நன்றி நேயர்களே!
இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
மீண்டும் நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
மீண்டும் நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ` மாநில அரசின் செயல்பாடு தொடர்பாக நீங்கள் பேசிய பேச்சு சற்று வியப்பை அளிக்கிறது' எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசும்போது, `தமிழ்நாட்டில் உள்ள அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய கட்கரி, ` மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் தமிழ்நாட்டில் சாலைகளை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறும். நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. தமிழ்நாட்டில் சாலைப் பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கவும் தயாராக இருக்கிறோம். உதாரணமாக, கேரளாவில் நிலத்தைக் கையகப்படுத்துவதில் பிரச்னைகள் இருந்தாலும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்வத்துடன் இருப்பதால் அந்த மாநிலத்தில் சாலைகளை அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அதேபோல்தான், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் அவ்வாறு ஒத்துழைப்பு கிடைப்பதில்லை' எனப் பேசியிருந்தார்.
நிதின் கட்கரியின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். இதையடுத்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு விரிவான கடிதம் ஒன்றை மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.அதில் நெடுஞ்சாலைத் துறைத் திட்டங்களின் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர், நிதின் கட்கரியின் பேச்சு தமக்கு வியப்பை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்தெந்த விஷயங்களில் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்பதைக் குறிப்பிட்ட அவர், தமது ஒத்துழைப்புக்கும் உறுதி அளித்தார். முதல்வரின் முழு கடிதத்தையும் கீழே உள்ள அவரது டிவிட்டர் பதிவில் காணலாம்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடத்துவது சம்பந்தமாக, உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆன்லைனில் பருவத் தேர்வு நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு வருகின்ற பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் பருவத் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அந்த வழிகாட்டுதலில், பருவத் தேர்வுகளை மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே எழுதும் வகையில் Take home முறையில் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் என்றும் கூகுள் கிளாஸ்ரூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் அல்லது இமெயில் மூலம் தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளை மீண்டும் அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும் என்றும் இத்துடன் இன்னும் சில நடைமுறைகளும் கொடுத்துள்ளனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவர் ரேச்சல் ஹேகோ ஃபிளின்ட் கோப்பையையும் பெறுகிறார் என்று அறிவித்துள்ளது ஐ.சி.சி.
இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கிரிக்கெட் அனைத்து வடிவங்களிலும் 2021ம் ஆண்டில் சிறப்பாக விளையாடியுள்ளார் மந்தனா. குறிப்பிட்ட ஆண்டில் அவர் 22 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 855 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 38.86 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் ஒரு சதமும் ஓர் அரை சதமும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த லிமிட்டட் ஓவர் தொடரில் 8 போட்டிகளில் இந்தியாவில் விளையாடப்பட்ட இரண்டு போட்டியையும் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியில் மந்தனா மிகப்பெரிய பங்காற்றினார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு இன்னும் மிடில் ஆர்டர் கிடைக்கவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அணியின் திறமையை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மறுபுறம், வீரர்களின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் திறமைகளை பயன்படுத்துவதில் சமமின்மை இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆம், டெம்ப்ளேட்டை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வெளிப்படையாக, டெம்ப்ளேட்டின் பெரும்பகுதி என்பது அணியின் சமநிலையைப் பொறுத்தது," என்றார்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடும் இலங்கை அரசாங்கதின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூட்டணி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கோரிக்கை விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் கூறுகையில் "இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய எடுத்த தீர்மானத்தை மனிதாபிமான ரீதியில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் குறுகிய அளவு கடல் எல்லை காணப்படுவதால், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது என்பது, முற்றிலும் அறியாத செயல்," என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் நோக்கிலேயே, இலங்கை கடற்பரப்பிற்குள் வருகின்றனர். இதனால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயல் கிடையாது என்றும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் பட்சத்தில், அந்த மீனவர்கள் பொருளாதார ரீதியில் பல சிரமங்களை எதிர்நோக்குவார்கள். அதுமட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டால், அந்த