You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - குடியரசு தலைவர், பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல்
கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட கூடுதல் துணை ஆணையர் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவித்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
இன்றைய நேரலை நிறைவடைகிறது
வணக்கம். மே 13ஆம் தேதி நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.
- டெல்லி முண்ட்கா பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர்.
- இலங்கையில் புதிதாக பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
- காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை அமர்வு என்கிற 3 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியுள்ளது.
- கோவை பல்கலை. விழாவில், 'இந்தித் திணிப்பையே எதிர்கிறோம்' என்று அமைச்சர் க.பொன்முடியும் 'இந்தி திணிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை' என்று ஆளுநர் ரவியும் தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் - 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
- அசானி புயல் காரணமாக, குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - குடியரசு தலைவர், பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல்
டெல்லியின் முண்ட்காவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் புறநகர் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சமீர் சர்மா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கூடுதல் துணை ஆணையர் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவித்தார்.
டெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி, "இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், 14 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது," என்று கூறினார்.
குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "டெல்லியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்," என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது இரங்கல் செய்தியில், "டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில், டெல்லியின் முண்ட்காவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அரசுநிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை அங்கு சென்றடைகிறது. காயம் அடைந்த மக்களை மீட்டு உடனடி சிகிச்சையை வழங்க முன்னுரிமை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இந்த சம்பவம் குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "இந்த துயர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தீயை கட்டுப்படுத்தவும், மக்களின் உயிரைக் காப்பாற்றவும் எங்களின் துணிச்சலான தீயணைப்பு வீரர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகின்றனர். அனைவருக்கும் கடவுள் அருள் புரிவாராக" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தீ விபத்து குறித்து முண்ட்கா காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். முண்ட்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மூன்று மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கான அடிப்படைக் காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
தமிழக காவல்நிலையங்களில் அதிகரிக்கும் மரணங்கள் - மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்
இந்தி மொழி சர்ச்சை - ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி ஒரே மேடையில் வாதம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சனிக்கிழமை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதன்படி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் நாளில் தேசிய மூவர்ண கொடி பறக்கவிடப்படும் அனைத்து கட்டடங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், அன்றைய தினம் அலுவல்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று இந்திய அரசு கூறியுள்ளது.
யுக்ரேன் தலைநகர் கீயவில் பகுதியளவு கட்டுப்பாடுகள் தளர்வு
யுக்ரேன் தலைநகர் கீயவில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கீயேவ் ஊரடங்குச் சட்டத்தை சிறிது தளர்த்தியுள்ளார் அந்நகரின் மேயரும் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை உலக சாம்பியனுமான விட்டலி கிளிட்ச்கோ.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவு ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 11 மணிக்கு தொடங்கும். காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும். திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்தும் நீண்ட நேரம் இயங்கும் என்று கூறுகிறார்.
ஆனால் ரஷ்ய ராக்கெட் தாக்குதல்களின் அச்சுறுத்தல் இருப்பதால், ஊரடங்கு உத்தரவு விதிகளை குடிமக்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் இன்றைய பாதிப்பு 44
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு 44 ஆக பதிவாகியுள்ளது என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 424 ஆக உள்ளது. 58 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து : 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கத்ராவிலிருந்து ஜம்மு நோக்கி சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமடைந்தனர்.
கத்ராவிலிருந்து 1.5 கிமீ தூரத்தில் உள்ள கர்மல் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, 'பேருந்து இன்ஜின் பகுதியில் தீப்பற்றியுள்ளது. அது பஸ் முழுவதும் எரிந்துள்ளது.' என்று ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங்தெரிவித்துள்ளார்.
"இந்தி மொழி" விவகாரம்: ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி ஒரே மேடையில் வாதம்
ஆட்சி மாறினாலும் அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும்: இசை கலைஞர் டி எம் கிருஷ்ணா
ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதானி எல்&டி துறைமுகத்தில் காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாததை அடுத்து, கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக இசை கலைஞர் டி எம் கிருஷ்ணா, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட 15 பிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக தலையிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.எம்.கிருஷ்ணா, பேசுகையில்''காட்டுப்பள்ளி கிராமத்தில் மக்கள் தங்களது நிலத்தை இழந்திருக்கிறார்கள். துறைமுகம் திட்டம் கொண்டு வரப்பட்டபோது, இங்குள்ள மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு தரப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அதற்கு பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன.
