You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

'இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக வரும் செய்தியில் உண்மை இல்லை'

இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார். அவர் மற்றும் குடும்பத்தினர் தஞ்சமடைந்திருப்பதாக கருதி, திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. தமிழ்நாட்டில் தொடரும் முதியோர் கொலைகள்: முதியோர் நிலை என்ன? அரசு செய்வது என்ன?

  2. இலங்கையில் துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு அதிகாரம் - முழு விவரங்கள்

  3. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் 231 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • இலங்கையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
    • இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
    • இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு, அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    • இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்திருப்பதாக கருதி, திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆசியா ஹாக்கி கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திக், மாரீஸ்வரன் இடம் பெற்றுள்ளனர்.
    • இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் நேற்று அளித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய தீ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி ஜிப்மரின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என, ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
    • இலங்கையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள், அரசு ஆதரவாளர்கள் வீடுகளுக்கு நேற்று போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
    • கோட்டாபய ராஜபக்ஷவின் பூர்வீக இல்லத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
    • இந்திய சந்தூர் இசைக் கலைஞர் சிவ் குமார் சர்மா காலமானார். பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாந்தனுக்கு 3வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
    • இலங்கை சூழல் இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    • காஞ்சிபுரத்தில் பட்டுநூல் விலை உயர்வை குறைக்க கோரி 300க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழ்நாடு பாஜகவினர் வரும் 2024 மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரையில் இன்று நடைபெறுகிறது.
    • இந்தியாவிலேயே பாதுகாப்பான, அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • இலங்கை கொழும்புவில் சீனியர் டிஐஜி மக்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டார்.
    • சென்னைக்கு வந்த விமானத்தில் 47.56 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ எடையிலான 6 தங்க ஸ்பேனா்களை கடத்தி வந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்தனர்.
    • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களை ஏற்றி சென்ற சரக்கு லாரி மீது கரிதொட்டி லாரி மோதியதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.
    • கோவைக்கு போதைப் பொருள் கடத்திய உகாண்ட பெண் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    • இலங்கை காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
    • கர்நாடகத்தில் மதம் சார்ந்த அல்லது பிற இடங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த புதிய விண்ணப்பத்தினை வரும் 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இலங்கை ம்பிலிபிட்டிய - கொலன்ன - ஹேயஸ் பகுதியிலுள்ள கற்பாறைக்கு அருகில் நிர்மானிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனுக்கு சொந்தமான சுற்றுலா விடுதி இன்று மாலை தீ வைக்கப்பட்டுள்ளது.
    • கொழும்பு புறநகர் பகுதியான அங்கொடை பகுதியில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
  4. இலங்கை சுற்றாடல்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு தீ வைப்பு

    இலங்கை சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் சொந்த ஊரான மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அவரின் காரியாலயத்துக்கும், அவரின் சகோதரருடைய ஹோட்டல் ஒன்றுக்கும் இன்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஹாபிஸ் நஸீர், அவருடைய கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்தார்.

    இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது சுற்றாடல்துறை அமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதனையடுத்து இவரை கட்சியிலிருந்து விலக்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.

    இந்த நிலையில் நேற்று தொடக்கம் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மீது பொதுமக்கள் தாக்தல் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் சொந்த ஊரான ஏறாவுரிலுள்ள அவரின் காரியாலயத்துக்கும், அவருடைய சகோதரரின் ஹோட்டலுக்கும் இன்று இரவு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர்.

    இதேபோல் அரசாங்க ஆதரவு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான அலிசப்றி றஹீமுடைய வீடு மற்றும் அலுவலகம் ஆகிய தாக்கப்பட்டு நேற்றிரவு தீ வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  5. "இலங்கை அரசியல் தலைவர்கள் யாரும் இந்தியாவிற்கு தப்பி செல்லவில்லை"

    இலங்கையிலிருந்து சில அரசியல் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வரும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

  6. இலங்கை - நீர் கொழும்பில் பதற்றம்

    நீர் கொழும்பு பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகிறது.

    இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது, அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

  7. இருளர் சமூகத்தை சேர்ந்த சிறுவனை சாதி பெயர் சொல்லி தீயில் தள்ளிய சிறுவர்கள்

    இருளர் சமூகத்தை சேர்ந்த 6ஆம் வகுப்பு சிறுவனை சாதி பெயர் சொல்லி அழைத்து, நெருப்பில் தள்ளிய 3 சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிறி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த இவரது மகன் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை அன்று அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனை சாதி பெயரை சொல்லி அழைத்துள்ளனர்.

    பின்னர் அவரை அருகே இருந்த தீயில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறுவனின் தந்தை, சிறுவனை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், சாதி பெயர் சொல்லி நெருப்பில் தள்ளிவிட்ட3 சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உட்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களில், ஒருவர் 6ஆம் வகுப்பும், மற்றொருவர் 7ஆம் வகுப்பும், மூன்றாவது நபர் 8ஆம் வகுப்பும் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  8. 'போதையில் வந்து தாக்கினார்கள், காவலர்கள் தடுக்கவில்லை' - கொழும்பு வன்முறை சாட்சியங்கள்

  9. இலங்கையில் துப்பாக்கிச் சூடு - மூவர் காயம்

    இலங்கை காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

    இலங்கை ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

    துப்பாக்கி சூடு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இலங்கையில் இன்று (மே 10ம் தேதி) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஊடாக இதனை தெரிவித்துள்ளது. இந்த கால பகுதியில் 88 வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

  10. கர்நாடகத்தில் ஒலி பெருக்கிகள் - 15 நாட்களுக்குள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்

    கர்நாடகத்தில் மதம் சார்ந்த அல்லது பிற இடங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த புதிய விண்ணப்பத்தினை வரும் 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    கர்நாடக தலைமைச் செயலாளர் பி ரவிக்குமார், சுற்றுச்சூழல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவைத் அக்தருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ''உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் , சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அரசு உத்தரவுகள் / வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும்''. என்று தெரிவித்துள்ளார்.

    காவல்துறை மற்றும் மற்ற துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் ஆலோசித்தார். இதையடுத்து 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், மாநில அரசின் முந்தைய உத்தரவுகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

  11. மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் உச்சமும் வீழ்ச்சியும்

  12. திருப்பூர் அருகே விபத்தில் எரிந்த லாரிகள் - தீயில் கருகி ஓட்டுநர் உயிரிழப்பு

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களை ஏற்றி சென்ற சரக்கு லாரி மீது கரிதொட்டி லாரி மோதியதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது ஊதியூர். இன்று பிற்பகல் 4 மணியளவில் வட மாநிலத்தில் இருந்து தாராபுரத்திற்கு இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    ஊதியூர் - தாயம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிரே தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி காலியாக வந்த கரி தொட்டி லாரியும் மோதிக் கொண்டன. இதையடுத்து, இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.

    காலியாக சென்ற லாரி ஓட்டுனரும் அவரது உதவியாளரும் குதித்து தப்பி ஓடிவிட்டனர். கன்டெய்னர் லாரியில் இருந்த ஓட்டுனரான கர்நாடகாத்தைச் சேர்ந்த பிரபாகரன் (30), கார்த்திக் (26), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராபிலால் (18) ஆகிய மூவரும் தீயீல் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர். இதில், பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இருவருக்கும் 70 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரியில், புதிய இருசக்கர வாகனங்கள் 64 ஏற்றி வரப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊதியூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நெருக்கடி: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கிச் சூடு - முப்படைகளுக்கு அரசு அனுமதி

    இலங்கையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார். அலரி மாளிகையிலிருந்து மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர், பாதுகாப்புடன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாப்புடன் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் திருகோணமலை கடற்படை முகாமை நோக்கி சென்றதாக கூறப்பட்டது.

    திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், திருகோணமலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

    கொழும்பு பேரே வாவி அருகே மேல் மாகாண பிரதி போலீஸ் மா அதிபர் (சீனியர் டி.ஐ.ஜி) தேசபந்து தென்னக்கோன் மக்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டார்.

    இந்நிலையில், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் அல்லது தனிநபர்களை தாக்குதல் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதித்துள்ளது.

  14. இலங்கை நெருக்கடி: பாதுகாப்பான இடத்தில் மஹிந்த - நமல் ராஜபக்ஷ தகவல்

    இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார். அலரி மாளிகையிலிருந்து மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர், பாதுகாப்புடன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் திருகோணமலை கடற்படை முகாமை நோக்கி சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் முற்றுகையிட்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனால், திருகோணமலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மகன் நிமல் ராஜபக்ஷ கூறுகையில், "மஹிந்த என்னோடு தொடர்பு கொண்டார். அவர் பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக உள்ளார்.

    அவர் நாட்டை விட்டு எங்கும் தப்பி ஓட உள்ளதாக வதந்தி பரப்புகிறார்கள். அவர் இலங்கையை விட்டு எங்கும் செல்ல மாட்டார்.'' என்று தெரிவித்துள்ளார்

  15. சென்னைக்கு 1 கிலோ தங்க ஸ்பேனர்கள் கடத்தல் - சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

    சென்னைக்கு வந்த விமானத்தில் 47.56 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ எடையிலான 6 தங்க ஸ்பேனா்களை கடத்தி வந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்தனர்.

    துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது, ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த மெகபூபாஷா (26) என்ற பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அவரது உடமைகளுக்குள் டூல்ஸ் பாக்ஸ் ஒன்று இருந்தது. அதை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 24 காரட் தங்கத்தில் 6 ஸ்பேனா்கள் இருந்தன. அவை மொத்தம்ஒரு கிலோ 20 கிராம் எடை இருந்தது. இதன், சர்வதேச மதிப்பு ரூ. 47.56 லட்சம் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து தங்க ஸ்பேனா்களை பறிமுதல் செய்து, மேகபூபாஷாவைகைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

  16. இலங்கை அதிபர் மக்களுக்கு வேண்டுகோள் - வன்முறையை கைவிட்டு, அமைதி காக்கவும்

    இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு, அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் தொடர் அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றன. நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் வன்முறை, தாக்குதலையடுத்து பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது.

    மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், எம்.பிக்கள் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டன. திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். கொழும்புவில் சீனிய டிஐஜி ஒருவரும் தாக்கப்பட்டார்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'பொது மக்கள் வன்முறையை கைவிட்டு, அமைதி காக்க வேண்டுகிறேன்.

    நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.' என்று தெரிவித்துள்ளார்.

  17. தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு குறித்த ஆய்வு: வரலாற்றில் ஏன் முக்கியம்?

  18. சிங்கப்பூரில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தடை

    இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய தீ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பிரதமர் மோதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் வரவேற்று, ஆதரவளித்துள்ள இந்த படத்திற்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  19. சந்தூர் இசைக் கலைஞர் சிவ் குமார் சர்மா காலமானார் - பிரதமர் மோதி இரங்கல்

    மும்பையில் சந்தூர் இசைக் கலைஞர் சிவ் குமார் சர்மா (84)இன்று காலமானார்.

    இந்தியாவின் பிரபல சந்தூர் கலைஞர் சிவ் குமார் சர்மா மும்பை மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் பிறந்த அவர், இந்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

    சந்தூர் இசையை பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியுள்ளார். அவரது மறைவிற்கு இந்திய பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  20. இலங்கை வன்முறை: சீனியர் டிஐஜி மீது தாக்குதல்

    இலங்கை தலைநகர் கொழும்புவில் பேரே வாவி அருகே மேல் மாகாண பிரதி போலீஸ் மா அதிபர் (சீனியர் டி.ஐ.ஜி) தேசபந்து தென்னக்கோன் மக்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களால், கொழும்பு தொடங்கி பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

    ஆளும் கட்சி எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளிலும் தீ வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில், காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.