"நான் முழுநேர காங்கிரஸ் தலைவர்தான்": காங்கிரஸ் காரிய கமிட்டியில் சோனியா பேச்சு

"நான் முழுநேரமும் செயல்படும் காங்கிரஸ் தலைவர்தான்" என்று சோனியா பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியில் உள்ள விமர்சகர்களுக்கு சொல்லும் பதிலாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 16ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. காஷ்மீரில் இரு வேறு இடங்களில் வெளியூர் தொழிலாளர்களை சுட்ட ஆயுததாரிகள் - ஒருவர் பலி

    ஸ்ரீநகர் மற்று புல்வாமாவில் இரண்டு பேர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயம் அடைந்துள்ளதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இருவரும் காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களில் வசிப்பவர்கள். ஸ்ரீநகரில் சுடப்பட்ட நபரின் பெயர் அரவிந்த் குமார் சாஹ் என்றும் அவர் பிகாரின் பங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றொருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜாகிர் அஹமது என்று தெரிய வந்துள்ளது. காயம் அடைந்துள்ள ஜாகிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  3. கேரளாவில் கன மழை - 5 மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை

    கேரளாவில் கன மழை

    பட மூலாதாரம், UGC

    கேரளாவில் கடும் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன.

    பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் மழை பொழிவு இருக்கும் என்பதற்காக ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

    இது தவிர 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் என்ற இடத்தில் சாலையில் ஓடும் வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருக்கும் பேருந்தில் இருந்து உயிர் பயத்தோடு பயணிகள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தப்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

  4. நாசா ஏவிய லூசி விண்கலம்: சூரியக் குடும்பத்தின் நதி மூலம் என்ன? வியாழனில் ஒரு 'புதைபடிவ ஆராய்ச்சி'

    நாசா

    பட மூலாதாரம், NASA/SWRI

    படக்குறிப்பு, வரைகலை: சூரியக் குடும்பத்தில் உள்ள விண் கற்களை ஆராய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா வரிசையாக ஏவவுள்ள விண்கலன்களில் ஒன்றுதான் லூசி.

    மனித குலத்தின் நதிமூலத்தை அறியவும், புவியில் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் பற்றி அறியவும் எப்போதாவது மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் புதைபடிவங்கள் பெரிய அளவு உதவி செய்துள்ளன.

    அதைப் போல சூரியக் குடும்பத்தின் பிறப்பு ரகசியத்தை அறிய உதவி செய்யும் புதைபடிவங்கள் என்று கருதப்படும் விண்கல் கூட்டத்தை ஆராய வியாழன் கோள் நோக்கி சனிக்கிழமை கிளம்பியது நாசாவின் லூசி விண்கலம்.

    இந்த லூசி என்ற பெயரிலேயே ஒரு சுவாரசியமான கதை உள்ளது.

    ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மனிதப் புதை படிவத்துக்கு லூசி என்று பெயர் வைத்தார்கள்.

    முழு விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

  5. மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் தற்காலிக மருத்துவமனை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரபுராவ் ஆனந்தன்

    தமிழக சுகாதாரத் துறை செயலாளர்
    படக்குறிப்பு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்காலிக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை வாடகை கட்டடத்தில் துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டட பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் டீன் ரத்தின்வேலு இருந்தனர்.

    பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைவு. சென்னை, கோவை மட்டும் 100-க்கும் மேல் தொற்று பதிவு. பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணியாமல் உள்ளனர். மக்கள் முறையாக மாஸ்க் அணிய வேண்டும்," என்றார்.

    மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 121.8 கோடி மதிப்பில் கட்டப்படும் 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அடங்கிய 7 மாடி கட்டிடம் புதிய மருத்துவமனை கட்டுமான பணிகள் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் முடிவடையும். அந்த மருத்துவமனைக்கு 173 கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ராதாகிருஷ்ணன்.