மீனவர்கள் முழுமையாகவே பாதிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய மீனவர்களின் படகுகளை அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கும் பட்சத்தில், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி கதீட்ரல் தேவாலயத்தை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் அந்த தேவாலயத்தின் வாயிலில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு புனித செபஸ்தியர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக தேவாலய நிர்வாகம் புகார் அளித்துள்ள நிலையில் ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில், அதிகமான தமிழகக் கோயில்களுக்கு மத்திய அரசின் BHOG சான்றிதழ்கள் பெற்றதற்காக கோயில் செயல் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் மத வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் பிரசாதங்களை பரிசோதித்து சுத்தமான சுகாதாரமான பிரசாதங்களை கொடுக்கிறார்கள் என்று BHOG என்ற தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் தயாரிக்கப்படும் 314 திருக்கோயில்களின் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுகாதாரத்துடன் வழங்கப்படுவதைப் பாராட்டி BHOG சான்றிதழ் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
இந்த சான்றிதழுக்காக கோயில் செயல்களைப் பாராட்டி வாழ்த்தியதாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் இறந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சுற்றி அதிக அளவில் வனப்பகுதிகள் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.
அவ்வாறு கடந்த நவம்பர் மாதம் 75-க்கும் மேற்பட்ட யானைகள் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களான மாரசந்திரம், கொத்தூர், லக்கசந்திரம், திம்மாசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை சேதம் செய்து வந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் .
இதனையடுத்து வனத்துறையினர் இந்த யானைக் கூட்டத்தை பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த இரண்டு யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றி திரிந்து வந்தன.
இந்தநிலையில் இன்று காலை சாப்ரானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கரம்மா என்ற 35 வயது பெண், விவசாய வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது சீனிவாசபுரம் ஏரி அருகே இரண்டு காட்டு யானைகளும் திடீரென சங்கரமாவை தாக்கி கீழே தள்ளி யானைகள் மிதித்தன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திய சரத் பவார், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டுத் தனிமையில் இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லி காவல்துறையால் பொதுமக்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி, டெல்லி காவல்துறையின் பாதுகாப்புச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களுக்கு டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சரியான நேரத்தில் விழா நடைபெறும் இடத்தை அடையுங்கள், குடியரசு தின விழாவை காண வரும் பார்வையாளர்கள் குறிப்பிட்ட இடத்திலேயே அமர வேண்டும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், அதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்த ஆண்டு 15 வயதுக்குட்பட்டவர்கள் குடியரசு தின அணிவகுப்பு விழாவை காண அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பூலுவாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முறையான அனுமதியின்றி உள்ளே நுழைந்து சுவரில் பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை மாற்றிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆலாந்துறைக்கு உட்பட்ட பூலுவாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் எந்தவித அனுமதியும் இன்றி பிரதமர் மோதி புகைப்படத்தை பாஜகவினர் சிலர் உள்ளே நுழைந்து உள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நடந்துள்ளது.
இதற்கு பேரூராட்சி அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவோம் என அவர்கள் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் பாஸ்கரன் இதே போல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோதியின் புகைப்படத்தை மாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தன்னுடைய முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று பூலுவாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரங்கசாமி இது சம்பந்தமாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் பாஸ்கரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். அந்தப் பள்ளியின் வார்டன் சகாயமேரி தொடர்ந்து தன்னை திட்டி வேலை வாங்கியதாக கடந்த 9-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து 19-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவியை மதமாற்றம் கொடுமையால் உயிரிழந்ததாகவும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி அரியலூர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"ஏக் மௌகா கேஜ்ரிவால் கோ"- என்ற பிரசாரத்தை இன்று முதல் தொடங்குகிறோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
"இந்தப் பிரசாரத்தில் டெல்லி மக்கள் மற்ற மாநில மக்களுக்கு ஆம் ஆத்மி ஆட்சியில் செய்த பணிகளைப் பற்றி வீடியோக்களை உருவாக்கி, வரக்கூடிய தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுங்கள். இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுங்கள்" என அவர் தெரிவித்தார் .
