You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நரேந்திர மோதி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொளி மூலம் ஆலோசனை

மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாக கருத்து கேட்பார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. ஜனவரி 21ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. லக்கிம்பூர் கேரி: கைதான ஏழு பேரில் நான்கு பேர் மீது கொலை வழக்கு விசாரணை: புலனாய்வுக்குழு

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த வன்முறையின் போது ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) உறுப்பினர்கள் இறந்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    பாஜக தொண்டர் சுமித் ஜெய்ஸ்வால் அளித்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் 500 பக்க குற்றப்பத்திரிகையை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.

    லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் நான்கு விவசாயிகளும் ஒரு பத்திரிகையாளரும் வேகமாக வந்த வாகனத்தால் ஏற்றிக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு, 3 பேரை கொன்றதாக ஏழு பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதான ஏழு பேரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    லக்கிம்பூர் கேரி வழக்கு, உத்தர பிரதேச மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெடித்த வன்முறை சம்பவம் தொடர்பானது.

    அதில் 4 விவசாயிகள், இரண்டு பாஜகவினர், ஓட்டுநர் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  3. யதி நரசிங்கானந்த் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஒப்புதல்

    உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக சமீபத்தில் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக, யதி நரசிங்கானந்த் என்ற சர்ச்சை சாமியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்க சமூக செயல்பாட்டாளர் ஷாசி நெல்லிக்கு இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரான (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

    "இந்த அமைப்பை நம்புபவர்கள், இந்த அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்றத்தில், ராணுவத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு நாயை போல சாவார்கள்" என்ற நரசிங்கானந்தின் கூற்று, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை இழிவுபடுத்தும் முயற்சி என்று கே.கே. வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 15வது பிரிவின்படி, தனி நபர் ஒருவர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் முன்பாக அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

    அந்த அடிப்படையில் கே.கே. வேணுகோபாலின் அனுமதியைக் கோரி ஷாசி நெல்லி கடிதம் எழுதியிருந்தார்.

    நரசிங்கானந்த் பேசிய காணொளி சமூக வலைதளமான ட்விட்டரில் வைரலாக பரவி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

  4. பிரியந்த குமார கொலை − முதல் குற்றவாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    பாகிஸ்தான் சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனமாக த நேசன் செய்தி வெளியிட்டுள்ளது.

    பிரியந்த குமார தியவடனவின் கொலையுடன் தொடர்புடைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, கொலையை நியாயப்படுத்தி ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    அத்துடன், 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    சியல்கோர்ட் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி பிரியந்த குமார தியவடன, நூற்றுக்கணக்கானோரினால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

    மத நிந்தனையில் ஈடுபட்டார் என கூறியே, நூற்றுக்கணக்கானோர் இவரை அடித்து கொலை செய்து, பின்னர் உடலுக்கு தீ வைத்திருந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பில் 130திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதன்படி, கொலையை நியாயப்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றிய நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதையடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட 34 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வழங்கியதுடன், பிரியந்த குமாரவின் ஒரு மாத சம்பளமான 1667 டொலர் தொகையையும் மனைவியின் வங்கி கணக்குக்கு அண்மையில் வைப்பிலிட்டிருந்தது.

  5. இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சனிக்கிழமை (ஜனவரி 23) காலை 11 மணியளவில் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடவிருக்கிறார்.

    மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாக கருத்து கேட்பார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செயல்திறனை மதிப்பாய்வு செய்யவும், எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியவும் இதுபோன்ற தொடர்பு உதவும் என்று நம்பப்படுகிறது.

    மேலும், மக்கள் நல திட்டங்களின் செயல்பாட்டில் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்து, மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டங்களை இயக்கமாக எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டே இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  6. கீழடியில் அகழாய்வு மற்றும் அருங்காட்சியக பணிகளுக்காக நில அளவீடு தொடக்கம்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்காகவும், திறந்த வெளி அருங்காட்சியக பணிகளுக்காகவும் வருவாய்துறை சார்பில் நிலம் அளவீடு பணி இன்று நடைபெற்றது.

    கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கதிரேசன் என்பவரது நிலத்தில் நடத்தப்பட்டது. இதில் உலைகலன், இணைப்பு குழாய் பானைகள், தமிழகத்திலேயே மிகப்பெரிய உறைகிணறு (32 அடுக்கு), சரிந்த கூரை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.

    6ஆம் கட்ட அகழாய்வு முடிந்த பின் உறைகிணறு உள்ளிட்ட பொருட்களின் மேல் தார்ப்பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் மண் கொண்டு மூடப்பட்டது.பின் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் போது அந்த பொருட்களை அப்படியே எடுக்க முடியும் என தொல்லியல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

    கீழடியில் கதிரேசனுக்கு சுமார் ஆறு ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்புகள் உள்ளன.

    இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதனை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

    ஆனால் நிலத்தின் மதிப்பு குறித்து அதிகாரிகள் தெரிவிக்காததால் நிலத்தை தர கதிரேசன் உள்ளிட்ட நில உரிமையாளர்கள் மறுத்து விட்டனர்.

