You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல்
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை அமலாக்கத்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறையின் அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
நன்றி நேயர்களே
இன்றைய நேரலைப்பக்கம் இத்த்uடன் நிறைவு பெறுகிறது. இன்றைய நாள் நிறைவின் செய்தித்துளிகள் இதோ...
- தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதிக்கு சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். அப்போது "சிறந்த பாரதத்தை உருவாக்குவதே தீரன் சின்னமலைக்கு செலுத்தும் நன்றியாகும்" என்று பேசினார்.
- டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை அமலாக்கத்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறையின் அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
- 5ஜி அலைக்கற்றை குறைவாக ஏலம் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
- அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்று திரும்பியுள்ளார்.
- அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்திய நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
சனாதனம் என்பது சகோதரத்துவம்தான்; தீரன் சின்னமலை நினைவு விழாவில் தமிழக ஆளுநர் பேச்சு
தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். அங்கு அவர் பேசியது என்ன?
- சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை - சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம்செய்தார். நமது நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்களை நாம் மறக்கக்கூடாது. சிறந்த பாரதத்தை உருவாக்குவதே தீரன் சின்னமலைக்கு செலுத்தும் நன்றியாகும்.
- தமிழ் மிகவும் பழமையான, அழகான மொழி. தமிழ் மக்கள் போலவே, தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும். ஒருநாள் நான் உங்களைப் போல் தமிழைப் பேசுவேன் என உறுதியாக நம்புகிறேன்.
- சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட இந்த கொங்கு மண், சிறந்த மனிதர்களையும், மாபெரும் வீரர்களையும் உருவாக்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. ரோமானிய அரசுகளுடன் வர்த்தகம் புரிந்த வரலாறு கொண்டது. கொக்கு மண் மிகவும் செழிப்பான, வளமான நிலமாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும், வீரர்களையும் உருவாக்கியுள்ளது. இந்த மண்ணில் இன்று இருப்பது எனக்கு பெருமையான விஷயமாகும்.
- இந்தியாவின் தலைசிறந்த மகனான, சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்த நான் இங்கு வந்துள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாபெரும் மனிதரையும், அவரது மகத்தான தியாகத்தையும் வணங்குகிறேன். இத்தகைய தலைசிறந்த தலைவர்களை உருவாக்கக்கூடிய இந்த மண்ணின் பெருமையை உணர்கிறேன். ‘கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்’ என்ற பழமொழியைப்போல், கொங்கு செழிப்பாக இருந்தால், அனைவரும் செழிப்பாக இருப்பார்கள். தீரன் சின்னமலையின் வரலாற்றை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர். ஆனால் தீரன் சின்னமலையின் வரலாறும், தியாகமும் இங்குள்ள மக்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளது. தலைமுறை, தலைமுறையாக அவரின் சிறப்பான வரலாறு நாட்டுப்புற பாடல்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் வீரரின் சிறப்பை நாடு முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
- மக்களில் ஒருவராக இருந்த தீரன் சின்னமலை, ஆங்கிலேயர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற போது எதிர்த்து போரிட்டார். ஆங்கிலேயருடனான போரில் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்டபோது, ஆங்கிலேயரிடம் இருந்து நமது மண்ணையும், மக்களையும் போர் நடத்தி வெற்றி கண்டு காப்பாற்றினார். நன்கு கட்டமைக்கப்பட்ட, ஆயுதங்களைக் கொண்ட ஆங்கில ராணுவத்தை எதிர்த்து, இளைஞர்களை ஒருங்கிணைத்து, உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டு, தனது போர் தந்திரத்தால், ஆங்கிலப்படைகளை தீரன் சின்னமலை தோற்கடித்தார். தீரன் சின்னமலையின் கரிஷ்மாவைக் கண்டு, வியூகத்தைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தார்கள். அவரது தலைமை பண்பு குறித்து பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.
