You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - டெல்லி முதல்வர் அறிவிப்பு

"கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக தாய், தந்தை இருவரும் இறந்தாலோ, அல்லது, பெற்றோரில் ஒருவர் முன்னரே இறந்திருந்து, மற்றொருவர் கொரோனா காரணமாக இறந்தாலோ, அந்த குழந்தைகளுக்கு 2,500 ரூபாய் மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். குழந்தைகள் 25 வயதை எட்டும் வரை இந்த நிதி உதவி அளிக்கப்படும். கோவிட்-19 நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு டெல்லி அரசு இலவச கல்வியை வழங்கும்" என்றும் அறிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது. bbctamil.com என்ற எங்களது இணையதளத்தில் நாளை காலை மீண்டும் புதிய நேரலை பக்கத்தில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  2. தமிழகத்தில் மேலும் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33,059 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350ஆக உயர்ந்துள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,369ஆக உயர்ந்துள்ளது.

  3. `லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: நீதிமன்றம் கூறியது என்ன?

    திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதை தார்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக 19 வயது பெண் மற்றும் 22 வயது ஆண் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ். மதன், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறினார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த ஜோடியின் வழக்கறிஞர் ஜே.எஸ். தாகுர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  4. கொரோனா தடுப்புப் பணிக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு - தமிழக அரசு

    கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள 69 கோடி ரூபாயில் 50 கோடியை நோய்த்தொற்று தடுப்புப் பணிக்கு செலவிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. ஆதரவற்றோரின் பசியை போக்கும் கடலூர் பட்டதாரி பெண்கள்

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மாநில அரசு பொது முடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருப்பதால், அத்தியாவசிய கடைகள் மட்டுமே ஒரு சில மணி நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில், கடலூரைச் சேர்த்த மூன்று பெண்கள் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு ,இரவு உணவு என இரு வேளை உணவை தயார் செய்து வழங்கி வருகின்றனர். இவர்களுடன் 15க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இணைத்துள்ளனர்.

  6. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - கெஜ்ரிவால் அறிவிப்பு

    டெல்லி யூனியன் பிரதேசத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று (மே 18, செவ்வாய்க்கிழமை) தொடர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், "50,000 ரூபாய் தவிர, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக வருமானம் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்களுக்கு மாத ஓய்வூதியமாக 2,500 ரூபாய் வழங்கப்படும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் கணவர் இறந்தால், ஓய்வூதியம் மனைவிக்கு வழங்கப்படும். மனைவி இறந்தால் அது கணவருக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இறந்தால், அவருடைய பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று கூறியதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. "கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக தாய், தந்தை இருவரும் இறந்தாலோ, அல்லது, பெற்றோரில் ஒருவர் முன்னரே இறந்திருந்து, மற்றொருவர் கொரோனா காரணமாக இறந்தாலோ, அந்த குழந்தைகளுக்கு 2,500 ரூபாய் மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். குழந்தைகள் 25 வயதை எட்டும் வரை இந்த நிதி உதவி அளிக்கப்படும். கோவிட்-19 நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு டெல்லி அரசு இலவச கல்வியை வழங்கும்" என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

  7. இஸ்ரேல் - காசா மோதல்: சமீபத்திய நிலவரம் என்ன?

    இஸ்ரேல் படையினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையே நடக்கும் மோதலில் நடந்த சமீபத்திய நிகழ்வை இங்கே பார்க்கலாம்.

    மேற்குக்கரை நகரான ஹெப்ரானில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வந்த பாலத்தீன நபர் தங்களை தாக்க முற்பட்டதாகக் கூறி அவரை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த சம்பவத்தில் இஸ்ரேலிய படையினருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதல் சம்பவத்தை பதிவு செய்ய முயன்ற சில ஊடகவியலாளர்களை ராணுவத்தினர் அடித்துத் தள்ளியதாக அந்த காட்சிகளை நேரில் பார்த்தவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார். காசா நகரின் கட்டடங்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இஸ்ரேலிய ராணுவத்தினர் வான் தாக்குதல் நடத்தினார்கள்.

    நள்ளிரவைக் கடந்த வேளையில் நடந்த தாக்குதலின்போது இரண்டுக்கும் அதிகமான ஹமாஸ் பதுங்குச் சுரங்கங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவில் உள்ள பாலத்தீன சுகாதார அதிகாரிகள், நடந்த தாக்குதலில் பாலத்தீனர்கள் தரப்பில் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவலில்லை என்று கூறியுள்ளனர். இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை காலையில் பாலத்தீன போராளிகள் ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நகர்ப்பகுதிகளில் சைரன் ஒலி முழங்கியது.

    இருப்பினும் ஆறு மணி நேரமாக தங்கள் தரப்பு அமைதியைக் கடைப்பிடித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல், காசா இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. சண்டை நிறுத்தத்தை ஏற்கெனவே அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைவது தொடர்பாக இன்றைய நாளின் பிற்பகுதியில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

    இஸ்ரேல்-காசா சண்டை நிறுத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக எகிப்து மற்றும் ஜோர்டானுடன் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

  8. புதுவை பல்கலைக்கழகம் கோவிட் மையமாக மாற்றம்?