ஆனால் மக்கள் அரசு இயந்திரத்தை நம்பி தங்களது வாழ்விடங்களை விட்டுச் சென்றார்கள். கட்சி மாறினாலும், மக்களுக்கு அரசு தந்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்,''என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந் ஜெயராமன் காட்டுப்பள்ளி கிராமத்தில் இதுநாள்வரை தொடரும் பிரச்னைகளை விளக்கி பேசினார்.
சென்னையில் புழக்கத்தில் போதை மாத்திரைகள் - மருத்துவர்களின் பெயரில் நடக்கும் மோசடி
வட கொரியாவில் முதல் கொரோனா இறப்பு
வட கொரியாவில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதல் இறப்பை உறுதி செய்துள்ளனர். பல்லாயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேர் இறந்தனர். ஒருவருக்கு கொரோனா ஓமிக்ரான் திரிபு இருந்தது என்று அந்நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 187,000 நபர்கள் "தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் இருப்பதாக நிபுணர்கள் சிலநேரங்களில் உறுதிப்படுத்தினாலும் வியாழக்கிழமைதான் முதல் பாதிப்பு அதிகாரிகள் அறிவித்தனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் காலமானார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்(73) உடல் நலக்குறைவால் காலமானார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக ஷேக் கலீஃபா 2004ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால், 2014ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, பெயரளவில் மட்டுமே அதிபராக செயல்பட்டார். அவரது சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் நிர்வாக விவகாரங்களை கவனித்து வருகிறார்.
அல்-நஹ்யான் குடும்பத்திற்கு 150 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய ஏழு எமிரேட்களின் எண்ணெய் வளமிக்க தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஷேக் கலீஃபா இருந்தார்.
அவர் இறந்த அலுவல்பூர்வமாக தகவலை WAM செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலீஃபாவின் மறைவையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்க விடப்படும். 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன பணிகள் 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மொஹாலி குண்டு வெடிப்பு: தீவிரவாதிகளுக்கு தொடர்பு - டிஜிபி
பஞ்சாப் மாநில மொஹாலி குண்டு வெடிப்பில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் லக்பீர் சிங் லாண்டா பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று அம்மாநில காவல்துறை தலைமை இயக்குநர் வி.கே. பாவ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'லக்பீர் சிங் 2017இல் கனடாவுக்கு சென்று விட்டார். இவர் தீவிரவாதியான ஹரிந்தர் சிங் ரிண்டாவின் நெருங்கிய கூட்டாளியாகும்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய வாதாவா சிங்கிற்கு நெருக்கமானவர்'' என்று கூறினார்.
பஞ்சாப் மாநில உளவுத்துறை தலைமை அலுவலுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் அமெரிக்க, சீன தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு
இலங்கை பிரதமராக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளையடுத்து பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9ம் தேதி பதவி விலகினார். தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இன்று காலை உத்தியோகப்பூர்வமான பொறுப்புக்களை ரணில் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இதன்படி, அமெரிக்க தூதரக அதிகாரி ஜூலி சங்கை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து சீன தூதர அதிகாரியையும் சந்தித்தார்.
சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' விமர்சனம்: கமர்ஷியல் ஃபார்முலாவில் வென்றதா?
உயர் பாதுகாப்பில் மஹிந்த ராஜபக்ஷ: என்ன நடக்கிறது திருகோணமலையில்? - கள நிலவரம்
ட்விட்டரை வாங்கும் முடிவு தற்காலிக நிறுத்தம் - ஈலோன் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ட்விட்டரில் 5 சதவிதம் தவறான/ போலி கணக்குகள் உள்ளன. ஆகையால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்தார். அதனை ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டது.
இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள இடத்தில் என்ன நடக்கிறது ?
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர் எப்படி அங்கு சென்றார். ? அங்கு என்ன நடக்கிறது ? இந்த காணோளியில் பார்க்கலாம்.