- பெரிய மரபு, பின்னணி இல்லாமல், தனது தைரியம், நம்பிக்கை, உறுதியின் காரணமாக உயர்ந்த இடத்தை அடைந்து, இளைஞர்களைத் திரட்டி மிகப்பெரிய ஆங்கிலேயப் படையை வெற்றி கொண்டிருக்கிறார். அவர் தான் போர் வியூகத்தாலும், கொரில்லா முறை போர்க்கலையாலும் இந்த வெற்றியைப் பெற்றார். பெரிய படை, ஆயுதங்கள் இல்லாமலும் எதிரியைத் தோற்கடிக்க முடியும் என்பதை உணர்த்தினார். இந்த மாபெரும் தலைவரின் பன்முகத்தன்மையை இன்னும் நாம் முழுமையாகப் பாராட்டவில்லை என நான் நினைக்கிறேன். ஆனால், தூரோகத்தின் மூலம் ஆங்கிலேயர் இந்த நிலத்தை வெற்றி பெற முடியாது என்பது உணர்ந்துள்ளது.
- தீரன் சின்னமலை சிறந்த தலைவர், போர் வீரர் மட்டுமல்லாது, தொலைநோக்கு பார்வையாளராகவும் இருந்தார். ராணுவ பலமும், பொருளாதார வளம் மட்டும் நமக்கு போதும் என்று நினைக்காமல், அறிவுசார் வளர்ச்சியும் தேவை என தீரன் சின்னமலை நினைத்தார். அதனால், இந்த மண்ணின் அறிஞர்களை, கவிஞர்களை அவர் ஊக்குவித்தார். தர்மத்தின் பாதுகாவலராகவும் புரவலராகவும் விளங்கினார்.
- சேர, சோழ பண்டியர்களால் நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியக் கோயில்கள் கட்டப்பட்டன. பிரமாண்டம், அழகு, சிறந்த கட்டிடக் கலை கொண்ட இந்த கோயில்களுக்கு இணையாக, கிரேக்கம் உள்ளிட்ட உலகின் எந்த கட்டிகலையையும் ஒப்பிட முடியாது. அப்போது இங்கு தோன்றிய தர்மம், நாடு முழுவதும் வெளிச்சமாய் பரவியது. தீரன் சின்னமலையும் இந்த தர்மத்தை பின்பற்றினார்.
- குலதெய்வ குல வழிப்பாட்டைத் தொடர்ந்தார். இந்த நாட்டின் ஆன்மா, இந்த தர்மத்தில் தான் வாழ்கிறது. உலகின் பழமையான மொழி தமிழ் மொழி. உலகின் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். துரதிஷ்டவசமாக வரலாற்றில் திரிபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் உண்மை வெல்லும். சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும், இந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையில் இருந்து மதுரை வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சனாதான தர்மத்தைப் போலவே, இத்தகைய விலைமதிப்பற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை அழிக்க முடியாது. நாம் யார், எப்படி வளர்ந்தோம் என்பதை சத்தமாகவும், தெளிவாகவும் இந்த நூல்கள் வெளிப்படுத்தியுள்ளன. திரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை பாதுகாத்தார்.
- உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான், சனாதனம், கலாச்சாரம், தர்மம் என்று சொல்கிறோம். உலகின் உயர்ந்த கடவுள் நம் அனைவருள்ளும் வாழ்கிறார் என்றுதான் வேதம் சொல்கிறது. ஒரே கடவுள் தன்னை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார். எனவே, நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். இதுதான் இந்த தர்மத்தின் சாராம்சம். இந்தியா உலகின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, உலகமே நமது குடும்பமாக மாறும்.
- 75 ஆண்டு சுதந்திர தினவிழாவில், நமது சுதந்திரப்போராட்ட வீரர்களையும், சிறந்த தலைவர்களையும் போற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் 2047-ல், உலகின் தலைவராக மாறி இருக்கும். உலகில் தீவிரவாதம், போர், பொருளாதார ஏற்றதாழ்வு போன்றவை அதிகரித்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், போரை ஆதரிக்காத, போரினை நடத்தாத இந்தியாவை உலகம் தலைமை தாங்க எதிர்பார்க்கிறது. உலகில் உதவி தேவைப்படும் நாடுகளுக்கெல்லாம் உதவும் நாடாக இந்தியா மட்டுமே உள்ளது" என்று அவர் பேசியுள்ளார்.
தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த ஆளுநர் ஆர். என். ரவி ஈரோடு சென்றது ஏன்?
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல்
இலங்கையின் மீளெழுச்சிக்கு இந்தியாவின் 'உயிர் மூச்சே' காரணம் - ரணில் விக்ரமசிங்க
நேஷனல் ஹெரால்டு வழக்கு என்றால் என்ன?
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் காரியக்கமிட்டி அலுவலகத்தின் வாயிலில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி:
1937ஆம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது.
1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று, நாட்டின் பிரதமராக நேரு பதவியேற்றபின்னர், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குனர் குழு தலைவர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் நிதியின் மூலமாக செயல்பட்ட போதும், இந்தியாவின் சிறந்த பத்திரிகையாளர்களின் அரவணைப்பின் மூலம், முன்னணி ஆங்கில செய்தித்தாளாக உருவெடுத்தது.
ஆனால், 2008ஆம் ஆண்டில் பொருளாதார காரணங்களுக்காக மீண்டும் அப்பத்திரிகை நிறுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டில் அப்பத்திரிகை இணைய பதிப்பாக மீண்டும் தொடங்கப்பட்டது.
பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியால் 2012ஆம் ஆண்டில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியை பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஏ.ஜே.எல். நிறுவனம் 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் இந்த கடனை வழங்கியது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை இருவரும் கொண்டிருந்தனர்.
மீதமுள்ள 24% பங்குகள், காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளது.
சோனியா காந்தி குடும்பத்தை சோதிக்கும் இந்த ஊழல் புகாரின் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ள இந்த இணைப்பில் படியுங்கள்.
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல்
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை அமலாக்கத்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறையின் அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இளம்பெண் ஒரே இரவில் மீட்கப்பட்டது எப்படி?
இந்து ராஷ்டிரா: இந்துக்களை வலிமையானவர்களாக உணரவைக்கும் பெருமிதமா?
ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய இளைஞர் - இரவோடு இரவாக மீட்பு
வந்துகொண்டிருக்கும் செய்தி, இபிஎஸ்-க்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து - உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ்.பாரதி பேட்டி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்த உத்தரவு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"ஒரு டெண்டரின் போது துறை அமைச்சரோ அவருடைய உறவினர்களோ இடம்பெறக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த ரூ.4,800 கோடி ஊழல் முறைகேட்டில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் இருவருக்கு டெண்டர் வழங்கியிருக்கின்றனர். இதில் முதலில் ஒரு மதிப்பீட்டுத் தொகையும் பிறகு அதையே இரட்டிப்பாகக் காட்டி டெண்டர் நடைபெற்றுள்ளது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய விசாரணை கோரி வழக்கு தொடுத்தோம்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து அனுப்புகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிபிஐ விசாரணைக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் வாதாடினோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
விசாரிப்பவர்கள் யார் என்பது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த வழக்கில் என்னுடைய சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். உச்ச நீதிமன்றம் எங்கள் வாதத்தையும் எதிர்தரப்பு வாதத்தையும் கேட்டு இதை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம், சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதற்குள் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.
2016 ஆம் ஆண்டில் தேர்தல் சமயத்தில் ரூ. 570 கோடி ரூபாயுடன் கண்டெய்னர் லாரி பிடிபட்டது. 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அந்த பணம் யாருடையது என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும் எனக்கோரி, திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ இதுகுறித்து இன்னும் விசாரிக்கவில்லை. சிபிஐ இந்த வழக்கை கிடப்பில் போட்டது போல் அல்லாமல் உயர் நீதிமன்றம் டெண்டர் முறைகேடு வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும். அப்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக கோரவில்லை. திமுக யார் மீதும் வீண்பழி சுமத்தாது" என தெரிவித்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இபிஎஸ்-க்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து - உச்ச நீதிமன்றம்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். டெண்டர் முறைகேடு புகார் வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்கு திமுகவால் தொடரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தமது உறவினர்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கியதாக திமுக வழக்கு தொடர்ந்திருந்தது.
