You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கையில் இடைக்கால அரசு : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியதாக தகவல்

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. தமிழ்நாடு அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க வழி செய்யும் மசோதா நிறைவேறியது

  2. நீலகிரியில் ஆளுநர் கூட்டிய மாநாடு - அதிகாரத்தை குறைக்க சென்னையில் சட்ட மசோதா நிறைவேற்றிய திமுக அரசு

  3. இன்றைய நேரலைப் பக்கம் நிறைவு பெறுகிறது. நன்றி

    வணக்கம். இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. எங்களோடு இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான முக்கிய நிகழ்வுகள்.

    • பிரான்ஸ் அதிபராக எமானுவல் மக்ரோங் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தனக்கு எதிராக போட்டியிட்ட லீ பென்னை அவர் தோற்கடித்தார்.
    • பிரான்ஸ் அதிபராக வெற்றி பெற்றுள்ள எமானுவேல் மக்ரோங்குக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் போராட்டக்காரர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரபூர்வ இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறியதால் சுமார் ஒருமணி நேரம் வரை அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
    • தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்களுக்குப் பதிலாக தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கு வழி செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
    • அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
    • யுக்ரேனின் மேரியுபோல் இரும்பு தொழிற்சாலை பகுதியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தஞ்சல் அடைந்துள்ளவர்கள் வெளியேறும் வகையில் விலகி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
    • யுக்ரேனுக்கு கூடுதலாக 700 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
    • யுக்ரேன் எல்லை அருகே ரஷ்ய எண்ணெய் கிடங்கு உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
    • மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் பல்வேறு ரயில்களின் புறப்பாடு தாமதமாகியது.
    • இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் 15 தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
    • இந்திய பிரதமர் மோதிக்கு எதிராக ட்விட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட, ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டு சாதனை மாணவர்கள் சினேகன், சஹானா பானு இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
    • காங்கிரஸ் கட்சித் தலைவர்களைக் கொண்டு வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
    • உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு தொடங்கியுள்ளது.
    • இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வூர்சுலா பிரதமர் மோதியைச் சந்தித்தார்.
  4. "தமிழ் ஒன்றும் கஷ்டம் இல்லை" - கோவையில் படிக்கும் வட மாநில மாணவர்கள்

  5. இலங்கையில் இடைக்கால அரசு - கோட்டாபய இணக்கம் தெரிவித்தாக தகவல்

    இலங்கையில் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அண்மையில் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

    இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாகவும் ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகின்றார். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை நடத்தி, அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார்.

    இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சரவையில் அங்கம் வகித்த பலரும் தற்போது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி, ஜனாதிபதியினால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், ''பதவியிலிருந்து விலகுவதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக.'' தெரிவித்தார்.

    மேலும், ''ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்'' எனவும் அவர் கூறுகின்றார்.

    உதய கம்மன்பில கூறுவதை போன்று, பிரதமருக்கு எதிராக 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை தயார்ப்படுத்தியிருக்க முடியாது என பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

  6. நீலகிரியில் ஆளுநர் கூட்டிய துணை வேந்தர்கள் மாநாடு - மீண்டும் சர்ச்சை எழுப்பும் தமிழக கட்சிகள்

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நீலகிரி சென்று, உதகமண்டலத்தில் உள்ள ராஜ் பவனில் தங்கியுள்ளார்.

    உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்களின் மாநாடு தொடங்கியுள்ளது.

    `புதிய உலகக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும்` என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

    இதில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

    நீட் விலக்கு உள்ளிட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது தொடங்கி ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்நிலையில், இந்த மாநாடு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  7. காங்கிரஸ் சிந்தனை அமர்வுக்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - எதிர்கால திட்டமிடல் குறித்து

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் மே 13 - 15ம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கட்சியின் எதிர்கால திட்டம் மற்றும் செயல்பாடுகளை விவாதிக்கும் வகையில் 6 தலைப்புகளில் 6 தனித்தனி குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாயம், இளைஞர் நலம் மற்றும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சல்மான் குர்ஷித், ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் அம்ரீந்தர் சிங் வார்ரிங் ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  8. ஐரோப்பிய ஒன்றிய தலைவர் இந்திய பிரதமர் மோதி சந்திப்பு

    ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வூர்சுலா ஃபொன்டேர்லயன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் நரோந்திர மோதியை இன்று அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து, அவருடன் நடத்திய பேச்சு வார்த்தை மகிழ்ச்சியளிக்கிறது. என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த சந்திப்பின் போது பொருளாதார மற்றும் கலாசார தொடர்பு உள்ளிட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது,'' என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

  9. யுக்ரேன் மேரியுபோல் பகுதியில் சண்டை நிறுத்தம் அறிவித்தது ரஷ்யா பாதுகாப்பு படை

    யுக்ரேன் மேரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷ்ய படையினர் ''பாதுகாப்பான தூரத்தில்'' பிரிட்டன் உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை வளாகத்தில் பல வாரங்களாக முடக்கப்பட்டுள்ளனர். மேரியுபோலின் கடைசி பகுதி இது ரஷ்ய கட்டுப்பாட்டில் இல்லை.

