இலங்கையில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் கடந்த மூன்றாம் தேதி அடையாளம் காணப்பட்டிருந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேரலை நிறைவடைகிறது

    நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. உக்ரைன் தொடர்பாக புதினை எச்சரிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

    புதின்

    பட மூலாதாரம், Getty Images

    உக்ரைனைத் தாக்கும் ரஷ்யாவின் நோக்கம் குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருக்கிறது.

    உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது மிகப் பெரும் பிரச்னையை உருவாக்கும் என 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.

    பிரசஸ்ஸில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு முடிந்தவுடன் இந்த எச்சரிக்கையை ரஷ்ய அரசுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    உக்ரைன் எல்லையில் ஆயுதக் குவிப்பைக் குறைக்கவும் பதற்றத்தைத் தணிக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவு வலியுறுத்துகிறது.

  3. அரசியலில் இருந்து விலகிய 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்

    நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதரன் அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    'மெட்ரோ மேன்' என்று பரவலாக அறியப்பட்ட 90 வயது ஸ்ரீதரன் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல முக்கிய மெட்ரோ ரயில் பாதை கட்டுமானங்களுக்கு தலைமை பொறுப்பில் இருந்தவர்.

    "காலம் கடந்து விட்டது; நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன்; மேற்கொண்ட எனக்கு அதில் ஆர்வம் இல்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவை தேர்தலில் தாம் தோல்வி அடைந்தது தமக்கு சிறு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் மாநிலத்தில் ஆட்சி இல்லாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாலக்காடு தொகுதியில் களம் இறங்கிய அவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    "மெட்ரோ மேன்" ஸ்ரீதரன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, "மெட்ரோ மேன்" ஸ்ரீதரன்
  4. இந்த அரசு உண்மையைக் கண்டு அஞ்சுகிறது - ராகுல் காந்தி

    வங்கதேசப் போர் வெற்றி நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நாட்டிற்காக 32 தோட்டாக்களை வாங்கிய அவர் பெயரய் அழைப்பிதழில் இல்லை. ஏனென்றால் இந்த அரசு உண்மையைக் கண்டு அஞ்சுகிறது என்று டேராடூனில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.

    1971 போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்கிறேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் இந்தியா அந்தப் போரில் வெற்றி பெற்றது என்று அவர் கூறியுள்ளார்.

  5. இலங்கையில் 4 பேருக்கு கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு உறுதி

    இலங்கையில் கோவிட் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

    தமது ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் (16) புதிதாக மூன்று ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

    இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் கடந்த மூன்றாம் தேதி அடையாளம் காணப்பட்டிருந்தார்.

    இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

    இலங்கை

    பட மூலாதாரம், twitter

  6. வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா

    தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதனுக்கு கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    சாமிநாதன் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா

    பட மூலாதாரம், MP Saminathan facebook

  7. உண்மையைக் கண்டு அரசு அஞ்சுகிறது: ராகுல் காந்தி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    வங்கதேசப் போர் பற்றிய நிகழ்ச்சியில் இந்திரா காந்தி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    "நாட்டுக்காக 32 குண்டுகளை உடலில் வாங்கிய பெண்மணியின் பெயர் அழைப்பிதழில் கூட இடம்பெறவில்லை. ஏனென்றால் இந்த அரசு உண்மையைக் கண்டு அஞ்சுகிறது" என்று டேராடூனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.

  8. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸ்

    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆண்டு காதர்மீரான் என்பவர் மாரிதாஸ் மீது அளித்த புகாரில் நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் போலீசார் திடீர் நடவடிக்கையாக இன்று மாரிதாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தேனியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் மாவட்ட நீதின்றம் ஜேஎம்-5ல் நீதிபதி விஜயலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி தொடர்ந்து 30.12.2021 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    நீதிபதி உத்தரவை தொடர்ந்து மாரிதாஸ் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் தேனி அழைத்து செல்லப்பட்டார்.

