ஆக்கஸ் ஒப்பந்தம் போட்டபோது பிரான்ஸ் விஷயத்தில் குளறுபடி செய்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் பைடன்

ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

    தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில், இன்று (அக்டோபர் 30) பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 114ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 59ஆவது குரு பூஜை விழா நடைபெற்று வருகிறது.

    தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு, முத்துராமலிங்கத் தேவருக்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முதல்வரோடு தமிழக அமைச்சர்களான பெரிய சாமி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

  2. ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்

    இடைத் தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இடைத் தேர்தல்

    ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளுக்கும், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்களித்து வருகின்றனர். நவம்பர் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

  3. லெபனான் நாட்டின் தூதர் வெளியேற செளதி அரேபியா உத்தரவு

    கொர்தாஹி

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கொர்தாஹி

    செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது போலத் தோன்றுகிறது என, லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் கடந்த வாரம் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் கூறினார்.

    ஆனால் அந்த நேர்காணல் கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் யேமன் நாட்டில் செளதி அரேபியா முன்னெடுக்கும் ராணுவ நடவடிக்கைகள் பலனற்றவை என்றும், ஹூதி கிளர்ச்சிக் குழுவினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் லெபனான் தகவல் துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி அந்நேர்காணலில் கூறி இருந்தார்.

    இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், செளதி அரேபியாவில் உள்ள லெபனான் நாட்டின் தூதரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது செளதி அரேபியா.

    கொர்தாஹியின் கருத்து லெபனான் அரசின் நிலைப்பாடு அல்ல என விளக்கமளித்தது லெபனான் தரப்பு. மேலும் செளதியின் இந்த முடிவு வருத்தமளிப்பதாகவும், செளதி இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லெபனா பிரதமர்.

  4. ஆக்கஸ் ஒப்பந்தம் போடும்போது பிரான்ஸ் விஷயத்தில் சொதப்பிவிட்டோம்: பைடன்

    பைடன் - மக்ரோங்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, பைடன் - மக்ரோங்

    ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசியுள்ளார்.

    ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது. இதன்கீழ் நீர்முழ்கி தொடர்பான பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.

    முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவிருக்கின்றன.

    பல பில்லியன் டாலர் மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் போட்டிருந்தது.

    ஆக்கஸ் உடன்பாடு கையெழுத்தானதால், பிரான்ஸ் நாட்டுடனான உடன்பாடு முறித்துக் கொள்ளப்பட்டது. இதனால் பிரான்ஸுக்கு 37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் கைவிட்டு போனது.

    இரு நாட்டு தலைவர்களும் ரோம் நகரில் உள்ள வாடிகன் தூதரகத்தில் சந்தித்துக் கொண்டனர். “நாங்கள் செய்தது சொதப்பல் தான்” என பைடன் கூறினார்.

    “உண்மையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, பிரான்ஸ் நாட்டுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டதாகத்தான் நான் கருதி வந்தேன்.” என கூறினார் பைடன்.

    ஆக்கஸ் ஒப்பந்தம் செயற்கை நுண்னறிவு போன்ற பல முன்னணி தொழில்நுட்பங்களைக் உள்ளடக்கிய, ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு உடன்படிக்கை.

    இந்த உடன்படிக்கை சீனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த மக்ரோங் “நம்பிக்கை என்பது அன்பு போன்றது, அதை அறிவிப்பது நல்லது தான், ஆனால் அதற்கான ஆதாரம் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

  5. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.