    மேலும், ''இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை. பொதுமக்கள் மற்றும் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது'' என்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

  10. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால், எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி என்ன சிக்கல்?

  11. தமிழ்நாட்டு சாதனை மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

    நீண்ட தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த சாதனை படைத்த மாணவன் சினேகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியில் தனுஷ்கோடி - தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் 60 கி.மீ தூரம் உள்ளது.

    இதை 19 மணி 45 நிமிடங்களில் நீந்திக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை 8ஆம் வகுப்பு மாணவன் நீ. சினேகன் படைத்துள்ளார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்தினார்.

    இதே போல், பள்ளி மாணவி சஹானா பானு, குறைந்த நிமிடங்களில் நிறுவனங்களின் சின்னங்கள் மற்றும் சர்வதேச தொலைபேசி டயலிங் கோடுகளை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

    மேலும், குறைந்த நிமிடங்களில் உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

  12. தமிழகம் வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?”

  13. ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை - மோதிக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதால் அசாமில் வழக்கு

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் பிரதமர் மோதி குறித்து ட்விட்டரில் தெரிவித்திருந்த கருத்து குறித்து, அசாம் மாநில பா.ஜ.க தலைவர் அருப் குமார் டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, இரு பிரிவினருக்கு இடையே பகைமை ஏற்படுத்துதல், அமைதியை சீர் குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிக்னேஷ் மேவானியை கைது செய்தனர்.

    இந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கி கோக்ரிஜ்ஹர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜிக்னேஷ் மேவானியின் வழக்குரைஞர் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, ஏஎன்ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. .

  14. இலங்கையில் இருந்து மேலும் 15 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 தமிழர்கள் படகில் அகதிகளாக தமிழ்நாடு வந்தனர்.இவர்கள் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோயில் பகுதியில் தரையிறங்கினர்.

    அவர்களை கடலோர காவல்படை போலீசார் மீட்டு, தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து தற்போது வரை இலங்கை தமிழர்கள் 75 பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

  15. மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டது - ரயில்கள் தாமதம்

    மதுரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில் அந்தத் தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டிராக்டர்கள் எடுத்து செல்வதற்காக பயன்படுத்தபடும் 25 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் அது.

    மதுரை கூடல்நகர் பகுதியிலிருந்து இருந்து மதுரை ரயில்வே நிலையத்திற்கு பராமரிப்பிற்காக இந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது செல்லூர் அருகே திடிரென அதன் கடைசி பெட்டி தடம் புரண்டது.

    இதனையடுத்து மற்ற 24 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்ட நிலையில் ஒரு பெட்டி மற்றும் மாற்றும் இயந்திரத்தை தண்டவாளத்தில் நிறுத்தி, ரயில்வே தொழிலாளர்கள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால், மதுரையில் இருந்து புறப்பட்டு செல்ல இருந்த குருவாயூர் - சென்னை வரையிலான பயணிகள் ரயில் மதுரை ரயில்வே சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குருவாயூர் - சென்னை விரைவு ரயில் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு மேல் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்ல கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    விபத்து குறித்து மதுரை கோட்ட மேலாளர் தலைமையிலான் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

  16. பிரான்ஸ் அதிபராக எமானுவேல் மக்ரோங் மீண்டும் வெற்றி: "அனைவருக்குமான அதிபராக இருப்பேன்"

  17. யுக்ரேன் எல்லை அருகே ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கில் தீ

    யுக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பிரையன்ஸ்க்கில் இன்று அதிகாலை 2 தீ விபத்துகள் ஏற்பட்டதாக அவசர சேவைகளை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதில், ஒரு தீ விபத்து எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது இடம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அந்த பகுதியில் இருந்து வெளியேற்றும் திட்டமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. யுக்ரேன் போருடன் தொடர்புள்ளது என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் அதே பகுதியில் முன்பு விமானத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியது.

    இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் ரஷ்யாவின் ரியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். அப்போது நகருக்கு மேலே ஹெலிகாப்டர்கள் பறந்ததை தாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

    பெரிய அளவில் தீப்பற்றி எரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணப்பட்டன. அவற்றை பிபிசியால் தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.

  18. பிரான்ஸ் அதிபருக்கு இந்திய பிரதமர் மோதி வாழ்த்து

    பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் எமானுவல் மக்ரோங். தனக்கு எதிராகப் போட்டியிட்ட மெரைன் லீ பென்னை அவர் தோற்கடித்துள்ளார்.

    தீவிர வலதுசாரி தலைவர்கள் இதுவரை தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை லீ பென் பெற்றபோதிலும் அவர் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

    பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள எமானுவேல் மக்ரோங்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  19. எமானுவேல் மக்ரோங்: இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் - வலதுசாரி வேட்பாளர் தோல்வி

  20. இலங்கை போராட்டக் களத்தில் மருத்துவ உதவி செய்யும் தமிழ் இளைஞர்