You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

காங்கிரசில் சேர்ந்து தேர்தலுக்கு பொறுப்பேற்கும் வேண்டுகோளை மறுத்துவிட்டேன்: பிரசாந்த் கிஷோர்

காங்கிரசில் சேர்ந்து தேர்தலுக்குப் பொறுப்பேற்கும்படி விடுக்கப்பட்ட பெருந்தன்மையான வேண்டுகோளை தாம் மறுத்துவிட்டதாக பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. தமிழ்நாடு: மத்திய பல்கலைக்கழகங்களில் CUET நுழைவுத் தேர்வு - கல்வியாளர்கள் எழுப்பும் கேள்விகள்

  2. வணக்கம் - இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான முக்கிய நிகழ்வுகள்.

    • ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க் கையகப்படுத்தினார்.
    • கட்சியில் சேர்ந்து, தேர்தலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி காங்கிரஸின் வேண்டுகோளை மறுத்துவிட்டதாக டிவிட்டரில் கூறியிருக்கிறார் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
    • திராவிடச் சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இருப்பதாகவும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிபிசி தமிழிடம் கூறினார்.
    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றார்.
    • தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கோயம்புத்தூரில் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் யானையும் இளம் குட்டியும் இறந்து கிடந்தன.
    • டெல்டாவில் தூர்வாரும் பணிகள் மே 31ம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
    • சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவைச் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழு, கோவை அதிமுக பிரமுகர் சஜீவனிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.
    • பாகிஸ்தான்: கராச்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், சீனாவைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 பேர் இறந்தனர்.
    • இந்தியாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உள்நாட்டு தடுப்பூசிகள் இரண்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • திருவள்ளூரில் வேளாண் நிலங்கள் வழியாக 6 வழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • பிரசாந்த் கிசோர் உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்ததாகவும் ''பழைய ஒயின், பழைய தங்கம், பழைய நண்பர்கள் சிறந்தவை'' என்று ட்விட்டரில் சித்து தெரிவித்துள்ளார்.
    • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசுப் மேல்நிலைப் பள்ளியில் ராகிங்கில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
    • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிந்து கொள்ள பிபிசி தமிழின் இணையதளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி

  3. திருவண்ணாமலை அரசு பள்ளியில் ராகிங் : 5 மாணவர்கள் இடைநீக்கம்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவர்களை வன்பகடி (ராகிங்) செய்ததாக 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர் 11ம் வகுப்பு வகுப்பு மாணவர்களை நடனம் ஆடவும் தேர்வு அட்டையை வைத்து விசிறி விடவும் கூறி துன்புறுத்தியுள்ளனர்.

    இதை செய்ய மறுத்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்த பிற மாணவர்கள், அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் இன்று பள்ளியில் கூடினர். தகவல் அறிந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரவிந்த் நேரில் விசாரனை நடத்தினார்.

    இதையடுத்து ராகிங் செய்த 5 மாணவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களை அடுத்த மாதம் 4ம் தேதி வரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  4. "நான் பதவி விலக மாட்டேன்" - இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

  5. கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணுவைச் சந்தித்த பா.ஜ.க அண்ணாமலை

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.

    இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், ''கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், ஏழைகளின் பங்காளன் நல்லகண்ணு அய்யாவை இன்று பா.ஜ.க தலைவர்களுடன் சென்று சந்தித்தோம்.

    ஐயாவின் மருமகன் சமீபத்திலே இறைவனடி சேர்ந்தார். அதற்காக எங்களுடைய வருத்தங்களை தெரிவித்து, அய்யாவின் உடல்நலத்தையும் விசாரித்து விட்டு வந்தோம்!'' என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

  6. பிரசாந்த் கிஷோர் சந்திப்பு அற்புதமானது - ''பழையதே சிறந்தது'' சித்து ட்வீட்

    "எனது பழைய நண்பர் PK உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. பழைய மது, பழைய தங்கம் மற்றும் பழைய நண்பர்கள் சிறந்தவை" என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