    மருத்துவ கல்லூரி வளாகத்தில் 112 கோடி செலவில் கட்டப்படும் கூடுதல் வளாகம்இந்தாண்டு இறுதியில் முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

    டெங்கு நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் இந்த சீசனில் 3 இறப்புகள் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு இதுவரை 3187 நபர்கள் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தற்போது 351 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.டெங்கு நோய் தடுப்பு பணிகளில் கடந்த ஆண்டு 29,875 மாதிரிகள் எடுக்கப்பட்டன, இந்த ஆண்டு 92,047 மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு தாக்கம் குறைவாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான ஆலோசனைகளை ஜெய்க்கா நிறுவனம் துவக்கி உள்ளது. கட்டுமானம் நிறைவடையும் வரை வாடகை கட்டடத்தில் தற்காலிக சேவைகளை துவக்க மத்திய அரசு தயார் என தெரிவித்து உள்ளது.

    மேலும், அதற்கான வாடகை தொகையை செலுத்தவும் தயார் என கூறியுள்ளது.

    தோப்பூர் மருத்துவமனையில் எய்ம்சின் தற்காலிக வெளி நோயாளிகள் பிரிவை துவக்குவது தொடர்பான இட, பணியாளர்கள் வசதி குறித்து அறிக்கை கேட்டு ஆலோசனை நடத்தி அரசு முடிவெடுக்கும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை வருகிறார்கள், அப்போது ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    கொரோனா பாதிப்பு தொடர்பாக மரபியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் முதல் 50 மாதிரிகளில் 42 மாதிரி முடிவுகளில் அதிவேக டெல்டா வகை மாறுதல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் உருமாறினாலும், அதன் குணத்தில் மாற்றம் இல்லை, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    18 வயதுக்கு கீழுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் தொழில்நுட்ப கமிட்டி ஒப்புதல் வழங்கியது பின்னர், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

    கொரோனா நோய் பாதித்து உயிரிழந்த சுகாதார பணியாளர்களில் 34 நபருக்கு நிவாரண தொகை கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான படிவங்களை எளிமை படுத்தி உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குநர் ஒப்புதல் மட்டும் இருந்தாலே அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

  6. நான் முழுநேர காங்கிரஸ் தலைவர்தான்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் சோனியா

    சோனியா

    பட மூலாதாரம், EPA

    நான் காங்கிரஸ் முழுநேரத் தலைவர், நேரடியாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகிற தலைவர் என்று தில்லியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றுவரும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசியுள்ளார்.

    மேலும் பேசிய அவர், "காங்கிரஸ் காரியக்கமிட்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2019 முதல் மீண்டும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக நான் இருக்கிறேன் என்பதை அறிவேன். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாட்டைப் பிடித்து ஆட்டிய நிலையில், ஜூன் 30 என்ற காலக்கெடுவுக்குள் முடிவு செய்தபடி புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

    2021 மே 10ம் தேதி நடந்த காரியக் கமிட்டியில் இந்தக் காலக்கெடு கால வரம்பின்றி நீட்டிக்கப்பட்டது. இப்போது முழுமையான கட்சித் தேர்தலுக்கான அட்டவனை தயாராகியுள்ளது. இது இந்தப் பிரச்சனையில் மொத்தமாக தெளிவைக் கொண்டுவரும்" என்று தெரிவித்தார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

    "நான் முழுநேர தலைவர்தான்" என்ற சோனியாவின் பேச்சு, காங்கிரஸ் கட்சியின் தலைமை பிரச்சனை நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துவரும் அக்கட்சியின் தலைவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் பேசியது என்று பார்க்கப்படுகிறது.

  7. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய சசிகலா

    எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா. இது தொடர்பாக பிபிசி தமிழ் செய்த ஃபேஸ்புக் நேரலையின் காட்சிகள் இங்கே.

  8. உலக பட்டினி தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானைவிட பின்தங்கிய இந்தியா

    தானியம் ஏந்திய கைகளும், ஏங்கும் கைகளும்.

    பட மூலாதாரம், Getty Images

    உலக நாடுகளில் எந்த அளவுக்கு 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு பட்டியலில் இந்தியாவின் தர நிலை பாகிஸ்தான், பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.