5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையமே டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்வது இதுவே முதல் முறையாகும்.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற அரசியல் விவகாரம் குறித்து ஆதாரமில்லாத தகவல்களை வெளியிட வேண்டாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளரை சந்தித்த அவர், பள்ளி கல்வியைப் பொறுத்தவரையில் சாதி, மதம் மற்றும் அரசியல் உள்ளிட்ட தலையீடு இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அரியலூரில் உயிரிழந்த மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திடமும் பள்ளியின் இன்னாள் முன்னாள் மாணவர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
உண்மை நிலவரத்தை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. மரண வாக்குமூலம் என்பது குறிப்பிட்ட துறையின் மூலமே பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு அதை செய்ய முற்பட்டுள்ளது தவறானது என்றும் சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறினார்.
ஐந்து மாத சவாலுக்குப் பிறகு, தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜாரா ரதர்ஃபோர்ட்.
19 வயதான ஜாரா ரதர்ஃபோர்ட், கடுமையான வானிலை காரணமாக திட்டமிட்டதை விட இரண்டு மாதங்கள் கழித்து பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ்க்-வெவெல்ஜெம் என்ற பகுதியில் தரையிறங்கியுள்ளார்.
இந்த பயணத்தின் போது, அவர் அலாஸ்காவின் நோம் என்ற இடத்தில், ஒரு மாதக்காலமும், ரஷ்யாவில் 41 நாட்களும் இருந்துள்ளார்.
பெல்ஜியம் திரும்பியதும், வின்செஸ்டரில் உள்ள செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவியை, அவரது குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்களும் வரவேற்றனர்.
தன்னுடைய சிறுவயதில் இருந்தே இசை மீதான ஈர்ப்பில் பல்வேறு இசை மற்றும் ஆட்டக் கலைகளை கற்று அதை ஆவணப்படுத்தி இருக்கிறார் மணிகண்டன்.
ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் நண்பர்களுடன் அருவியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சஷ்டி குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்புக்கு சென்றதாகவும் கடந்த ஜனவரி 15 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது சஷ்டிகுமார் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இறந்த அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்திடுமாறு முன்னாள் துணை முதலமைச்சரும் தற்போதைய போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ஜனவரி 24 அதிகாலை 02.15 மணியளவில், இறந்த சஷ்டி குமாரின் உடல், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
சமூக ஊடகங்களில் தாம் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் பல தளங்களிலும் இருந்தும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டதாகக் கூறியிருக்கிறார் லண்டனைச் சேர்ந்த சுஃபி சார்ல்ஸ்.
இது குறித்து பிபிசி தமிழுக்கும் அவர் பிரத்யேகமாக பேசியிருக்கிறார்.
"நான் 2018ஆம் ஆண்டு என்னுடைய யூட்யூப் சேனலை தொடங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினேன். மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதில், கண்ணாடி முன் நின்று பேசி பார்ப்பது பிடிக்கும். இன்று, எனக்கு ஒரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று கூறுகிறார் லண்டன் தமிழச்சி என்று அழைக்கப்படும் சுபி சார்ல்ஸ்.
இவர் 'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
கடந்த ஜனவரி 17-ஆம் அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை திமுக அரசு வழங்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குளித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருந்ததாகவும், ஆழமான பகுதியாக அது இல்லை என்றும் கூறியுள்ளார்.
தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு திமுகவினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன் அந்தப் பகுதி ஆழமான பகுதியாகிவிட்டதாகவும் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக் காரணம் என்றும், இதனை மூடி மறைக்கும் பணியில் ஆளும் கட்சியினரும்,அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும், அதனை அரசு நிர்வாகம் வேடிக்கைப் பார்த்ததும்தான் காரணம் என்பதாலும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” அந்த அறிக்கையில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.