இலங்கை தமிழர்கள் விவகாரம்: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு மீண்டும் ஸ்டாலின் கடிதம்

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ:

    • வெள்ளை இன மக்களின் மனிதாபிமான அடிப்படையிலான அவரச உதவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்த உலகம் கருப்பின மக்களின் தேவைகளுக்கு அளிப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
    • சென்னை ஆவடி அருகே வீட்டில் உள்ள தரை தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மாணவி ஒருவரின் வீட்டில் காலை உணவு உட்கொண்டார்.
    • கொழும்பில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தொடங்கியுள்ளார்.
    • "அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா 'அகண்ட பாரதம்' ஆக மாறிவிடும்" என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
    • இலங்கையில் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை வரையறுக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்யப்படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இத்தகைய தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
    • பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
    • முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களிடம் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலன் விசாரித்தார்.
    • வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதாகி சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் - எல்.முருகன்

      எல்.முருகன்

      தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

      விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் 'முன்னேற விளையும் மாவட்டம்' குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.

      ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம்.

      கல்வியை பொதுப்பட்டியலிலும் மாநில பட்டியலிலும் இல்லாமல் ரகசியமாக வைத்து உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை அவர் தான் விளக்க வேண்டும்.

      தமிழகத்தில் தான் மத்திய அரசின் திட்டங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.

    • தஞ்சாவூர் அருகே ஆதரவின்றி இருந்த மூதாட்டி மீட்பு

      மூதாட்டி மீட்பு

      தஞ்சாவூர் அருகே ஆதரவின்றி இருந்த மூதாட்டியை சமூக நலத்துறையினர் மீட்டனர்.

      தஞ்சாவூர் அருகே காவிரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், எலும்பும் தோலுமாக ஆடையின்றி ஒரு மூதாட்டி மண்ணை உண்பது போல் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், இந்த காட்சி குறித்து 1098 உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.

      இதனையடுத்து அங்கு வந்த சமூக நலத்துறையினர், அப்பகுதியில் விசாரித்தபோது, அந்த மூதாட்டி பெயர் ஞானஜோதி (62) என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், திருமணமாகி அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

      மூத்தமகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் பொதிகை தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கணவரும், மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஞானஜோதியை இரண்டு மகன்களும் கவனிக்காமல் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      சொத்து பிரச்னை காரணமாக தனித்தனியே வசிக்கும் மகன்கள், மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீட்டில் வைத்து பூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் அவ்வப்போது மூதாட்டிக்கு உணவு வழங்கி வந்துள்ளனர். தண்ணீர், உணவு என எதுவும் இல்லாமல் மண்ணை உண்டு மூதாட்டி வாழ்ந்துவந்ததாக கூறப்படுகிறது.

      இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், அந்த இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மூதாட்டியை மீட்ட சமூக நலத்துறையினர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி 'ரத்தப் பணம்' என்று அழைப்பது எதை?

    • தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது வருத்தம் அளிக்கிறது - அண்ணாமலை

      அண்ணாமலை

      தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

      தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

      பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பிரதமர் மோதி அனைத்து சமுதாயத்தினருக்கும் முதல் நபராக வாழ்த்து சொல்கிறார், அன்பை பரிமாறுகிறார். ஆனால், தமிழக முதல்வர் நிறைய பண்டிகைகளுக்கு சொல்வது கிடையாது.

      குறிப்பாக, தமிழ் மக்களின் உணர்வு புண்படும்படி ஏப்ரல் 14 சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டாக இத்தனை காலமாக கொண்டாடுகின்றோம். ஆனால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல, முதல்வர் வாழ்த்து சொல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில், மக்கள் மனது வேறு விதமாக உள்ளது, முதல்வரின் மனது வேறு மாதிரி உள்ளது.

      தமிழ்மொழி மக்களால் அதிகம் பேசப்படுவதற்கு முயற்சிகள் எடுத்தால்தான் இணைப்பு மொழியாக்குவது சாத்தியம். அதற்கு மாநில அரசு என்னென்ன முயற்சி எடுக்க வேண்டுமென்று நாங்கள் சொல்லி நான்கு நாட்கள் ஆகிவிட்டது, அதைப்பற்றி மாநில அரசு வாயே திறக்கவில்லை.

      உதாரணத்திற்கு ஓவ்வொரு மாநிலத்திலும் பத்து தமிழ் பயிற்று பள்ளிகளை உருவாக்குங்கள், முழு செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத தெரிவித்து இருந்தோம்" என்றார்.

    • வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை தமிழர்களுக்கு உதவி, தமிழக மீனவர்கள் விடுதலை விவகாரம்: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்

      மு.க.ஸ்டாலின்

      பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

      இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

      அந்த கடிதத்தில், "உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது" என தெரிவித்துள்ளார்.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

      மேலும், "இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தர வேண்டும்" என்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

      ஜெய்சங்கர்

      பட மூலாதாரம், HINDUSTAN TIMES

      மேலும், கடந்த 23-3-2022 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை உறுதி செய்திடுமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

    • வேலூர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை

      பாலியல் வன்கொடுமை

      பட மூலாதாரம், GETTY IMAGES

      வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதாகி சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளம் சிறார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில், இளம் சிறார் தவிர 4 பேருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பரிந்துரைத்ததை அடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ்குமார், பார்த்திபன், பரத் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    • இந்திய வரலாறு: '1857' சிப்பாய் கலகத்தின் முதல் தோட்டா விசை அழுத்திய மங்கள் பாண்டே

        • எழுதியவர், ரெஹான் ஃபசல்
        • பதவி, பிபிசி செய்தியாளர்
      மங்கள் பாண்டே

      பட மூலாதாரம், NIYOGI BOOKS

      படக்குறிப்பு, மங்கள் பாண்டேயின் புகைப்படம்

      வரலாற்றில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

      உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 35வது கட்டுரை இது.