    கடந்த வியாழக்கிழமை வெளியான நடப்பு 2021ம் ஆண்டுக்கான இந்தப் பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது தரவரிசையில் உள்ளது. இதன் பொருள் இந்த 116 நாடுகளில் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளன என்பதாகும்.

    இந்தப் பட்டியல் அறிவியல் பூர்வமாகவோ கள எதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோ தயாரிக்கப்படவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு வெளியான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94வது தர நிலையில் இருந்தது.முழு செய்தியைப் படிக்க...

  9. உணவு விலையேற்றத்துக்கு நாம் 'பழகிக்கொள்ள' வேண்டுமா?

    உலக உணவு தினம்

    பட மூலாதாரம், Getty Images

    "முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உணவுப் பாதுகாப்பின் பேரழிவு நிலைகள்" குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கை மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் காணப்படும் உலகளாவிய ஏறுமுகப்போக்கு ஆகியவற்றுக்கு மத்தியில், உலக உணவு தினம் இன்று (அக்டோபர் 16) கொண்டாடப்படுகிறது.

    "எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமெனில் சுமார் ஐந்து லட்சம் பேர் பஞ்சம் போன்ற நிலைகளை அனுபவித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில், புர்கினா ஃபாசோ மற்றும் நைஜீரியாவில் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களும், இதே நிலைமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்" என்று ஐ.நா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. .

    பஞ்சத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள 4 கோடியே 10 லட்சம் மக்களுக்கு ஆதரவளிக்க உடனடியாக நிதி வழங்கப்படவேண்டும் என்று ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

    உலகளவில் 690 மில்லியன் மக்கள் தொடர்ச்சியாக பசியுடன் வாழ்கின்றனர் என்றும், 850 மில்லியன் மக்கள் கோவிட் -19 காரணமாக வறுமையின் பிடியில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான 'தி ஹங்கர் ப்ராஜெக்ட்' தெரிவிக்கிறது. அந்த 690 மில்லியன் மக்களில் 60% பேர் பெண்கள்.

  10. ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

    மசூதி தாக்குதல்

    ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு.

    ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

    இத்தாக்குதலுக்குப் பின் தாங்கள் இருப்பதாக இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பு கூறியுள்ளது.ஆப்கானிஸ்தானில் இதற்கு முந்திய வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல் நடந்ததில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.

  11. சீனாவில் குரான் செயலியை நீக்கிய ஆப்பிள்

    குரான் மஜீத் செயலி
    படக்குறிப்பு, குரான் மஜீத் செயலி.

    உலகின் மிகப் பிரபலமான குரான் செயலிகளில் ஒன்றான 'குரான் மஜீத் (Quran Majeed)' என்கிற தன் செயலியை சீனாவில் உள்ள பயர்னர்களுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது ஆப்பிள்.

    செயலியை சீனாவில் சுமார் 10 லட்சம் பயனர்கள் பயன்படுத்தியதாக அச்செயலியை உருவாக்கிய பி டி எம் எஸ் நிறுவனம் கூறியுள்ளது.

    அந்த செயலியில் உள்ள சில உள்ளடக்கங்களுக்கு சீன அரசில் கூடுதல் ஆவணப்படுத்தல்கள் தேவைப்பட்டதால் செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் கூறியிருக்கிறது என்று பி டி எம் எஸ் நிறுவனம் தன் செய்தியறிக்கையில் கூறியுள்ளது. சட்டவிரோதமான மதம் சார்ந்த எழுத்துகள் இடம் பெற்றிருந்ததால் இந்த செயலி நீக்கப்பட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது.

    இது குறித்து பிபிசி கருத்து கேட்டபோது சீன அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

    ஆப்பிள் நிறுவனமும் இப்பிரச்சனை தொடர்பாக எந்த வித நேரடி பதிலையும் கொடுக்காமல், தன் மனித உரிமை கொள்கைகள் பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதில், ஆப்பிள் நிறுவனம் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் சில சிக்கலான விஷயங்களில் அரசுகளின் கருத்தில் தங்களுக்கு மாறுபாடு இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  12. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள். தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கௌதமன் முராரி.