You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

குரூப் கேப்டன் வருண் சிங் காலமானார்

டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங்உயிரிழந்துவிட்டார் என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இன்று காலை குரூப் கேப்டன் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேரலை நிறைவடைகிறது

    நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

    தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

  3. முன்னுதாரணமாக குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் விருதுநகரைச் சேர்ந்த கணேஷ் பெருமாள் என்பவர் குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

    விருதுநகரைச் சேர்ந்தவர் கணேஷ் பெருமாள். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது இவருக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது தனது குடும்ப வருமானம் மிகவும் குறைவாக உள்ளது என்பதால் மேலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பாத இவர் தனது மனைவியை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    ஆனால் இவரது மனைவிக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாததால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலவில்லை. எனவே விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப நல செயலகம் சார்பாக நவம்பர் 29ஆம் தேதி முதல் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் மற்ற ஆண்களுக்கு முன் உதாரணமாக இருக்க குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

    இதற்காக யூடியுபில் பல்வேறு விளக்க டியோக்களை பார்த்து தெளிவும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று இவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

    இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கணேஷ் பெருமாள், சுகப்பிரசவம் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதால் பல்வேறு பின் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இதனை தடுப்பதற்காக ஆண்கள் மிக இலகுவான குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்கள் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டு முன்னுதாரணமாகவும் பெண்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கணேஷ் கேட்டுக் கொண்டார்.

  4. நாகப்பட்டினம் - படகு கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

    நாகப்பட்டினம் துறைமுகம் தோணி துறையில் உள்ள படகு பழுது நீக்கும் இடத்திலிருந்து சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த சில வாரங்களுக்கு முன் பழுது நீக்கம் செய்ய கரையில் ஏற்றப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் படகு பழுது நீக்கும் பணி நிறைவு பெற்றதால் இன்று காடம்பாடி சுனாமி குடியிருப்பு சவேரியார் கோவில் பகுதியை சேர்ந்த தோமஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விசைப்படகினை கரையிலிருந்து ஆற்றில் இறக்கும் பணியை மேற்கொண்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகு பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தோமஸ், கடலூரை சேர்ந்த திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன் ஆகியோர் விசைப்படகின் அடியில் சிக்கிக் கொண்டனர்.

    இதனையடுத்து உடனடியாக பொக்லின் இயந்திர உதவியுடன் படகின் அடியில் இருந்த 3 வரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் தோமஸ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    மேலும் திருச்செல்வம் ஆதிநாராயணன் ஆகியோருக்கு நாகை மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  5. தங்கமணி வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - இதுவரை கிடைத்தது என்ன?

    அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் இதுவரை கிடைத்தது என்ன என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த சோதனையில் 2,37,34,458 ரூபாய் பணம், 1.13 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய் பணம், சான்று பொருட்களான கைபேசிகள் பல வங்கி பாதுகாப்பு பெட்டகங்ககளின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

  6. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: ' உரிமைகளை நிலை நிறுத்துவோம்'

    "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தின் கீழ் பணி நியமனம் பெற்றவர்கள் சன்னதிகளில் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை நடு நிலையோடு நிலை நிறுத்துவோம்," என்று இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியுளளார்.

    திருச்சி வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இன்று ஆய்வு நடத்தினார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

    ஜாகீர் உசேன் விவகாரம் குறித்து காவல் துறை, அற நிலையத்துறைகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை அடிப்படையில், நிச்சயம், உறுதியான, நடுவிலையோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ரங்கராஜன் என்பவரின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு, இந்த குற்றச்சாட்டுகள் நடு நிலையோடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை சட்டத்தின்படிதான் அணுக வேண்டும். சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்கிற நிலையை அரசு அனுமதிக்காது. பிரிவினை ஏற்படுத்துகிற, பிரிவினைவாதத்தை உருவாக்குகிற எந்த சக்தியை இந்து சமய அற நிலையத்துறை ஏற்றுக்கொள்ளாது என்றார் சேகர்பாபு.

  7. 'நேரடியாக எதிர்க்க திராணியல்லாத திமுக' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சோதனை நடத்துகிறது என்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    நேரடியாக எதிர்க்க திராணியல்லாத திமுக, லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டுள்ளது . தமிழகம் முழுவதும் கழக அமைப்பு தேர்தல் சிறப்பாக, எழுச்சியோடு நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் வளர்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக அரசு இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத் தக்கது என்றார் எடப்பாடி பழனிசாமி.

