You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்
பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கட்டுமான நிறுவனத்துக்கு வந்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
கள்ளக்குறிச்சி: நகைக்கடையில் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை
பூட்டியிருந்த கடையின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி கிராமத்தில் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை உள்ளது. இவருக்கு சொந்தமாக கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் ஏற்கனவே ஒரு நகைக்கடை இயங்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து புக்கிரவாரி கிராமத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதிதாக மற்றொரு கிளையைத் திறந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நகைக்கடை வழக்கமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை நகைக்கடை அருகே உள்ள மற்ற கடை உரிமையாளர்கள் அவர்களது கடையைத் திறக்க முற்பட்ட போது, நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து உரிமையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து கடைக்கு வந்த உரிமையாளர் நகைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பரஞ்சனம் காவல் துறையினர் கடையில் வைக்கப்பட்டிருந்த திருடப்பட்டிருப்பதை அறிந்து அப்பகுதியை முழுமையாக பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் உள்ளிட்டோர் களவாடப்பட்ட நகைக் கடையை நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
"ஆளுநருடன் பேசியது என்னவென்று சொல்ல முடியாது" - நடிகர் ரஜினிகாந்த்
ஆளுநருடன் அரசியல் தொடர்பாகப் பேசியதாகவும் அதில் என்ன பேசினோம் என்பதை சொல்லமுடியாது எனவும் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டின் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.
"இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. 25 -30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் வட இந்தியாவிலேயே இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார். தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை மிகவும் பிடித்திருக்கிறார். இங்கிருக்கும் ஆன்மீக உணர்வு அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன். அரசியல் பற்றியும் விவாதித்தோம். அதைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது." என்று தெரிவித்தார்.
மறுபடியும் அரசியலுக்கு வரும் திட்டம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டபோது, அப்படித் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசினீர்களா என்று கேட்டபோது, அதைப் பற்றிச் சொல்ல முடியாது என்று கூறினார்.
ஜெயிலர் திரைப்படம் வரும் 15ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
பால் - தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது குறித்து கேட்டபோது, அதைப் பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
முதல்வருக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா? அண்ணாமலை கேள்வி
பாஜகவின் மூன்றாவது ஆட்சியில் ராமராஜ்யம் சாத்தியமாகும் என்றும் உள்ளூர் விவசாய உற்பத்தி பொருளை வைத்து ராம ராஜ்ஜியம் நடக்கும் என்றும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசயுள்ளார்.
சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். பிரதமரின் கிஷான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1310 ஆக இருந்தது தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 2040 ஆக வழங்கப்படுகிறது. சுமார் 56 சதவீதம் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 இலட்சம் விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் மத்திய அரசின் ரூபாய் 1000 கோடி பங்களிப்புடன் தொடங்கி 96 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன ஆனால் கடந்த 15 மாதங்களாக விடியா திமுக ஆட்சியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட குழாய் போட முடியாமல் திட்டம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
தற்போதைய முதல்வருக்கு பட்டினி சாவு குறித்து தெரியுமா? விவசாயம் குறித்து அவருக்கு தெரியுமா? தஞ்சாவூரில் சிகப்பு கம்பளம் போட்டு அதில் நடந்து சென்று நாத்து நடவு செய்தவர் தான் தற்போதைய முதலமைச்சர்.
ஈரோடு என்றால் மஞ்சள். கோவை, என்றால் தேங்காய் என ஒவ்வொரு மாவட்டத்திலும் எது சிறப்பாக விளையுமோ அதை முன்னிறுத்தும் வகையில் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி செயல்படுத்தி வருகிறார்.
இந்தியா தற்பொழுது பெருங்காயம் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.
விவசாயிகள் இயற்கை வேளாண்மை குறித்து படிக்க வேண்டும் ஐந்து ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்ய முன்வர வேண்டும். நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பாஜக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.
அவரின் வேளாண்மை முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் மோடி "உள்ளூரை நோக்கி படையெடுத்து செல்" என்ற திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறார் இந்திய கிராமங்களில் 5ஜி ,6ஜி வசதிகள் வர உள்ளது இதனால் நகர்புற மக்கள் கிராமங்களை நோக்கி செல்வார்கள் அப்பொழுது கிராமங்களும் வளரும். பாஜகவின் மூன்றாவது ஆட்சியில் இது சாத்தியமாகும் அதுதான் ராமராஜ்யம் உள்ளூர் விவசாய உற்பத்தி பொருளை வைத்து தான் ராம ராஜ்யம் நடக்கும் என்றார்
20 வருடங்களுக்கு முன்பு தொலைந்த இந்திய பெண் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
குடியரசு துணைத் தலைவருக்கு வழியனுப்பு விழா
நாளை மறுநாளுடன் (ஆகஸ்ட் 10) குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், மாநிலங்களவையில் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, " நீங்கள் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறலாம். ஆனால், பொதுவாழ்வில் சோர்வடையவில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். எனவே, இந்த அவையை வழிநடத்தும் உங்கள் பொறுப்பு முடிவுக்கு வந்தாலும், இந்த தேசமும் என்னைப் போன்ற பொதுவாழ்வின் தொண்டர்களும் உங்கள் அனுபவத்தின் பலன்களைத் தொடர்ந்து பெறுவோம் " என்று உரையாற்றினார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம்: புதிய நீதிபதி இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு தொடர்பாக பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவுடன் இணைந்து ஓ. பன்னீர்செல்வம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக்கூடாது என வைரமுத்துவும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தனி நீதிபதியுடன் விவாதித்து முடிவெடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்பே பட்டியலிட்டபடி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் வழக்கை நாளைக்குத் தள்ளிவைக்க வேண்டுமென்றும் வைரமுத்து தரப்பு கோரியது.
இதற்குப் பிறகு, இந்த வழக்கை திரும்பவும் தலைமை நீதிபதிக்கே அனுப்பவதாகவும் அதனை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதியே முடிவுசெய்வார் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஆண்களாலும் தாய்ப்பாலூட்ட முடியும் - அறிவியல் சொல்வது என்ன?
மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் Tina Abhishek அவர்களின் நேர்காணல். தாய்ப்பால் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு அறிவியல்பூர்வமான விளக்கங்களை தெரிந்துகொள்ள, இந்த காணொளியைப் பாருங்கள்.
கரூரில் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்
கரூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (35) - நிசாந்தி (30).தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர்கள் மனமுடைந்த நிலையி்ல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை நிஷாந்தியின் கணவர் வெங்கடேசன் அவரது சகோதரர் குமார் ஆகிய இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு தயாரானார்கள். அப்போது நிஷாந்தனி மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் கோவிலுக்கு வரவில்லை என்று சொல்லி வீட்டில் இருந்துள்ளார்.
அவர்கள், கோயிலுக்கு சென்ற பிறகும், வெகு நேரம் கதவு சாத்தப்பட்டு இருப்பது கண்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக வெங்கடேஷ் மற்றும் குமார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த நிஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள் ஆகிய மூன்று பேரின் உடல்களையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுப்பள்ளி வந்த அமெரிக்க கடற்படை கப்பல்
பழுது நீக்குவதற்காக அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று முதல்முறையாக சென்னையை அடுத்த காட்டுப்பள்ளிக்கு வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி (L&T) கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த துறைமுகத்தில், தற்போது, இந்தியா - அமெரிக்கா இடையே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் டிரியூ' என்ற கடற்படை சரக்குக் கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதல்முறையாக இங்கு வந்துள்ளது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
அத்துடன், உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் ட்விட்டர் கணக்கின் வழியாக தகவல் அளியுங்கள்.
முந்தைய நேரலை பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள்.