    • அம்பேத்கர் குறித்து பாஜக - விசிக கருத்து மோதல்

      திருமாவளவன்: அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை இல்லை

      அண்ணாமலை: அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாஜக இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது

      தொல். திருமாவளவன் - அண்ணாமலை
    • வன்னியர் உள் இட ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் - அன்புமணி

      அன்புமணி ராமதாஸ்

      வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.

      பாமக காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, "பாமக பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

      வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். இல்லையென்றால் பாமகவினர் பற்றி தெரியும்.

      மதுவை அண்ணா ஏற்றுக்கொள்வில்லை. அண்ணா பெயர் வைத்து கட்சி நடத்தும் கட்சிகள் மதுவை விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் பூரண மது விலக்கே நம் நோக்கம்" என்றார்.

      பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது. பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா? நாட்டில் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியமாகும், மூன்றாவது மொழி சாத்தியமில்லை" என தெரிவித்தார்.

    • மதுரை கோயில் தீ விபத்து: ஆர்டிஐ பதில் சொல்லும் உண்மைகள்

    • ஸெலென்ஸ்கி: "ரத்தத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கிறீர்கள்?" - பிபிசிக்கு பிரத்யேக நேர்காணல்

      YouTube பதிவை கடந்து செல்ல
      Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

      YouTube பதிவின் முடிவு

    • இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து - மூன்று நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

      விபத்து

      திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

      பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், தன் நண்பர்கள் முத்துலாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் பாண்டி, கோபால் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பூசாரிபட்டியிலிருந்து நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

      வீட்டிலிருந்து கிளம்பி சிறிது தூரத்தில் நிலக்கோட்டை சாலையில் இவர்கள் மூன்று பேரும் சென்று கொண்டிருந்தபோது எதிரே வத்தலக்குண்டு நோக்கி வந்த தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

      இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. இவ்விபத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களும் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

      சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு போலீசார் இளைஞர்களின் உடலை கைப்பற்றி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுடன் காணொலி வாயிலாக உரையாடிய முதலமைச்சர்

      மு.க.ஸ்டாலின்

      பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

      முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களிடம் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலன் விசாரித்தார்.

      இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நடப்பு தேதிவரை 13 குடும்பங்களைச் சார்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 17 குழந்தைகள் உள்ளனர்.

      அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

      பல்வேறு நலத்திட்ட உதவிகள், அத்தியாவசிய பொருட்களும் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஹ்மான் முதல் ரஜினிவரை இந்தி திணிப்பை எதிர்ப்பது ஏன்? இதில் அரசியல் உள்ளதா?

    • அம்பேத்கர் பிபிசி உரையாடல்: கம்யூனிசமா ஜனநாயகமா? இந்தியாவுக்கு எது பொருந்தும்?

      அம்பேத்கர்

      ''இந்தியாவில் ஜனநாயகம் வேலை செய்யாது, காரணம் நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம்.''

      இந்த கருத்தை முன்வைத்தவர் வேறுயாருமல்ல இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவு குழுவின் தலைவராக இருந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.

      1953ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சி குறித்தும், சாதி ஒழிப்பு பற்றியும் பல சுவாரஸ்ய விஷயங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார் அம்பேத்கர். அந்த நேர்காணலை இந்த இணைப்புக்கு சென்று காணுங்கள்:

    • ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன?

      ரஷ்யப் போர்க்கப்பல்

      பட மூலாதாரம், MAX DELANY/AFP

      புதன்கிழமை ஏற்பட்ட வெடிப்பால் சேதமடைந்த ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டது என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

      மோஸ்க்வா என்றப் பெயருள்ள இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் உள்ள ரஷ்யக் கடற்படைக் கப்பல் தொகுப்பின் கொடிதாங்கிக் கப்பல்.

      சேதமடைந்த நிலையில் இந்தக் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்து வந்தபோது கடல் கொந்தளிப்பாக இருந்த காரணத்தால் அது மூழ்கிவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

      ரஷ்யாவின் ராணுவ பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கப்பல் யுக்ரேன் மீதான கடற்படைத் தாக்குதலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தது. 510 பணியாளர்களோடு இயங்கிவந்த கப்பல் இது.

    • தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

      மழை - வானிலை

      பட மூலாதாரம், GETTY IMAGES

      தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

      மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

      சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

      அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிசி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

      அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

      மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலங்கை அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம் - நேரலை

      இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆனது. இதுகுறித்த பிபிசி தமிழ் நேரலை.

    • மஹாராஷ்டிரா: ஆபத்தான முறையில் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்

      மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் பெண்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கின்றனர்.

      நாசிக் மாவட்டத்தில் உள்ள ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால், தாங்கள் 2 கி.மீ. நடந்து சென்று ஆழமான கிணற்றில் ஆபத்தான முறையில் இறங்கி தண்ணீர் எடுத்துவருவதாக, அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

      சில சமயங்களில் கிணற்றுக்குள் விழுந்தும் விடுவதாக அப்பெண்கள் கூறுகின்றனர். இந்த காணொளியை ஏ.என்.ஐ. செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

      இதுதொடர்பாக, நீர்ப்பாசன துறை மேற்பார்வை பொறியாளர் அல்கா அஹிராவ் கூறுகையில், "கடந்த ஆண்டைவிட நாசிக்கில் தண்ணீர் சூழல் மேம்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கையைப் பெற்று குடிநீர் தேவைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு விநியோகிப்பதற்கான தண்ணீரின் அளவை முடிவு செய்கிறோம். வரும் ஜூன் மாதம் வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது" என தெரிவித்தார்.