    சமாதான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து 8ஆம் கட்ட அகழாய்வு பணிகளும் நடைபெற நிலம் தர கதிரேசன் சம்மதிக்கவில்லை.

    6ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு, தரை தளம் ஆகியவற்றின் தொடர்ச்சியை கண்டறிய தொல்லியல் துறை முடிவு செய்திருந்தது.இந்நிலையில் இன்று திருப்புவனம் தாசில்தர் ரத்னவேல்பாண்டியன், தொல்லியல் அலுவலர் ரமேஷ் , நில உரிமையாளர் கதிரேசன் முன்னிலையில் வருவாய்துறை அதிகாரிகள் 6ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை அளவீடு செய்துள்ளனர். தற்போது மொத்தம் ஒரு ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 30 சென்ட் பரப்பளவில்தான் கடந்த 6ம் கட்ட அகழாய்வு நடந்தது. எனவே மீதமுள்ள இடத்தை 8ஆம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

    உரிய அனுமதி கிடைத்த பின் 8ஆம் கட்ட அகழாய்வு. பணி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  7. சிவகங்கை எஸ்பி, சுகாதார அதிகாரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சிவகங்கை மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ராம் கணேஷுக்கு கொரானா தொற்று. கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  8. கேண்டி கிரஷ் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் ரூ. 5 லட்சம் கோடி கொடுத்து வாங்குவது ஏன்?

    ஆக்டிவிசன் பிளிசார்ட் என்கிற கால் ஆஃப் டியூட்டி, கேண்டி கிரஷ் போன்ற பிரபல கேம்களைத் தயாரித்த நிறுவனத்தை, 5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க உள்ளது மைக்ரோசாஃப்ட்.

  9. "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சித்தாந்தத்தை முன்னெடுங்கள். அது தான் இந்தியாவுக்கு தேவை" - சி.கே.போஸ் கருத்து

    இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி இன்று அறிவித்தார்.

    இது தொடர்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சி.கே.போஸ் கூறுகையில், "மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். உண்மையிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை கெளரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற அவரின் சித்தாந்தத்தை முன்னெடுங்கள். அதுதான் இந்தியாவுக்கு தேவை" என்றார்.

  10. 'ஜெய்பீம்' ஆஸ்கர் தளத்தில் இடம்பெற காரணம் இதுதான் - இயக்குநர் ஞானவேல்

    சூர்யாவின் 'ஜெய் பீம்', மோகன்லாலின் 'மரக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹம்' ஆகிய படங்கள், 2022இல் ஆஸ்கார் சிறந்த திரைப்படத்திற்கு தேர்வாவதற்கான தகுதியைப் பெற்றுள்ளன. இந்த படங்களுக்கான இறுதிப்பரிந்துரை வரும் பிப்ரவரியில் அறிவிக்கப்படும்.

    'ஜெய்பீம் குறித்தும், ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது பற்றியும் த. ச. ஞானவேலிடம் பேசினோம்.

    கடந்த வருடம் நவம்பரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி ஓடிடி தளத்தில் த.ச. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் வெளியானது 'ஜெய்பீம்' திரைப்படம். திரைப்படங்களுக்கான ரேட்டிங் கணக்கிடும் IMDB தளத்தில் அதிக ரேட்டிங் (9.6 புள்ளிகள்) பெற்று 'ஜெய்பீம்' முதலிடம் பெற்றது.

  11. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இதனால் நோய்த் தொற்று அதிக அளவில் பரவும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  12. தமிழ்நாடு: நெருக்கடியில் ஜவுளித்துறை, அதிகரிக்கும் பருத்தி விலை - அரசு என்ன செய்யப்போகிறது?

    இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது ஜவுளித்துறை. இந்தியாவில் நான்கரை கோடி மக்கள் இந்த துறை மூலம் நேரடியாகவும், பல கோடி பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய ஜவுளித்துறை தற்போது மூலப் பொருட்கள் விலை உயர்வு, விசைத்தறி வேலைநிறுத்தம் என நெருக்கடியான ஒரு சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 7% ஜவுளித்துறையின் பங்களிப்பாக உள்ளது.

    ஜவுளித்துறைக்கு அடிப்படையான மூலப் பொருளாக விளங்கக்கூடியது பருத்தி. அதிலிருந்து நூல் தயாரிக்கப்பட்டு விசைத்தறி மூலம் துணியாக மாற்றப்பட்டு பல தரப்பட்ட ஜவுளிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

  13. தமிழ்நாட்டில் ஜனவரி 23-ஆம் தேதி முழு பொதுமுடக்கம் - முதலமைச்சர் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் திரிபு நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல் வருகின்ற ஜனவரி 23-ஆம் தேதியும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  14. முக கவசம் அணிய மறுத்ததால் புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறங்கியது.

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 38 என்ற விமானம் ஒன்று மியாமியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் மியாமிக்கே திரும்பியது.

    அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் முக கவசம் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    விமானம் மீண்டும் மியாமிக்கு திரும்பியவுடன் சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சக பயணி ஒருவர் கூறும்போது, முழுமையான தகவல்கள் எங்களுக்கு சொல்லப் படவில்லை. ஆனால், விமானத்தில் ஒரு பயணி தவறுதலாக நடந்து கொண்டார் என்று தெரிவித்தார்.

    அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானம் மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  15. அமர் ஜவான் ஜோதியை அணைக்க கடும் எதிர்ப்பு

    இந்தியத் தலைநகர் டெல்லியில், இந்தியா கேட்டில், இந்தியா சார்பாக ராணுவ பணியில் உயிரிழந்த முப்படையினர் நினைவாக எழுப்பப்பட்ட அமர்ஜவான் ஜோதி வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அணைக்கப்பட்டு, தேசிய போர் நினைவகத்தில் ஒன்றாக இணைக்கப்படுமென நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியானது.

    ஜோதியை அணைக்கும் நிகழ்வு இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் படையினரின் கூட்டுத் தலைவராக இருக்கும் ஏர் சீப் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, நெருப்பை இணைக்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாகவும் செய்தி வெளியானது.

    அமர் ஜவான் ஜோதியை அணைப்பது தொடர்பான செய்திக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.

    அதைத் தெளிவுபடுத்தும் விதத்தில், அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை, அது தேசிய போர் நினைவகத்தில் எரியும் ஜோதியோடு இணைக்கப்படுகிறது என மீண்டும் அரசு தரப்பிலிருந்து விளக்கப்பட்டது.

  16. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 65 வயது பாட்டியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற வாலிபர் கைது.

    தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 65 வயது பாட்டியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாகக் கூறி இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி என்ற கிராமத்தில் வ.உ.சி தெருவில் 65 வயதான பாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.

    அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர், பாட்டி வீட்டில் இரவில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து, துணியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற அந்த நபர் பிறகு தப்பி ஓடியிருக்கிறார். நடந்த சம்பவத்தால் காயமடைந்த பாட்டி, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பாட்டியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாகவும் அவரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறி மணிகண்டன் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  17. பழைய ஜீப்... ஆனாலும் புதுமை - மகேந்திரா உரிமையாளரின் ஜீப்பை ஏற்க மறுத்த கண்டுபிடிப்பாளர்

    உங்களுடைய ஜீப்பை எங்களுடைய அருங்காட்சியகத்துக்கு கொடுங்கள், அதற்கு பதிலாக புதிய பொலீரோ ஜீப்பை தருகிறோம் என மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியபோதும் அதை அன்புடன் நிராகரித்து இருக்கிறார் இந்த கிராமவாசி. ஏன் அப்படி செய்தார்?

    முழுமையான விவரத்தை இந்த காணொளியில் பாருங்கள்.

  18. மாணவி தற்கொலை விவகாரம் - பெற்றோரின் 2வது புகாரின் அடிப்படையிலும் விசாரணை

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது பெற்றோர் அளித்த இரண்டாவது புகார் அடிப்படையிலும் விசாரணை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று திருச்சி மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "இறந்த பிளஸ் 2 மாணவியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த, மாணவி தோல் வியாதிக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்," என்று கூறினார்.

    மாணவியை வேலை செய்யச் சொல்லி விடுதி வார்டன் துன்புறுத்தி வந்ததாக அவரது பெற்றோர் முதலில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் இரண்டாவதாக நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில், தங்களுடைய மகளை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ஐஜி பாலகிருஷ்ணன் கூறினார்.

    மேலும், சிறார் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை குறிப்பிட்டு அவரது விவரங்களை சமூக வலைதளங்களில் காணொளியாக பகிர்ந்து விஎச்பி பிரமுகர் முத்துவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்த செய்தி குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  19. சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் நிலை என்ன?: அமைச்சர் எ.வ. வேலு தகவல்

    சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை குறித்து மத்திய அரசிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லையென மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    சென்னையில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த வால் டாக்ஸ் சாலையில் நடந்துவரும் பணிகளை இன்று காலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, "வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அளித்துள்ள அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சென்னை முழுவதும் பணிகள் துவங்கப்பட்டு அடுத்த மழைக்காலத்திற்குள் முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இதற்குப் பிறகு, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை பணிகள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

    ஆகவே முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு கடிதம் ஏதும் வரவில்லை என்றும் அப்படி தகவல் ஏதும் வந்தால் முதல்வரின் ஆலோசனையின்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.

  20. தமிழ்நாடு அமைச்சர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

    தமிழ்நாடு அமைச்சர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி சிகிச்சைபெற்று வருவதோடு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் அரியலூரில் உள்ள தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துவருகிறார்.

    அதேபோல மாநில வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு நேற்றிரவு செய்யப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவுகள் இன்று காலை வெளிவந்தது. அவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் மதுரையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மதுரையில் நடந்த அரசு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.

    மேலும்வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரும் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைபெற்று வருகிறார்.