"தமிழ் படித்த, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு": பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்த பழம்பெரும் அரசியல் தலைவர் கே ரோசய்யா மாரடைப்பு காரணமாக, சனிக்கிழமை காலை காலமானார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி. நாளை வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் உறுதி

    இந்தியாவில் முதல் முதலாக கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வகையை சேர்ந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், குஜராத்தில் ஒருவருக்கும், மகாராஷ்டிராவில் இன்னொருவருக்கும் இந்த தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு வந்த 71 வயது முதியவர் ஒருவருக்கும், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து துபாய், டெல்லி வழியாக மும்பைக்கு சென்ற 33 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரசின் ஒமிக்ரான் வகை திரிபு தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  3. மதுரை கனமழை - புது மண்டபத்திற்குள் மழைநீர்

    மதுரையில் பெய்த கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புது மண்டபத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கனமழை காரணமாக மதுரை கீழ ஆவணி மூல வீதி முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை கீழ ஆவணி மூல வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லாதவன் எச்சரிக்கை செய்தும் மாற்றுப்பாதை அமைத்துத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புதுமண்டபத்திற்குள் தண்ணீர் நிரம்பி இருப்பதால் மாற்றுப் பாதையை பயன்படுத்துவதால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டி மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    madurai rain
  4. விபத்தில் சிக்கிய மாணவனுக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர், ஜி.மணிவண்ணன்

    முதலுதவி
    படக்குறிப்பு, சாலையில் விழுந்து கிடக்கும் மாணவன் வசந்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் செவிலியர் வனஜா.

    சாலை விபத்தில் சிக்கி நாடித்துடிப்பு குறைந்துகொண்டிருந்த மாணவனுக்கு அந்த வழியே வந்த செவிலியர் ஒருவர் சிபிஆர் எனப்படும் இதய - நுரையீரல் முடுக்கல் முறையில் முதலுதவி அளித்து உயிர் பிழைக்க உதவி செய்துள்ளார்.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்த கருவாக்குறிச்சி காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வசந்த் (20). பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறார்.

    உடல்நிலை சரியில்லாத இவர், சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பைக்கில் பைபாஸ் சாலை அருகே வந்த போது செம்மறியாடுகள் கூட்டமாக சாலையின் குறுக்கே கடந்துள்ளன.

    இதனை எதிர்பார்க்காத வசந்த் திடிரென பிரேக் போட, நிலை தடுமாறி செம்மறியாடு கூட்டத்தில் மோதியதில் பலத்த காயமடைந்து ரோட்டில் மயங்கி கிடந்தார். அப்போது, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்க்கும் கோட்டூர் தோட்டத்தை சேர்ந்த வனஜா (39) என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி நோக்கி தனது பைக்கில் வந்தார்.சாலையில் இளைஞர் ஒருவர் அடிபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை செவிலியர் வனஜா பரிசோதித்தார். அதில் அவரது இதயத் துடிப்பு குறைந்து அபாய கட்டத்தில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிபிஆர் முதலுதவி சிகிச்சை முறையில், நெஞ்சகப் பகுதியை பலமாக அழுத்தி முதலுதவி கொடுத்ததில் அவரது இதயத் துடிப்பு சீரானது. பின்னர், அவர் 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மன்னார்குடி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழியேவந்த செவிலியர், காலத்தே முதலுதவி அளித்து ஓர் உயிரைக் காப்பாற்றியதாக சமூக வலைத்தளங்களில் வனஜாவின் செயல் பாராட்டப்படுகிறது.

  5. அ.தி.மு.க. தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி": ஜெயக்குமார் குற்றச்சாட்டு

    அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    கட்சி அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி காவல்துறை ஆணையரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் யாரும் நுழைந்து குழப்பம் ஏற்படுத்த முடியாதபடி பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசினார்.

    அப்போது, அ.தி.மு.கவின் ஒருங்கிணப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்களில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    "கட்சிக்கு உழைத்தவர்கள், சட்டதிட்டத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி உடையவர்கள். அவர்கள் விண்ணப்பிக்க யாரும் தடுக்கவில்லை. தடுக்க முடியாது. ஆனால், குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு வருபவர்களை அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.

