புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் வெடித்த பட்டாசு: தந்தை,7 வயது மகன் பலி

புதுச்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்து தந்தை மற்றும் 7 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை மீண்டும் வேறொரு நேரலையில் சந்திப்போம்.இந்த இரவு இனியதாகட்டும்.

  2. 'புவி வெப்ப அதிகரிப்பை 1.8 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முடியும்'

    பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் காப்பாற்றப்பட்டால், புவியின் வெப்பநிலை அதிகரிப்பை தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விடவும், கூடுதலாக 1. 8 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது.

    இந்த மாநாட்டில் ஐந்தாம் நாளான இன்று 190 நாடுகள் மற்றும் அமைப்புகள் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இதை அந்த அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

    நிலக்கரி உள்ளிட்ட புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், நிகர கார்பன் உமிழ்வை பூஜ்ஜியம் அளவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை இந்த மாநாட்டின்போது உலக நாடுகள் அளித்துள்ளன.

    நிலக்கரி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நிலக்கரி
  3. இருசக்கர வாகனத்தில் வெடித்த பட்டாசு: தந்தை, மகன் பலி, நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

    புதுச்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்து தந்தை மற்றும் 7 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்.

    இவருக்கு வயது 37. விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியிலிருந்த தனது மனைவியை பார்க்கச் சென்றுள்ளார். பிறகு மனைவியைச் சந்தித்துவிட்டு தனது 7 வயது மகனுடன் புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் தீபாவளி கொண்டாட இரு சக்கர வாகனத்தில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, இரு சக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன.‌

    இதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து தந்தை மற்றும் மகன் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதையடுத்து தந்தை மற்றும் மகன் இருவரும் சம்பவ இடத்திலே உடல் சிதறி உயிரிழந்தனர்.பட்டாசு வெடித்ததில் இரு சக்கர வாகனம் மற்றும் அருகாமையிலிருந்த வீட்டின் கூரை சேதமடைந்து. இந்த வெடிவிபத்து நடைபெற்றபோது அருகே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் காயமடைந்தனர்.

    தற்போது இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் வந்த விழுப்புரம் சரக டிஐஜி.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆய்வு மேற்கொண்டார்.

    "புதுச்சேரி - தமிழக எல்லையான கோட்டக்குப்பத்தில் உள்ள வீதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அதனைக்கண்டு மகனுடன் வந்த தந்தை திடீரென வாகனத்தில் பிரேக் அடித்துள்ளார். அப்போது வாகனத்தின் முன்புறம் வைத்திரு பட்டாசு பெட்டி அதிர்வில் வெடித்துள்ளது. இதில் பட்டாசு பெட்டி மீது அமர்ந்து வந்த 7 வயது சிறுவன் மற்றும் தந்தை இருவரின் உடலும் சுமார் 500 மீட்டர் வரை வெடித்து சிதறியுள்ளன." எனத் தெரிவித்துள்ளனர் காவல் துறையினர்.

    இருசக்கர வாகனத்தில் வெடித்த பாட்டாசு: தந்தை, மகன் பலி
  4. அஸ்வினி வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்

    தீபாவளி தினத்தன்று மாமல்லபுரத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    இன்று காலை 10 மணியளவில் பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 4.53 கோடி மதிப்பில் 283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது நரிக்குறவர் இன மக்களின் வீடுகளுக்கு முதல்வர் சென்றார். அதில் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து கேட்ட காணொளி மூலம் சமீபத்தில் பரவலாக அறியப்பட்ட அஸ்வினி வீடும் அடக்கம்.

    முதல்வர் வருகை குறித்து பிபிசி தமிழிடம் அஸ்வினி கூறியதைப் படிக்க: 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல' - ஸ்டாலின் உதவியால் கலங்கும் நரிக்குறவர் பெண் அஸ்வினி

    அஸ்வினியின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன்
    படக்குறிப்பு, அஸ்வினியின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன்
  5. கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கும் HPV தடுப்பு மருந்து