ஜவாஹிரியை வீடியோ கேம் போன்று துல்லியமாகத் தாக்கிக் கொன்ற அமெரிக்காவின் 'நரகத் தீ'
கிருஷ்ணகிரி: ஊராட்சி தலைவர் அடித்துக் கொலை - காவல்துறையினர் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பிபி பாளையத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று இரவு (ஆக. 02) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:
"நேற்று இரவு நரசிம்மமூர்த்தி தளியிலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தனது ஊரான பிபி பாளையம் அருகே அவர் வந்தபோது அவரைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கட்டையால் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர். இதில் நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தளி காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) சம்பூர்ணம் தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட நரசிம்மமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வழக்குப் பதிவு செய்து ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
5ஜி அலைக்கற்றை: 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் விடுக்கப்பட்டது ஏன்? - ஆ.ராசா கேள்வி
5ஜி அலைக்கற்றை குறைவாக ஏலம் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, "2ஜி அலைக்கற்றையில் குரல் மட்டும்தான் சென்றடையும். 3ஜி அலைக்கற்றை மூலம் வீடியோக்களை பார்க்க முடிந்தது. 4ஜி அலைக்கற்றையில் அதன் திறன் இன்னும் அதிகரித்தது. 5 ஜி அலைக்கற்றை அதனை விட இன்னும் திறன் வாய்ந்தது. 5ஜி அலைக்கற்றையில் நீங்கள் தேடும் விஷயங்கள் ஒரு நொடியில் வந்துவிடும்.
அந்த திறன் அடிப்படையில் பார்த்தால் 5ஜி அலைக்கற்றை ஏலம் 5 லட்சம் கோடி அல்லது 6 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றரை லட்சம் கோடிக்குதான் சென்றிருக்கிறது. 5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டது என்பதை நான் சொல்லவில்லை, மத்திய அரசுதான் சொன்னது.
அப்படியென்றால் குறைவாக ஏலம் விட்டது திட்டமிடுதலில் மோசமா? 4-5 நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்துவிட்டதா? அவை குறித்து விசாரிக்க வேண்டும். எங்கு தவறு நடந்திருக்கிறது?
2ஜி புகார் ஒரு பெரிய மோசடி. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்கிற தனிமனிதனை பயன்படுத்தி, சிஏஜி என்கிற அரசியல் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி, அதற்கு பின்னால் இருந்தவர்கள் மிகப்பெரிய சதியை தீட்டினார்கள் என்பதை என் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இதுவரை இதுகுறித்து வினோத் ராயிடமிருந்து எந்த பதிலும் இல்லை" என தெரிவித்தார்.
அய்மன் அல்-ஜவாஹிரி கொலை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்கா அறிவுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உறுதிப்படுத்தினார். இந்நிலையில், தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் எங்கும் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அல்-கொய்தா அல்லது அதுசார்ந்த தீவிரவாத அமைப்புகள் அமெரிக்க அலுவலகங்கள், அதிகாரிகளை குறிவைக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவற்றையும் படியுங்கள்: அய்மன் அல் ஜவாஹிரி: பின் லேடனின் 'வலது கை'யாக மாறிய கண் மருத்துவரின் கதை
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது. இதுவரை 4 தங்கம் வென்றிருந்த நிலையில், இத்துடன் சேர்த்து தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
- காமன்வெல்த் போட்டியில் ‘லான்பவுல்’ விளையாட்டில் இந்திய பெண்கள் அணி முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது.
- "மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்க போதுமான வாய்ப்புகள் இல்லையென்பதால் மத்திய அரசுதான் வரிகளைக் குறைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு இதுவரை பெட்ரோலுக்கு ரூ 4.95 குறைத்துள்ளதாகவும்" இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தன் அறிக்கை மூலம் மறுமொழி அளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
- பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணித்த, லெப்டினன்ட் ஜெனரல், ராணுவ அதிகாரிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
- சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தானு,எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
- கனமழை காரணமாக கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.