    இப்போது காவல்துறையில் பாதுகாப்பு கேட்பதற்குப் பதிலாக முன்பே கேட்டிருக்கலாமே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முன்னதாக எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அப்படி ஏதாவது வந்திருந்தால் பாதுகாப்பு கேட்டிருப்போம்" என்று பதிலளித்தார்.

    விண்ணப்பிக்க வருபவர்களை துரத்துவதற்குப் பதிலாக, அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்திருக்கலாமே எனக் கேட்டபோது, "நான் தேர்தல் அதிகாரி கிடையாது என்றார். நீங்களே விண்ணப்பியுங்கள், யார் தடுத்தது? தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்" என்றார்.

    இந்தத் தேர்தலில் போட்டியிட நேற்று ஒருவர் வந்தோது அவர் துரத்தப்பட்டது குறித்து தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள், நீக்கப்பட்டவர்கள் ரவுடிகளோடு உள்ளே நுழைந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வராதா? நேற்று நான் இல்லை. சாலையில் நடந்த விஷயத்திற்கு தலைமைக் கழகம் எப்படி பொறுப்பாகும். அந்த சம்பவத்திற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?" என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

    ஜெயக்குமார்
    படக்குறிப்பு, ஜெயக்குமார்
  6. மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

    மதுரை மாவட்ட ஆட்சியர்.

    பட மூலாதாரம், DIPR

    படக்குறிப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர்.

    மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார். பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டு இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அங்கு வரும் மக்கள் சோதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, ஊசி செலுத்த ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படும்.

    ஒரு வாரத்திற்கு பின்பும் தடுப்பூசி செலுத்தாமல் வந்தால் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படும். பொது இடங்களுக்கு வரும் நபர்கள் மொபைல் குறுஞ்செய்தியை காட்டவேண்டும்.

    டாஸ்மாக், பார்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மது வழங்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, ஓட்டல், தங்கும் விடுதி, பார், ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும், 2ம் தவணை 32 சதவீதம் பேரும் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர் மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தெரிவித்த நிலையில் ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  7. "வெங்கடாசலத்தின் மரணம் தற்கொலையைப் போலத்தான் தெரிகிறது": காவல்துறை ஆணையர்

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.வி. வெங்கடாசலத்தின் மரணம் தற்கொலையைப் போலத்தான் தெரிவதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

    இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெங்கடாசலத்தின் மரணம் தற்கொலையைப் போலத்தான் தெரிகிறது. அவருடைய போன், டேப் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் வேறு எதுவும் சொல்லவில்லை. இறுதி அறிக்கைக்கு காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

    லஞ்ச ஒழிப்புத் துறையினர் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே என்று கேட்டபோது, அப்படி குற்றச்சாட்டுகளை யாரும் சொல்லவில்லை என்றார் சங்கர் ஜிவால். "இதுவரை அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கே அழைக்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டும் போனில் அழைத்து விசாரணைக்கு எப்போது வர முடியுமெனக் கேட்டிருக்கிறார். மற்றபடி துன்புறுத்தல் ஏதும் நடக்கவில்லை" என்றார் காவல்துறை ஆணையர்.

    சம்பவ தினத்தன்று 12 மணியளவில் காலை உணவை முடித்துவிட்டு வெங்கடாசலம் மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்றதாகவும் மதிய உணவுக்கு வரவில்லையென்பதால், 3 மணிக்கு அவரது மனைவி அழைத்தும் கதவைத் திறக்காததால் மற்றவர்களை அழைத்துச் சென்று 4 மணிக்கு கதவு உடைக்கப்பட்டதாகவும் அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

  8. "தமிழ் படித்த, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புக் கிடைக்கும்": பிடிஆர்

    தமிழ்நாட்டின் அரசுப் பணிகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவை படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாகவும் தற்போது டிஎன்பிஎஸ்சியில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உதவுமெனவும் மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பில் தவறுகள் நடந்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால் ஆட்சேர்ப்பு நின்று போயிருந்தது. அதற்குப் பிறகு கொரோனா வந்துவிட்டது.