    யூமன் பாபிலோமா வைரஸ் தடுப்பு மருந்து கருப்பைவாய் புற்றுநோயை கிட்டதட்ட 90 சதவீத அளவில் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    பிரிட்டனை சேர்ந்த புற்றுநோய் ஆய்வு ஒன்று இந்த கண்டுபிடிப்பு “வரலாற்று சிறப்புமிக்கது” என தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்த ஆய்வில் தடுப்பு மருந்து உயிரை காப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிட்டதட்ட கருப்பைவாய் புற்றுநோய் அனைத்தும் வைரஸ்களால் உருவாவதால் இந்த தடுப்பு மருந்து நோயை ஒழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    இருப்பினும் இந்த தடுப்பு மருந்தை எடுத்து கொண்டபின்னும் கருப்பைவாய் புற்றுநோய்க்கான பேப்ஸ்மியர் சோதனையை சில முறை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    பிரிட்டனில் உள்ள 11 – 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. அதேபோன்று 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

    லேன்செட் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வு இங்கிலாந்தில் 2008ஆம் ஆண்டில் பெண்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தியபின் என்ன ஆனது என்பது குறித்து ஆராய்ந்தது.

    இந்த பெண்கள் தற்போது தங்களின் 20களில் உள்ளனர். இந்த தடுப்பு மருந்து புற்றுநோய்க்கு முந்தையை வளர்ச்சியை குறைத்துள்ளதுடன் கருப்பைவாய் புற்றுநோயை 87 சதவீத அளவில் குறைத்துள்ளது.

  6. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

    petrol

    பட மூலாதாரம், Getty images

    பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    இன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த வரி குறைப்பு உற்பாத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரத்தை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச அளவில் எரிபொருளின் விலை அதிகரித்தது. அது இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிப்பொருளில் 85% எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    டீசல் விலையை குறைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  7. நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விலக உறுதி

    coal

    பட மூலாதாரம், Reuters

    எரிசக்திக்காக நிலக்கரியைப் பெரிதும் சார்ந்துள்ள போலந்து, வியட்நாம், சிலி உள்ளிட்ட நாடுகள் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டில் இருந்து படிப்படியாக விலக COP26 பருவநிலை மாநாட்டில் உறுதி அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது.

    இந்த மாநாடு பிரிட்டனிலுள்ள கிளாஸ்கோவில் தற்போது நடைபெற்று வருகிறது.

    பருவநிலை மாற்றத்திற்கு மிகப் பெரிய காரணியாக நிலக்கரி பயன்பாடு உள்ளது. இதுவரை 190 நாடுகள் மற்றும் அமைப்புகள் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விலக உறுதியளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலியா , இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது எரிசக்தித் தேவைக்காக நிலக்கரியை பெரிதும் சார்ந்துள்ளன.

    ஆனால் அவை நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விலக இருப்பதாக உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

  8. எப்படி இருக்கிறது `அண்ணாத்த`?

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளது அண்ணாத்த திரைப்படம். இதுகுறித்து ரசிகர்கள் கருத்து என்ன?

  9. சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் புகார்

    Peng Shuai: Chinese tennis star makes sexual assault claims

    பட மூலாதாரம், Getty Images

    சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

    சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல் முறை.

    முன்னாள் துணை பிரதமர் ஜாங் கவ்லீ அவருடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்ளுமாறு தம்மைத் துன்புறுத்தினார் என்று ஷ்வை தெரிவித்துள்ளார்.

    ஜாங் கவ்லீ இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. அதிபர் ஷி ஜின்பிங் உடன் நெருக்கமானவராக இவர் அறியப்படுகிறார்.

    தற்போது 75 வயதாகும் ஜாங் கவ்லீ 2013-2018 காலகட்டத்தில் சீன துணைப் பிரதமராக இருந்தார்.

    பெங் ஷ்வை பொது வெளியில் குற்றம்சாட்டிய பின்னர் அவர் குறித்த இணையத் தேடல்களை சீன அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

    ஜாங் கவ்லீயின் வீட்டுக்குச் சென்றபோது இந்த நிகழ்வு நடந்ததாகவும், அதை நிரூபிக்கத் தம்மிடம் ஆதாரங்கள் இல்லை என்றும் பெங் ஷ்வை கூறியுள்ளார்.

  10. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் தமிழ்நாடு, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளைத் தொகுத்து வழங்குவது விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் விக்னேஷ்.அ.