    திமுக தேர்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகளை வழங்கினர். அவற்றை செயல்படுத்த முடியாததால், மக்களை திசை திருப்பவே இதுபோன்று வழக்கு தொடுக்கின்றனர் என்று கூறிய அவர், குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய், எரிவாயு மாணியம், கல்விக் கடன் ரத்து, முதியோர் உதவித் தொகையை உயர்த்துவது, டீசல் விலை குறைப்பு இவற்றை எல்லாம் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

  8. தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு மீண்டும் சிறை

    ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் பரோலை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

    சிறைக்கு வெளியில் இருந்த காலத்தை, அவருக்கு விதிக்கப்பட்ட 15 மாத தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கக்கூடாது என்றும் பிரிட்டோரியா நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் ஜூமாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜூலையில் அவர் சரணடைந்தார்.

    79 வயதான அவர், மருத்துவக் காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். இப்போது பரோல் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும்.

  9. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை, பிரபுராவ் ஆனந்தன்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு நபர் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தினார்.

    இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 3 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    நேற்று விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன், தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜராஜன், நெல்லையை சேர்ந்த டிஎஸ்பி பாலச்சந்திரன் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர்களிடம் நேற்று மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.யாக இருந்து வரும் அன்றைய தினம் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு புதிதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அருண் பாலகோபாலன் ஒரு நபர் ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜரானார்.

    தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் 1016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.

  10. 'டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரத்துக்கு முன்புதான் சொன்னார்கள்'

    தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுவதற்கான இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரத்துக்கு முன்புதான் தேர்வுக் குழுவினர் தம்மிடம் சொன்னார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  11. "வருண் சிங் கடைசி மூச்சு வரைப் போராடினார்" - ராஜ்நாத் சிங்

    குரூப் கேப்டன் வருண் சிங் காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர் ஒரு உண்மையான போராளி, அவர் தன் இறுதி மூச்சு வரை போராடினார்.

    அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் இரங்கலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

  12. வருண் சிங்குக்கு தெலங்கானா ஆளுநர் இரங்கல் தெரிவித்தார்

    "குன்னூர்,ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் திரு.வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.வருண் சிங் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவரது பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தேன். அவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  13. குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நரேந்திர மோதி

    "இந்திய விமானப் படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் வருண் சிங் இந்திய தேசத்துக்கு மிகுந்த பெருமையோடும் தைரியத்தோடு பணியாற்றினார். அவர் காலமானது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தேசத்துக்கு செய்த சேவை எப்போதும் மறக்கப்படாது. அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, குரூப் கேப்டன் வருண் சிங் காலமானார்

    டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங்உயிரிழந்துவிட்டார் என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இன்று காலை குரூப் கேப்டன் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு, பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  15. "இது அரசியல் காழ்ப்புணர்ச்சி" - ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் பி தங்கமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும், அதற்கு தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு ஆளாவோரை என்றைக்கும் அதிமுக கைவிடாது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடுக்கும் வழக்குகளை சட்டப் படி எதிர்கொண்டு வெற்றி கொள்வோம் என்றும் அக்கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  16. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் - அதிமுக மேல் முறையீடு செய்ய அனுமதி

    ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அ.தி.மு.கவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

    முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவின் மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்படுவதாக 2017இல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர் அது ஜெயலலிதாநினைவில்லமாக அறிவிக்கப்பட்டது.

    ஜெலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் தாங்கள்தான் என்று நீதிமன்றத்தை நாடிய அவனது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் 'வேதா நிலையம்' மீதான சொத்துரிமையைப் பெற்றனர்.

  17. மால்டாவில் கஞ்சாவுக்கு அனுமதி

    கஞ்சாவை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் சட்டபூர்வ அனுமதி வழங்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாகி உள்ளது மால்டா.

    ஏழு கிராம் வரை கஞ்சாவை கையில் வைத்துக் கொள்ளவும், அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகள் வரை வீட்டில் வளர்க்கவும் அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் பொது இடத்தில் கஞ்சா புகைப்பது மற்றும் குழந்தைகள் முன்பு கஞ்சாவை பயன்படுத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

    ஜெர்மனி, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இதே திட்டம் உள்ளது.

    நெதர்லாந்தில் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மட்டும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி உள்ளது.

    மால்டா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கக் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 27 வாக்குகளும் பதிவாகின.

  18. தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறை சோதனை நடத்தி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

  19. அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்தது

    அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இது உலக அளவில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனாவால் சுமார் 50 மில்லியன் (ஐந்து கோடி பேர்) பாதிக்கப்பட்டனர் என தரவுகள் கூறுகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் வயதானவர்கள் தான் 2021ஆம் ஆண்டில் அதிகம் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவில் கடந்த 11 வார காலத்தில் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த 11 வார காலத்தில் கடந்த காலத்தை விட வேகமாக உயிரிழப்பு நடந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  20. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ். அ, கெளதமன் முராரி, ஷோபனா. எம் ஆர்.