ரவீந்திரநாத் எம்.பி உள்பட 18 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதலின்றி நடந்த பொதுக்குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

    • இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது.
    • ஈரோடு சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்ற வழக்கில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
    • பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியில் அடுத்த தகுதிவாய்ந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்வில் ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார்.
    • "ஊழல்" மற்றும் "பொறுப்பற்ற" போன்ற சொற்களை நாடாளுமன்றத்துக்குள் எம்.பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என மக்களவை செயலகம் புதுப்பித்துள்ள வார்த்தைகள் பட்டியலால் சர்ச்சை வெடித்த நிலையில், அந்த வார்த்தைகள் "தடை" செய்யப்படவில்லை என்றும் பழைய நடைமுறையில் உள்ளவையே அந்த வார்த்தைகள் என்றும் கூறியிருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா.
    • இலங்கையில் வெகு விரைவாக நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு முடங்கும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
    • இந்த வாரம் தொடங்கி 75 நாட்களுக்கு அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
  2. இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதலாவதாக இலக்கான கேரளா இளைஞர்

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் மூலம் ராஜிநாமா கடிதத்தை அனுப்பிய கோட்டாபய - சபாநாயகர் நாளை முடிவு அறிவிப்பு, எம். மணிகண்டன், ரஞ்சன் அருண் பிரசாத், கொழும்பில் இருந்து

    இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பியுள்ள கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஆராய்ந்து, அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நிறைவு பெற்றதன் பின்னர், அது குறித்து நாளைய தினத்திற்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இலங்கை நெருக்கடி

    பட மூலாதாரம், Sri Lanka Speaker office

    எனவே கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதாக நாம் அழைக்கலாம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர் கையெழுத்திட்டு ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    ஆனால் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொறுப்பு ஜனாதிபதி ஆக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும்வரை அவரை இடைக்கால ஜனாதிபதி ஆக கருத முடியாது. மேலும், ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், 30 நாட்களுள்ளாக நாடாளுமன்றத்தில் தனக்கான ஒப்புதலை ரணில் பெற வேண்டியது அவசியம். அந்த ஒப்புதலைப் பெற அவர் தவறினால் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை எம்.பி.க்கள் நடத்த வேண்டும் என்று கூறுகிறார், இந்த விவகாரத்தில் உரிய நிபுணர்களுடன் பேசிய எமது செய்தியாளர் எம். மணிகண்டன்.

  4. சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் மூலம் வந்த கோட்டாபயவின் ராஜிநாமா - சபாநாயகர் ஆலோசனை

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ ராஜிநாமா - காலி முகத்திடலில் இருந்து நேரலை

    இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ ராஜிநாமா - காலி முகத்திடலில் இருந்து பிபிசி தமிழ் செய்தியாளர் எம். மணிகண்டன் நேரலை

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார் கோட்டாபய ராஜபக்ஷ

    கோட்டாபய ராஜபக்ஷ

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ

    இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தகவல் வெளிவந்துள்ளது.

    ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் கடிதம் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மையை எவ்வாறு சட்டபூர்வமாக சரிபார்ப்பது என சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த ஆலோசனை நடத்தி வருதவாக அவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  7. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    அதிமுக எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வம்

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

    ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான பி. ரவீந்திரநாத், அவருடைய மற்றொரு மகன் பி. ஜெயபிரதீப், அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வி.என்.பி. வெங்கட்ராமன், ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.ஜி.எம். சுப்பிரமணியன், ஓம்சக்தி சேகர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், எஸ்பிஎம் சையதுகான், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ. அசோகன், சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அம்மன் பி. வைரமுத்து, புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் டி. ரமேஷ், பி. வினுபாலன், கொளத்தூர் டி. கிருஷ்ணமூர்த்தி, சைதை எம்எம் பாபு, எஸ்ஆர் அஞ்சு லட்சுமி ஆகியோர் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி கே.பழனிசாமி கையெழுத்திட்டிருக்கிறார்.

    ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால்,கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதலின்றி நடந்த பொதுக்குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக இரு தரப்பும் தத்ததமது நிலைப்பாடுகளை தேர்தல் ஆணையத்திடம் மனுவாக தாக்கல் செய்துள்ளன. அதன் மீதான முடிவு இன்னும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை.

    அதிமுக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம்,

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக

    பட மூலாதாரம்,

  8. அதிமுக தலைமை அலுவலக சீல் விவகாரம்: விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு

    அதிமுக போராட்டம்

    பட மூலாதாரம்,

    அஇஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

    கடந்த ஜூலை 11ஆம் தேதி அஇஅதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து அந்த அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

    அந்த நடவடிக்கையை நீக்கி கட்சி அலுவலக சாவியை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இதில் முதலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    ஓ.பன்னீர்செல்வம் அத்துமீறி நுழைந்ததால்தான் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை சீல் வைத்தது தவறான நடவடிக்கை. எனவே சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அலுவலகத்தைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் கோரியிருப்பதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி தரப்பு, அவர் கட்சியை விட்டே நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இது போல உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தது.

