் பணியாளர்களுடன் ஓர் ஆய்வுக் கூட்டத்தில் இணைய வழி பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி கண்கலங்கிப் பேசினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்க - சீமான் எச்சரிக்கை

    அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி ஃபேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

    விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுவுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

    தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர்.

    சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாமல், அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்.

    அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  2. கருப்பு பூஞ்சைக்கு தெலங்கானாவிலிருந்து மருந்து வரவழைத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

    புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிகளுக்காக தெலங்கானாவிலிருந்து மருந்து வரவழைத்தார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

    புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு அவசர சிகிச்சை அளிக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம்‌ வேண்டுகோள் வைத்தார்.

    இதனையடுத்து கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 10 ஆமபொனைக்ஸ் மருந்துகள் தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டது.

    குறிப்பாக தேவையறிந்து உடனடியாக உதவிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரிகளுக்கு தெலுங்கானா ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான‌ தமிழிசை சௌந்தரராஜன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

  3. புதுச்சேரி 15வது சட்டப்பேரவை தற்காலிக தலைவராக லட்சுமி நாராயணன் நியமனம்.

    புதுச்சேரியில் நடத்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார்.

    இதனிடையே புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணனை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். இந்நிலையில் இன்று (மே 21) மாலை ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணனை சட்டப்பேரவை தலைவராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நியமித்துள்ளார்.

  4. புனே நகரத்தில் மட்டும் 300 பேர் மியூகோர்மைகோசிஸால் பாதிப்பு

    கடந்த சில தினங்களாக மியூகோர்மைகோசிஸ் என்கிற கருப்பு பூஞ்சை குறித்த செய்திகள் அதிகம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவின் பல மாநிலங்களில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    தற்போது புனே நகரத்தில் மட்டும் 300 பேர் மியூகோர்மைகோசிஸ் என்கிற கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடக்கம். கருப்பு பூஞ்சையால் பாதிக்கபட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 6 ஊசிகள் போட வேண்டும்.

    ஆக 300 நோயாளிகள் இந்த பூஞ்சையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால், தோராயமாக நாள் ஒன்றுக்கு 1,800 ஊசிகள் வேண்டும். எங்களிடம் அத்தனை ஊசிகள் இல்லை என மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளார்.

    இந்த ஊசிகளை போதிய அளவுக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் உடனான சந்திப்பில் மகாராஷ்டிரத்தின் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

  5. பழம்பெரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுனா காலமானார்

    இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான சுந்தர்லால் பகுகுனா தன் 94-வது வயதில் காலமானார் என பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    இவர் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

    இந்த பழம்பெரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுனா, வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தியாவில் ‘சிப்கோ இயக்கத்தை’ தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில், சுந்தர்லால் பகுகுனா மறைவுக்கு தன் இரங்கலை தெரிவித்துள்ளார். பகுகுனாவின் மறைவு இந்தியாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று கூறியுள்ளார் மோதி.வன அழிப்புக்கு எதிராக மக்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து போராடும், வன்முறையற்ற வழிமுறை மூலம் புகழ்பெற்றது சிப்கோ இயக்கம்.

  6. பனாரஸ் காணொளிக் கூட்டத்தில் கண்கலங்கிய மோதி

    பிரதமர் நரேந்திர மோதி தன் மக்களவை தொகுதிக்குட்பட்ட பனாரஸில், மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களோடு கொரோனா தொற்று பரவல் தொடர்பான ஒரு காணொளி வழி ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதில் “காசி நகரத்தின் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த கொரோனா வைரஸ் நம் அன்புக்குரிய பலரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது” என கூறினார்.

    அப்படிக் கூறியபோது நரேந்திர மோதி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இருப்பினும் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு மேற்கொண்டு பேசினார்.

    நாம் எவ்வளவோ முயற்சித்தும் பலரை காக்க முடியவில்லை, அவர்களுக்கு ஒரு பணிவான அஞ்சலியை செலுத்திக் கொள்வோம் என கூறினார் பிரதமர் நரேந்திர மோதி.

  7. செங்கல்பட்டு தடுப்பூசி வளாக சர்ச்சை: தடங்கலை தகர்க்குமா தமிழக அரசு?

    கொரோனா தடுப்பூசி தேவைக்காக உலகளாவிய டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. அதேநேரம், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தனியாருக்குக் கொடுக்கும் பணியில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல்?

    தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைவதால், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளிலும் ஐ.சி.யூ வார்டுகளிலும் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் களையும் வகையில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கூடுதல் படுக்கை வசதிகளை அமைக்கும் பணிகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

  8. பாலியல் வல்லுறவு வழக்கில் இருந்து டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் விடுதலை

    அரசியல், புலனாய்வு பத்திரிகையான டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால், 2013ம் ஆண்டு தனது பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. கோவா மாநில விசாரணை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    கோவாவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டெஹல்கா நிகழ்ச்சி ஒன்றில் சக பெண் ஊழியர் ஒருவரை வல்லுறவு செய்ததாக தேஜ்பால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு பின் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார்.

    இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளராக இருந்த தேஜ்பால் பல்வேறு செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் பணிபுரிந்தபின் 2000ஆம் ஆண்டு டெஹல்கா பத்திரிகையை தொடங்கினார்.

    அதன்பிறகு டெல்ஹகா பல புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக `ஸ்டிங் ஆப்ரேஷன்` என்று சொல்லக்கூடிய ரகசியமாக செய்தி சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. டெஹல்காவின் பத்திரிகையாளர்கள் வேறு ஒருவரை போல சென்று ரகசியமாக படம் எடுத்து ஊழல்களை அம்பலமாக்குவர்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையால் நடத்தப்பட்ட என்கவுன்டர் நடவடிக்கையில் 13 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஏ என் ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  10. குறையும் புதிய தொற்று எண்ணிக்கை

    இந்தியாவில் புதியதாக 2 லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    தொற்றிலிருந்து விடுபட்டு கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 4,209 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை 2 கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  11. நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் வழங்கும் இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.