You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. 46 வயதில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணம் - நடந்தது என்ன

    கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 46.

  3. கீழடி அகழாய்வு தளங்கள் , அகழ்வைப்பகம் கட்டும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏழு கட்டங்களாக ஆய்வுப்பணிகள் நடந்துள்ளன அதேபோல் கொந்தகை அகரம் மணலூர் பகுதிகளிலும் ஆய்வு பணிகள் நடந்தன இதில் முதல் மூன்று கட்ட ஆய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறையும் மீதமுள்ள நான்கு கட்ட பணிகளை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டது உறைகிணறுகள் பாசி மணிகள் தங்க ஆபரணங்கள் சுடுமண் பொம்மைகள் செங்கல் கட்டுமானங்கள் முத்திரைகள் எடை கற்கள் என பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    இதன்மூலம் கீழடி நகர நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது ஏழாம் கட்ட ஆய்வு பணி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது மேலும் இந்து கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வகையில் 12.20 ஒரு கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டுமானபணி நடந்துவருகிறது இதுதவிர கீழடி கொந்தகை அகரம் மணலூர் என அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ்வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், கீழடி அகழாய்வுத் தளங்கள் மற்றும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.கீழடி அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் குறித்தும் தொல்லியல் துறையினர் முதல்வருக்கு விளக்கினர்.அப்போது, அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி,கீதா ஜீவன்,மூர்த்தி,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  4. "ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு நீக்கப்பட்டது"

    நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது.

    நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

    அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளது.இதையடுத்து அவருக்கு அந்த அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு நீக்கப்பட்டதா அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனையில் அறிக்கை கூறுகிறது.

    ரஜினிக்கு இதற்கு முன்பாக 2011ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்றார். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான், பக்கவாதத்திற்கு முந்தைய நிலையான மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்

    கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 46.

    ராஜ்குமார் இன்று காலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டுசெல்லும் வழியிலும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.விக்ரம் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.

    2002ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான அப்பு அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது.தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்டவர் புனித். ஆனால், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.அவர் சேர்க்கப்பட்டிருந்த விக்ரம் மருத்துவமனைக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

    புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  6. எப்படி இருக்கிறார் ரஜினி?

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

    ` அவர் நலமுடன் இருக்கிறார்' என்கிறார், அவரது உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன். தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  7. வரலாறு காணாத போதை மருந்து குவியல் லாவோசில் பறிமுதல்

    லாவோஸ் நாட்டு காவல் துறை ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதை மருந்துக் குவியலைக் கைப்பற்றியுள்ளது.

    5.5 கோடி மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5 டன்னுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றப் பிரிவு முகமை கூறியுள்ளது.

    இது ஆசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய அளவிலான போதை மருந்து குவியல் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.

    தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லைப் பகுதியான பொகெயோவில், பீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதித்த போது இத்தனை பெரிய அளவில் போதை மருந்து கடத்தப்படுவது தெரியவந்தது. தங்க முக்கோண சாலை என்று அழைக்கப்படும் இந்த பகுதி, பல ஆண்டு காலமாக போதை மருந்து தயாரிப்பின் சொர்க்கபுரியாக இருக்கிறது.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.