    இதற்குப் பிறகு வாதாடிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, இருவருக்கும் இடையிலான பிரச்னையை சிவில் நீதிமன்றம் மூலமாக தீர்க்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தது. மேலும் அலுவலகத்தை சீல்வைத்து வருவாய்க் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானது என்றும் இதை ரத்து செய்து கட்சி அலுவலகத்தைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரியது.

    இதற்குப் பிறகு காவல்துறை தரப்பில் சம்பவ தினத்தன்று நடந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டன.

    காலை ஒன்பது மணிக்குத் தீர்ப்பு வந்த பிறகு பிரச்னை துவங்கியதாகவும் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சி அலுவலகத்திற்குள் செல்லாமல் தடுத்தப்போது, அவர் ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தில் உள்ள சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    கட்சி அலுவலகம் ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த நிலையில், அதைத் திறக்கும்போதுதான் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இந்த தகராறில் இரு தரப்பு வாகனங்களும் உடைக்கப்பட்டதாகவும் பொதுமக்களும் பேருந்துகளும் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

    அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் ஆறு பள்ளிக்கூடங்கள் அமைந்திருந்ததால், அதனை மனதில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

    இவற்றைக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் ஜூலை 11ஆம் தேதி காலையிலிருந்து என்ன நடந்தது என்பதை காலவரிசைப்படி தாக்கல்செய்ய வேண்டுமென்றும் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்திருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறி அடுத்த விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

  9. அதிமுகவுக்கு வரலாறு கிடையாது; திமுகவுக்கு வரலாறு உண்டு - உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    அதிமுகவை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை, தங்களைத் தாங்களே விமர்சித்துத் தாக்கிக் கொள்வார்கள் என, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் திமுக கழக மூத்தோர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா உத்திரமேரூரில் இன்று நடைபெற்றது.

    இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கடந்த மூன்று மாதங்களில் கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்று பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் என்னிடம் கொடுத்த மனுக்களுக்கு முதலமைச்சரிடம் கொடுத்து நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை அளித்துள்ளேன்.

    அதிமுகவை நாம் யாரும் விமர்சிக்க வேண்டியதில்லை, தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்வார்கள். கடந்த சில தினங்களாக அதை நீங்கள் அனைவரும் பார்த்து வருகின்றீர்கள்.

    அதிமுகவுக்கு வரலாறு கிடையாது, திமுகவுக்கு வரலாறு உண்டு. அது தொண்டர்களாகிய நீங்கள்தான்" என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    இதன் தொடர்ச்சியாக மூத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து பொற்கிழியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மொத்தம் 2,083 பேருக்கு பொற்கிழியும், 422 பேருக்கு தையல் இயந்திரமும், 188 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி ஊக்கத் தொகையை வழங்கினார்.

  10. டெல்லியில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள்

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, டெல்லி கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற மாணவியை கட்டாயப்படுத்தி போலீஸ் வாகனத்துக்கு கொண்டு செல்லும் போலீஸார்

    டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரம் முன்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் தடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் எழுப்பினர்.

    இலங்கை நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டை நடத்தியதாக இந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

    இலங்கையில் விரைவாக புதிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தின்போது மாணவர்கள் குரல் எழுப்பினர்.

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கை போராட்டம்

    சீனா, இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் இதே கெளடில்யா மார்க் பகுதியில் உள்ளன. இந்த நிலையில், மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்துவது குறித்த தகவலறிந்ததும் டெல்லி போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து தூதரகத்தை முற்றுகையிடும் வகையில் முன்னேறினர்.

    இதையடுத்து சிலரை கட்டாயப்படுத்தி அருகே இருந்த போலீஸ் வாகனங்களில் ஏற்றி காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். மாலையில் இந்த மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டு அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நெருக்கடி: "அரசு கட்டடங்களை விட்டு வெளியேறுகிறோம்" - போராட்டக்குழுவினர்

    இலங்கை போராட்டம்
    படக்குறிப்பு, இலங்கை பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழுவினர்

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்று அனைத்து கட்டடங்களை விட்டும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

    "நாங்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுகிறோம். அமைதியான முறையில் இங்கிருந்து நாங்கள் புறப்படுகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை தொடருவோம்," என்று போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்கும் குழவைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

    அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்புது எங்களுடைய நோக்கம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் தவறியதற்காக பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அரசு அலுவலகங்களை மீட்பது தாடர்பாக பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் காணப்பட்டது.