    தேர்வுகளை நடத்த முடியவில்லை. எங்களைப் பொறுத்தவரை அடிப்படையிலேயே நிறைய மாற்றம் தேவைப்படுகிறது. வேலை தேடி காத்திருப்பவர்களின் தாகம் எங்களுக்குப் புரிகிறது. மாற்றங்களைச் செய்ய இதுதான் தகுந்த நேரமெனக் கருதுகிறோம். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை 14- 15 லட்சம் பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது 9 லட்சம் பேர்தான் வேலை பார்க்கிறார்கள். ஆகவே பல லட்சம் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. அத்தனையும் நிரப்ப நிதிநிலை இடம் கொடுக்காது. கடந்த சில ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் சுமார் பத்தாயிரம் பேர் பணிக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    30,000 பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டியிருக்கிறது. இதனை நிரப்பவே இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளாகிவிடும். ஆகவே, இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு, மாநகராட்சி, மின் வாரியம் போன்றவை வெவ்வேறு விதிமுறைகளுடன் பணிக்கு ஆட்களைச் சேர்க்கின்றன. அது சரியான முறையில்லை என்பதால், அதை சரிசெய்ய முயல்கிறோம்.

    மற்றொரு பக்கம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 70-80 தேர்வுகளை நடத்த வேண்டியிருக்கிறது. அத்தனை தேர்வுகள் தேவையா என்ற கேள்வியும் இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உருவாகும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே சொல்லி, தேர்வுகளை நடத்த திட்டமிட வேண்டும்.

    ஆகவே, இந்த மாடலே சிக்கலானதாக இருக்கிறது. நொறுங்கிப் போயிருக்கிறது. தற்போதைய தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்பால் கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது அதிகரிக்கும். தவிர, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவர் படிக்கும் அளவிலான தமிழிலேயே தேர்வுகள் வைக்கப்படும். அதில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது" என்று கூறினார்.

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    பட மூலாதாரம், PTR fb page

    படக்குறிப்பு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
  9. கோவில்பட்டியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தவர்களை கண்டித்த போக்குவரத்து பெண் காவலர் மீது தாக்குதல்

    காவல்துறை
    படக்குறிப்பு, காவல்துறை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி முனியம்மாள் . இவர் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் நடராஜபுரம் தெருவில் உள்ள மயானம் எடுத்துச் சென்றனர்.

    அப்போது கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே மெயின் ரோட்டில் உடலை கொண்டு சென்ற போது, சில இளைஞர்கள் போக்குவரத்து இடையூறாக ஆடிக் கொண்டு வந்ததாக தெரிகிறது, அப்போது அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஜான்சி ராணி என்பவர் அந்த இளைஞர்களை பார்த்து போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் உடலைக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    ஆனால் அந்த இளைஞர்கள் போக்குவரத்து காவலர் பேச்சைக் கேட்காமல், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர் பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது. இது குறித்து போக்குவரத்து பெண் காவலர் ஜான்சிராணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் காவலரை அவதூறாக பேசி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராசு, மாடசாமி, சுந்தரமூர்த்தி, மதன்ராஜ், சந்தனகுமார், சுரேஷ்குமார்ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். தற்போது பெண் போக்குவரத்து காவலரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

  10. இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் & 3 ஒருநாள் போட்டிகள் உறுதி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளை விளையாடும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா சனிக்கிழமை அறிவித்தார்.

    மேலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான நான்கு டி20 போட்டிகள் பின்னர் விளையாடப்படும் என கூறியுள்ளார்.

  11. ஜவாத் புயல்: பூரி கடற்கரையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புயலுக்கு ஜவாத் என பெயரிடப்பட்டுள்ளது.

    ஜவாத் புயல் சனிக்கிழமை வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷாவில் கரையைக் கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் பூரி கடற்கரையில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    புயலுக்குப் பின் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை மறுசீரமைக்க அணிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், புயலுக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் சூடான உணவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பூரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வெர்மா ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளார்.