  9. திருச்சியில் காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

    தமிழக முதலமைச்சரின் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மூன்று நிலைகளில் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதில் காவல்துறையில் பணியாற்றக்கூடிய அனைத்து நிலை அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்களுக்கும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 ஆணையரகங்களில் காவல் துணை ஆணையர்களால் 5236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.

    தொடர்ந்து இன்று 16.12.21 மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் மற்றும் திருச்சி மாநகர காவலர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் முகமானது இன்று நடைபெற்றுவருகிறது. அதில் கலந்து கொண்ட மாநகர காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு 600 மனுக்களை பெற்று அதற்கான தீர்வுகளை கண்டறிந்து வருகிறார்.

    மேலும் தெற்கு மண்டலத்திற்கு சென்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த முகாமில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் சரவணசுந்தர், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

  10. வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    வன்னியர் சாதிக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னிய சமூக மக்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு அளித்தது. சட்டமன்றத் தேர்தலை கணக்கில் வைத்தே அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு அளித்ததாகவும் பேசப்பட்டது.

    அதேநேரம், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் செய்வதாகக் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட வன்னியர் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

  11. இந்தியாவில் பெண்களின் திருமண வயதை உயர்த்த ஒப்புதல்

    இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21 வயதாக உயர்த்த இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    2020 சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோதி பெண்களுக்கான திருமண வயது இவ்வாறு உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

    குழந்தை திருமண தடை சட்டம், இந்து திருமண சட்டம் ஆகியவற்றில் இதற்காக வழிவகை செய்யும் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  12. 2022 குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்த புதின்

    Russia - China

    பட மூலாதாரம், Getty Images

    பெய்ஜிங்கில் வரும் 2022ம் ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் நிகழ்ச்சியில், தான் கலந்து கொள்ளப்போவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் முக்கிய தலைவர் புதின் ஆகிறார்.சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் புதன்கிழமையன்று காணொளி அழைப்பு மூலம் பேசிய புதின், அவரை சந்திக்க ஆர்வம் தெரிவித்தார். "சர்வதேச விளையாட்டு கூட்டுறவு விவகாரத்தில், நாம் ஒருவருக்கொருவர் எப்போதும் ஆதரவு அளித்து கொள்வோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்", என்று புதின் தெரிவித்திருப்பதாக, 'தி குளோபல் டைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது.சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை சுட்டிக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நிகழ்ச்சிக்கு தங்களின் அதிகாரிகளை அனுப்பாமல் புறக்கணிப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தன. இந்த புகாரை சீனா மறுத்துள்ளது.

    இந்நிலையில், ரஷ்ய அதிபர் தனது வருகையை உறுதி செய்துள்ளார். அதிபர் புதினின் தலைமையின் கீழுள்ள ரஷ்யா, பொருளாதாரம், ராணுவம் மற்றும் அறிவியல் தொடர்பான விவகாரங்களில் சீனாவுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது.

  13. யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது

    மாரிதாஸ்

    பட மூலாதாரம், @MARIDHASANSWERS TWITTER HANDLE

    நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020 அன்று காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67, என நான்கு பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருந்தது.

    இன்று அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    முன்னதாக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  14. பிரிட்டனில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா - ஒரே நாளில் 78,610 பேர் பாதிப்பு

    UK - Corona

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா தொற்றுநோய் பரவிய காலம் முதல், பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமையன்று உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு புதன்கிழமையன்று 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு முன், கடந்த ஜனவரி 8ம் தேதி 68,053 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். அப்போது அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, "இந்த எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கும்", என்று கூறியுள்ளார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சமூக கொண்டாட்டங்கள் தொடர்பாக மக்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்று கூறினார். கடந்த இரண்டு நாட்களாக, சில பகுதிகளில் பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

    மேலும் பேசிய பேராசிரியர் விட்டி, இரண்டு விதமான நோய் தொற்று நாட்டில் பரவி வருவதாக தெரிவித்தார். ஒன்று, வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் திரிபு; மற்றொன்று டெல்டா திரிபு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தமிழகம், இந்தியா மற்றும் உலகளவிலான முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.