    கட்சியில் சேர்ந்து, தேர்தலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி காங்கிரஸின் வேண்டுகோளை மறுத்துவிட்டதாக, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    அவரது பதிவில், "நான் சேர்வதைவிட காங்கிரசுக்குத் தேவையானது தலைமைதான். கட்சிக் கட்டமைப்பில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அதற்கான கூட்டு விருப்பம் தேவை" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, தனது பழைய நண்பர் பிரசாந்த் கிசோர் உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    மேலும்,''பழைய ஒயின், பழைய தங்கம், பழைய நண்பர்கள் இப்போதும் சிறந்தவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  7. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : அதிமுக பிரமுகரிடம் 6 மணி நேரம் விசாரணை

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கும் கொடநாடு இல்லத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி காவலாளியைக் கொன்று விட்டு, கொள்ளை நடந்தது. இந்த கொலை, கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    தற்போது இந்த வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி உட்பட பலரிடமும் சிறப்பு புலனாய்வு குழு மூன்று நாட்கள் விசாரணை நடத்தியது.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராகிய வி.கே சசிகலாவிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக பிரமுகர் சஜீவனிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் 6 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

  8. பாகிஸ்தான்: கராச்சி பல்கலைக்கழகத்தில் குண்டு வெடிப்பு - சீனா ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

    கராச்சி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு துறையில் இருந்து கன்பூசியஸ் மையத்திற்கு சென்ற வாகனத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதில், கன்பூசியஸ் மைய இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் இருவர், வாகன ஓட்டுநர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் சீனாவைச் சேர்ந்த ஹுவான் கிபிங், டிங் முபெங் மற்றும் சென் சாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிபிங் மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். டிங் முபெங் மற்றும் சென் சாய் ஆசிரியர்களாக இருந்தனர். ஓட்டுநர் காலித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    மேலும், சீனாவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளூர்வாசி ஒருவர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிப்பு சம்பவம் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

  9. கொரோனா தடுப்பூசி: 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி

    கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வரும் நிலையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உள்நாட்டு தடுப்பூசிகள் இரண்டிற்கு இந்தியா அனுமதியளித்துள்ளது.

    பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை, 6-12 வயதுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்த அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்த தடுப்பூசி 12-18 வயதுடையோர், பெரியவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகிறது.

    இது மட்டுமின்றி மேலும் 2 தடுப்பூசிகளுக்கும் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 5 -12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோர்பேவாக்ஸ் (Corbevax), 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைடஸ் ( Zydus) ஆகிய 2 தடுப்பூசிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    இதில், கோர்பேவாக்ஸ் 12-14 வயதுடையோருக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

  10. திருவள்ளூரில் விவசாயிகள் போராட்டம் - விளை நிலத்தில் 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு

    திருவள்ளூரில் 6 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை சுமார் 126 கிலோமீட்டர் தூரத்திற்கு, 3, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 வழிப்பாதை அமைக்க தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

    இந்தச் சாலையை அமைத்தால் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளால் முழுப் பாசனம் பெறும் கிராமங்களில் விவசாயம் அழிந்து போகும் என விவசாயிகள் அச்சம் அடைத்துள்ளனர். நிலம் கையப்படுத்தப்பட்டால், 1, 238 ஏக்கர் விவசாய நிலங்கள், 800 குடும்பங்கள் நேரடியாகவும் 3, 000 குடும்பங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கிராம பொதுமக்கள், பல்வேறு விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணியாக சென்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் பிபிசி தமிழிடம் கூறியதாவது, ''நீர்நிலைகளில் திட்டம் செயல்படுத்தாமல் மாற்றுப்பாதையில் பணிகளை செயல்படுத்த விவசாயிகள் தரப்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆந்திரா வழியாக திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில் வரை பயணிக்கக் கூடிய 46 கிலோமீட்டர் பயணத்தில் முப்போகம் விளையும் நிலங்களை, மாவட்ட நிர்வாகம் ஒரு போகம் தான் விளைச்சல் நிலம் என தவறான ஒரு குறிப்பை கொடுத்துள்ளனர் என்று குற்றம்சாட்டினர்.

  11. கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை: பள்ளியில் பைபிள் கட்டாயமாக கற்பிக்கப்படுவதாக புகார் - என்ன நடக்கிறது?