    மாவட்ட காவல்துறை மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

  12. ஜோவத் புயல் வலுவிழந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்கிறது

    வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஜோவத் புயல் விரைவில் வலுவிழக்குமென்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகருமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    வங்கக் கடலில் உருவான ஜோவத் புயல் காலை 5.30 மணி நிலவரப்படி விசாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்கில் 230 கி.மீ. தூரத்திலும் ஒதிஷாவின் கோபால்பூருக்குத் தெற்கே 340 கி.மீ. தூரத்திலும் பூரிக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 410 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

    இந்தப் புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும். இதற்குப் பிறகு ஓதிஷா கடற்கரையை ஒட்டி வடக்கு வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பூரிக்கு அருகில் கரையை நெருங்கும்.

    இதன்பிறகு இது மேலும் வலுவிழந்து வடக்கு வடகிழக்கு திசையில் ஒதிஷா கடற்கரையை ஒட்டியே நகர்ந்து மேற்கு வங்கக் கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    இதற்கிடையில் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் ஒன்பது சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. 'ஒமிக்ரான் திரிபு குறித்து அச்சப்படக் கூடாது' - உலக சுகாதார அமைப்பு

    கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரானைக் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது, மாறாக அதை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3ஆம் தேதி) ஒரு கூட்டத்தில் பேசிய போது கூறினார்.

    தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியான தரவுகளை மேற்கோள் காட்டி, ஒமிக்ரான் திரிபு அதிவேகமாக பரவக் கூடியது, இத்திரிபு உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறலாம் எனவும் ராய்டர்ஸ் செய்தி முகமையின் நெக்ஸ்ட் மாநாட்டில் கூறினார் உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன்.

    தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 99 சதவீதத்தினர் டெல்டா திரிபால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Soumya Swaminathan

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, செளமியா சுவாமிநாதன்
  14. முன்னாள் ஆந்திர முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் கே ரோசய்யா காலமானார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்த பழம்பெரும் அரசியல் தலைவர் கே. ரோசய்யா மாரடைப்பு காரணமாக, சனிக்கிழமை காலை காலமானார்.

    1933 ஜூலை 4ஆம் தேதி, மதராஸ் மாகாணத்தின் குண்டூரு மாவட்டத்தில் பிறந்தார் ரோசய்யா.

    இத்தகவலை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். 2009 - 2010 காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராகவும், 2011 - 2016 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவியில் இருந்தார்.

    ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பின்னர், இவர் முதல்வரானார்.

    எந்தக் உள்கட்சி கோஷ்டியையும் சேராதவராக இவரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை பார்த்ததால் இவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.

    2014ஆம் ஆண்டு சில மாதங்கள் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக பல முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் கே ரோசய்யா.

    கே ரோசய்யா போக்குவரத்துத் துறை, நிதித் துறை உட்பட ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு முக்கிய அமைச்சகப் பதவிகளை நிர்வகித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

    பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்துக்கு அதிக முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் ரோசய்யா. 15 முறை ரோசய்யா ஆந்திர மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவர் ரோசய்யா.

    தாம் அரசியலில் முக்கியத்துவம் பெற்று, 1978இல் அமைச்சர் ஆனபின் ஆந்திராவில் இருந்த காங்கிரஸ் முதல்வர்கள் அனைவருடனும் மிகவும் நெருக்கமானவராக ரோசய்யா அறியப்பட்டார்.

    2010இல் உடல்நலத்தை காரணமாகக் கூறி ஆந்திர மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

    இவரது பதவி காலத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை போராட்டங்கள் தீவிரமாக இருந்தன.

    அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தாம் அரசியலில் முக்கியத்துவம் பெற்று, 1978இல் அமைச்சர் ஆனபின் ஆந்திராவில் இருந்த காங்கிரஸ் முதல்வர்கள் அனைவருடனும் மிகவும் நெருக்கமானவராக ரோசய்யா அறியப்பட்டார்.

    (பிபிசி தெலுங்கு செய்தியாளர் பல்லா சதீஷ் அளித்த தகவல்களுடன்.)

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்