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று‌ கடந்த இரண்டு வார காலமாக தீவிரமடைந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் நாள்தோறும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் சுமார் 30ஐ நெருங்கியுள்ளது. அரசு சார்பில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் தேசிய நலனுக்காக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க பல்கலைக்கழகத்தை கோவிட் மையமாக மாற்ற அதன் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், பல்கலைக்கழகத்தில் ஒரு கோவிட் பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த வசதி நிறுவப்படும். புதுவை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சிகிச்சைக்கு தேவைக்கேற்ப போதுமான அளவு படுக்கைகள் மற்றும் சிறப்பு வார்டுகளை ஒதுக்க பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது," என புதுவை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

  9. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு

    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன், மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும். குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை 31-5-2021-க்குள் கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  10. கேரளாவின் புதிய அமைச்சரவை: ஷைலஜா உள்ளிட்ட அனைத்து முந்தைய அமைச்சர்களுக்கும் இடமில்லை

    கேரளாவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு 12 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    கேரள முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அவரை முறைப்படி சட்டமன்ற கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுப்பதற்கான அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் இடம்பெறும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 12 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கே.கே. ஷைலஜா உள்ளிட்ட எந்த அமைச்சரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    புதிய அமைச்சர்களாக எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசவன், சாஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர்.ஆர்.பிந்து, வீனா ஜார்ஜ் மற்றும் வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில், சட்டப்பேரவை தலைவராக எம்.பி.ராஜேஷ், கட்சியின் கொறடாவாக கே.கே. ஷைலஜாவும், சட்டப்பேரவையின் கட்சி செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  11. சிங்கப்பூர் உடனான விமான போக்குவரத்தை நிறுத்த கெஜ்ரிவால் வலியுறுத்தல்

    சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என்பதால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும். எனவே, சிங்கப்பூர் உடனான விமானப் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்றும் நான் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

  12. இலங்கை அரசின் முக்கிய இணையதளங்களில் ஊடுருவல்

    இலங்கை அரசுக்கு சொந்தமான முக்கிய மூன்று இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.சீனாவிற்கான இலங்கை தூதரகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் ஊடுருவலை சந்தித்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.யுத்தம் மெளனிக்கப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலேயே, இந்த இணையத்தள ஊடுருவல் நடந்துள்ளது. கடந்த காலங்களிலும் மே 18ஆம் தேதி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என கூறுவோரால் பல இணையதளங்கள் ஊடுருவப்பட்டிருந்தன. தற்போது அந்த இணையதளங்கள் மீட்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  13. தெள தே புயல்: குஜராத்தில் 3 பேர் பலி, 177 பேரை மீட்ட கடற்படை

    குஜராத் மாநிலத்தில் தெள தே புயலில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

    மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் மரங்கள் சாய்ந்ததாகவும் 16,500 குடிசைப்பகுதிகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    மும்பை கடல் பகுதியில் புயலில் சிக்கிய 177 பேரை இந்திய கடலோர காவல் படை மீட்டிருக்கிறது. குஜராத் கரையை புயல் கடக்கும் வேளையில் இந்த நபர்கள் அனைவரும் படகுகளில் இருந்துள்ளனர்.

  14. ஒலிம்பிக்சில் பதக்கம் வென்றவரை கொலை வழக்கில் தேடும் காவல்துறை

    கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அஜய் என்பவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 50,000 ரூபாய் சன்மானத்தையும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

    சாகர் ராணா எனும் 23 வயதாகும் முன்னாள் தேசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் இந்த மாத தொடக்கத்தில் டெல்லியிலுள்ள மைதானம் ஒன்று வாகன நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டார். சாகர் ராணாவுக்கும் சுசில் குமார் உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சுசில் குமார் 2012 லண்டன் ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கமும், 2016 பெய்ஜிங் ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கமும் வென்றவர்.

  15. இந்திய திரிபுக்கு எதிராக ஃபைசர் மற்றும் மாடர்னா?

    ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா திரிபுக்கு எதிராக திறம்பட செயல்பட்டாக வேண்டும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.

    இந்த இரு தடுப்பு மருந்துகளுக்கும் இன்னும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்படவில்லை.

    நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ஆரம்பகட்ட ஆய்வாகவே கருதப்படுகிறது.

    துறை சார்ந்த நிபுணர்களால் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இந்த ஆய்வின் முடிவுகள் சஞ்சிகை எதிலும் இதுவரை பதிப்பிக்கப் படவில்லை.

  16. நீராவி பிடிப்பது நன்மை தருமா?

    உண்மையிலேயே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நீராவி பிடித்தல் செயலாற்றுகிறதா?

  17. 65 கொரோனா மரணங்களை மறைத்த மருத்துவமனை

    வட இந்திய மாநிலமான உத்தராகண்டில் இருக்கும் ஹரித்வார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று தங்கள் மருத்துவமனையில் நிகழ்ந்த 65 கோவிட் மரணங்களையும் மறைத்ததாகவும் இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர் என பிடிஐ செய்தி முகமைதெரிவிக்கிறது.

    ஹரித்வாரில் சமீபத்தில் நிகழ்ந்த கும்பமேளாவில் பல லட்சம் பேர் கூடியது இந்தியா முழுதும் கொரோனா 2ஆம் அலை தீவிரமாக ஒரு காரணமாக அமைந்தது என்ற விமர்சனம் உள்ளது.

    ஏப்ரல் 25 மற்றும் மே 12 ஆகிய தேதிகளுக்கு இடையே பாபா பர்ஃபானி மருத்துவமனையில் 65 கொரோனா தொற்றார்கள் இறந்துள்ளதாகவும் இதுதொடர்பான தகவலை மாநில கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆள் பற்றாக்குறை, சரியான நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலவில்லை போன்ற காரணங்களை அந்த மருத்துவமனை கூறுவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

  18. இந்தியாவில் கோவிட் 2ஆம் அலை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

    நேற்று, (மே 17) மட்டும் அதிகபட்சமாக ஒரே நாளில் 50 பேர் இறந்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கத்தின் தகவலின்படி இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து பிகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

    உயிரிழந்த மருத்துவர்களின் 3 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் தடுப்பூசி வழங்கல் ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும் 66% மருத்துவ ஊழியர்களுக்கு மட்டுமே இரண்டு தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவிக்கிறது.

  19. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.