  12. காங்கிரசில் சேர மறுத்துவிட்டேன் - பிரசாந்த் கிஷோர்

    காங்கிரசில் சேர்ந்து, தேர்தலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி காங்கிரஸ் அளித்த பெருந்தன்மையான வேண்டுகோளை மறுத்துவிட்டதாக டிவிட்டரில் கூறியிருக்கிறார் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

    "நான் சேர்வதைவிட காங்கிரசுக்குத் தேவையானது தலைமைதான். கட்சிக் கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலான மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அதற்கான கூட்டு விருப்பம் தேவை" என்றும் அவர் கூறியுள்ளார்.

  13. கோவை வனப்பகுதியில் குட்டியுடன் இறந்து கிடந்த யானை

    கோயம்புத்தூரில் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் யானையும் இளம் குட்டியும் இறந்து கிடந்தன.

    கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு பெண் யானை கருச்சிதைவு அடைந்த நிலையில், அதன் இளம் குட்டியுடன் உயிரிழந்து கிடந்தது. ஏப்ரல் 25-ம் தேதி மாலை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட இரட்டைக் கண் பாலம் சரக வனப் பகுதியில் வனத்துறை அதிகாரிகள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் இதைக் கண்டனர். வனத்துறை அதிகாரிகள், வன ஆர்வலர்கள் முன்னிலையில் கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த யானை, குட்டி ஆகியவற்றுக்கு உடற்கூறு பரிசோதனை செய்ய உள்ளனர். இறந்து பிறந்த குட்டி 20 மாத கர்ப்பத்தில் பிறந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  14. பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முடிவு இந்தியாவை பாதிக்குமா?

  15. ஜெயலலிதா மரணம் குறித்த ஆணையத்தின் விசாரணை நிறைவு - விரைவில் அறிக்கை தாக்கல்

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் காலமானார்.

    அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா, தீபக், வி.கே.சசிகலாவின் உறவினர்கள், அப்போலோ மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என 156 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    ஆனால், ஆணையத்தின் விசாரணையைக் கோரிய ஓ.பன்னீர்செல்வம் ஒருமுறை கூட ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, கடந்த மாதம் ஆணையம் அனுப்பிய சம்மனை ஏற்று ஓ.பி.எஸ் நேரில் ஆஜரானார்.

    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 26) புகழேந்தி ஆஜரானார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன். அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

    அதேநேரம், ஆறுமுகாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 24 ஆம் தேதியோடு விசாரணை நிறைவு பெற இருந்த நிலையில், முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசிடம் ஆணையத்தின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  16. டெல்டாவில் தூர்வாரும் பணிகள் மே 31ம் தேதிக்குள் நிறைவு - நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடப்பாண்டில் தற்போது தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருச்சி உய்யகொண்டான் ஆற்றில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தற்போது 80 கோடி ரூபாயில் மொத்தம் 4, 694 கி.மீ தூரத்திற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைமடை பகுதிகளுக்கும் தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பணிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தூர் வாரும் பணிகள் வரும் மே 31ம் தேதிக்குள் நிறைவு பெறும்.'' என்றார்.

  17. ஈலோன் மஸ்க் வசமாகும் ட்விட்டர்; டீல் முடிவுக்கு வந்தது எப்படி? நடந்தது என்ன?

  18. சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை - இளைஞருக்கு தூக்கு தண்டனை

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்ததாகவும், இதை பெற்றோரிடம் தெரிவிப்பேன் என சிறுமி கூறியதால், அவரை கொலை செய்து விட்டு, தினேஷ்குமார் தலைமறைவானதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    ஆத்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தினேஷ்குமாரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி எம் முருகானந்தம் முன்பு நடந்தது. தற்போது தினேஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

  19. இந்தியாவில் குடி நோய்க்கு ஆளாகும் பெண்களின் கதை: எப்படி சிகிச்சை பெறுகிறார்கள்?

  20. "மொத்தமாக 4,400 கோடி டாலர் தருகிறேன்" - விலகி ஓடிய ட்விட்டரை ஈலோன் மஸ்க் கவர்ந்து இழுத்த கதை