You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளையராஜா, பி.டி. உஷா மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஆகிறார்கள் - பிரதமர் மோதி வாழ்த்து
இசைத்துறையில் தலைமுறைகளைக் கடந்து ஆற்றிய சேவைக்காக இளையராஜாவையும், விளையாட்டுத்துறையில் ஆற்றி வரும் சேவைக்காக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவையும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு இன்று திருமணம் - யார் அவரது மனைவி?
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- இசைத்துறையில் இளையராஜா, விளையாட்டுத்துறையில் பி.டி. உஷா, திரைத்துறையில் இயக்குநர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேர்வாகவுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் இன்று அலுவலக நேர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
- இலங்கை ஜனாதிபதி மாளிகை எதிரில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி ஹிருனிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு, நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டது.
- வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை. தேவையெனில் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- எல்பிஜி சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது
- இந்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நிலத்தடி நீர் எடுப்பது குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு நீர் வளத்துறை தெரிவித்துள்ளது.
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.
இளையராஜா எம்.பி ஆகிறார் - பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து
'உத்தவ் தாக்கரே எங்களை அழைத்தார், ஆனால்...' - ஏக்நாத் ஷிண்டே பேட்டி
வந்துகொண்டிருக்கும் செய்தி, முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் ராஜினாமா கடிதங்கள் ஏற்பு - அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இருந்து விலகியிருக்கும் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சராக உஉள்ள ஸ்மிருதி இரானிவசம், தற்போது அவர் கவனித்து வரும் இலாகாவைத் தவிர, சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் பொறுப்பும் ஒதுக்கவும் மற்றொரு அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியாவசம் ஆர்சிபி சிங் வகித்து வந்த எஃகுத்துறை அமைச்சக பொறுப்பை ஒதுக்கவும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அவரது மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இளையராஜா, பி.டி. உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகிறார்கள் - பிரதமர் மோதி வாழ்த்து
திரைப்பட இசையமைப்பாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான இளையராஜா, இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைப்பட இயக்குநர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவின் வீரேந்திர ஹெகடே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகவுள்ளனர்.
இதையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை முதலில் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்ட நரேந்திர மோதி, நியமன உறுப்பினர்களாகவிருக்கும் அனைவருக்கும் புகழாரம் சூட்டினார்.
மோடி வாழ்த்துஇளையராஜா பற்றி குறிப்பிடும்போது, இளையராஜா என்ற படைப்பு மேதை, தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது. அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து இந்த அளவுக்கு சாதித்துள்ளார். அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக பி.டி. உஷா தொடர்பான இடுகையில், உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. ராஜ்யசபாவுக்கு அவர் நியமனம் செய்யப்படுவதற்கு வாழ்த்துகள் என்று மோடி கூறியுள்ளார்.
இதேபோல, தெலுங்கு திரைப்படத்துறையைச் சே்ர்ந்த பிரபல கதையாசிரியர் மற்றும் இயக்குநரான விஜயேந்திர பிரசாத், கர்நாடகத்தின் தர்மசாலா கோயில் நிர்வாகி வீரேந்திர ஹெகடே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவிருப்பதற்காகவும் பிரதமர் மோதி வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 717 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று இந்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 765 ஆக இருந்தது. இன்று மட்டும் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,062 பேருக்கும் செங்கல்பட்டில் 403 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய - மியான்மர் எல்லையில் இரு தமிழர்கள் சுட்டுக் கொலை - வைகோ கண்டனம்
இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநரான பி.மோகன், வியாபாரியான எம்.அய்யனார் ஆகியோர் தங்கள் நண்பரைப் பார்ப்பதற்காக தாமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆர். என்ற பகுதியில் பர்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. எந்த வித வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு குலைந்து கிடக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது," என்று கூறியுள்ளார்.இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதுடன், கொலைகாரர்களை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்றும், படுகொலைக்கு ஆளான இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கணக்குகள் முடக்க அரசு அழுத்தம் - நீதிமன்றம் சென்ற ட்விட்டர் நிறுவனம்
பிரிட்டனில் 2 அமைச்சர்கள் பதவி விலகல் - ஏன் ?
நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர்.
இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் "சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக" நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு," என்று தெரிவித்தார்.
இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், "அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை," என்று தெரிவித்தார்.
எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன.
இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
சிதம்பரம் கோயிலில் ஆளுநர் தமிழிசை அவமதிப்பா? - அவர் தரும் விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
தமிழ்நாட்டை பிரிப்பது தேவையற்றது - சீமான் பேட்டி
தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தேவையற்றது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அக்னிபாத் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறது. இந்த திட்டம் ஆபத்தான திட்டம் இத்திட்டம் மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படுத்தும். ராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்களா? இல்லை. ஆர். எஸ். எஸ்.சுக்கு ஆள் எடுக்கிறார்களா?என்றே தெரியவில்லை.'' என்றார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் குறித்த கேள்விக்கு ''அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினை உள்கட்சி பிரச்சினை. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இருவரும் அவர்களுக்குள்ள பிரச்சனையை தீர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.'' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தேவையற்றது. இருக்கிற வளங்கள், நிலத்தை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு வைத்து விட்டு செல்ல வேண்டும். ஏற்கனவே நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.'' என்றார் சீமான்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்பார்வை இழந்த சிறுவனுக்கு, 20 ஆண்டுகளுக்கு பிறகு இழப்பீடு
கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த சிறுவனுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு. 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரத்தை சேர்ந்தவர் முக்கையா. இவர் தனது மகன் அர்ஜுனனை கடந்த 2002 ஆம் ஆண்டு தளவாய்புரத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிற்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவர்களின் பரிந்துரையில், 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, அர்ஜுனனுக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. வீடு திரும்பிய நிலையில் அவரது பார்வை குறைபாடு சரியாகவில்லை.
தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர் அறுவை சிகிச்சை செய்தும் மேற்படி சிறுவனுக்கு பார்வை கிடைக்கவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுவனின் கண்ணை பரிசோதித்த நிலையில் சிறுவனுக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனின் தந்தை மூக்கையா விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், ''பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழக்குச் செலவு நஷ்ட ஈடு உட்பட 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தனியார் கண் மருத்துவமனை வழங்க வேண்டும்.'' என உத்தரவிட்டுள்ளது.
மோதி அமைச்சரவையில் இருந்து நக்வி, ஆர்சிபி சிங் விலகல் - ஏன், என்ன நடந்தது?
வேலூரில் வாகனத்துடன் சாலை அமைத்த விவகாரம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம்
வேலூரில் வாகனத்தோடு சாலை அமைத்த விவகாரத்தில், மாநகராட்சி உதவிப் பொறியாளர் பழனியை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் மெயின் பஜார் பின்புறம் உள்ள காளியம்மன் கோவில் தெருவில், முன் அறிவிப்பு இல்லாமலும், தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலும் சிமெண்டு சாலை அமைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப்பை அகற்றாமல் சாலை அமைத்ததும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இரு சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகிய நிலையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநகராட்சி மேயர் சுஜா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தொடர் விசாரணைக்கு பிறகு சாலை அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்த மாநகராட்சியின் 3-வது மண்டலத்தை சேர்ந்த உதவி பொறியாளரான பழனி முறையாக கண்காணிக்கவில்லை என கூறி பழனியை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் - மலேசியா: 60 ஆண்டுகளாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை - வரலாறு என்ன?
இந்திய அமைச்சர்கள் இருவர் பதவி விலகல்
இந்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள முக்தர் அப்பாஸ் நக்வி பதவி விலகியுள்ளார்.
அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரையில் முடிகிறது. இந்நிலையில், பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய நிலத்தடி நீர் எடுப்பு ஆணைய அறிவிப்பு: 'தமிழ்நாட்டுக்கு பொருந்தாது' - தலைமை பொறியாளர்
இந்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நிலத்தடி நீர் எடுப்பது குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு நீர் வளத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா நீர்வளத்துறை அமைச்சகத்தின் (ஜல் சக்தி) நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ''நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவோர், பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
இதன்படி, நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், தொழிற்சாலை, உள் கட்டமைப்பு, தண்ணீர் விநியோக நிறுவனங்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான குடிநீர் பயன்பாடு உள்ளிட்ட நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோர்,நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் 30.6.2022 க்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' என்று இருந்தது.
இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சக தலைவர், நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண். 3/ 2022 தமிழ்நாட்டிற்கு பெருந்தாது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம், தடை விதிக்க இயலாது" - உச்ச நீதிமன்றம்