    போராட்டக்காரர்கள் அரசு கட்டடங்களை விட்டு வெளியேறி வரும் நிலையில், அந்த பகுதிகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் ராணுவத்தினர் தங்கள்வசமாக்கி வருகின்றனர்.

  12. இலங்கை பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள் - நேரலை

  13. கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா?

  14. செல்வம் முழுவதையும் அறக்கட்டளைக்கு தந்துவிட்டு பணக்காரர் பட்டியலில் இருந்து நீங்குவேன்: பில்கேட்ஸ்

    பில் கேட்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பில் கேட்ஸ்

    கிட்டத்தட்ட தன் செல்வம் முழுவதையும் அறக்கட்டளைக்குத் தந்துவிட்டு, உலகப் பணக்காரர் பட்டியலில் இருந்து கடைசியில் நீங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஒரு காலத்தில் உலகின் நெம்பர் ஒன் பணக்காரரான பில் கேட்ஸ்.

    உலகில் கணினிப் புரட்சியைக் கொண்டுவந்த மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ் 2,000 கோடி டாலர் பணத்தை தன் பெயரில் உள்ள அறக்கட்டளைக்குத் தரப்போவதாக அறிவித்த நிலையில் அவர் இதைக் கூறியுள்ளார்.

    தன்னுடைய செல்வத்தை மீண்டும் சமூகத்துக்குத் திருப்பித் தருவது தனது கடமை என்று கூறியுள்ளார் தற்போது உலகின் நான்காவது பணக்காரராக இருக்கிற கேட்ஸ்.

    தன்னுடைய செல்வத்தை கொடையாகத் தரப்போவதாக முதல் முதலாக அவர் 2010ம் ஆண்டில் கூறினார். ஆனால், அதன் பிறகு அவரது செல்வம் இரட்டிப்பானது.

    தற்போது பில் கேட்சின் சொத்து மதிப்பு 11,800 கோடி டாலர் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

    தன் பெயரிலும் தன் முன்னாள் மனைவி பெயரிலும் அமைந்த அறக்கட்டளையான பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுன்டேஷனுக்கு அவர் தரப்போகிற பெரிய அளவிலான நன்கொடைக்குப் பிறகு இந்த சொத்து மதிப்பு கணிசமாக குறையும்.

    அறக்கட்டளை தங்கள் பெயரில் இருந்தாலும், அதன் கையிருப்பில் பாதிக்குமேல் தந்தவர் வாரன் பஃபெட் என்றும் அவரது பங்களிப்பால்தான் இந்த அறக்கட்டளை பெரிய லட்சியத்தோடு செயல்பட முடிகிறது என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. சிங்கப்பூரில் மனைவியுடன் தரையிறங்கிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

  16. ஈரோடு சிறுமியின் கரு முட்டை விற்ற சர்ச்சை: 4 மருத்துவமனைகளை மூட நடவடிக்கை

  17. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாஜக சாதகமாக செயல்படவில்லை - நயினார் நாகேந்திரன்

    அதிமுகவில் பதவிக்காக சண்டை நடப்பதால் தான் நான் வெளியே வந்தேன் என, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் சட்டமன்ற பாஜக குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லை ராமயன்பட்டியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

    அதிமுக கோஷ்டி பூசல் விவகாரம் பாஜகவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாஜக சாதகமாக செயல்படவில்லை. அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நல்லதாக இருக்கும்.

    அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும்.

    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவுக்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது. திமுகவுக்கு எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது" என தெரிவித்தார்.

  18. இரவின் நிழல்: பார்த்திபனின் 'ஒரே ஷாட்' - ஊடக விமர்சனம் எப்படி இருக்கிறது?

  19. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலத்தீவில் இருக்கும் சொத்துகள்

  20. ஓபிஎஸ்ஸின் கடிதம் பரிசீலனையில் உள்ளது - சபாநாயகர் அப்பாவு

    சபாநாயகர் அப்பாவு

    பட மூலாதாரம், FB/APPAVU

    படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு

    ஓபிஎஸ்ஸின் எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பான கடிதம் பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சபாநாயகர் அப்பாவு. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பான கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர், "அதிமுகவின் கட்சிக்குள் நடக்கும் விவகாரங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எம்.எல்.ஏ.வாக சட்டபேரவைக்குள் வந்தால்தான் நாம் எதையும் கேட்க முடியும்" என்று தெரிவித்தார்.

    அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னிடம் வந்து சேர்ந்தது என்றும், அதன் மீது எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், "அப்படி எந்த முடிவு எடுத்தாலும் ஊடகங்களுக்கு முறைப்படி அழைத்து விவரம் தெரிவிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.