You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய இரானின் முதல் அதிபர் ஆபூல்ஹசன் பனிசதர் மரணம்

1980இல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்தற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே, ஆபூல்ஹசன் பனிசதர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    மீண்டும் நாளை வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் 100 ஆப்கானியர்கள்

    இந்தியாவில் இருந்து 100 ஆப்கானிஸ்தான் நாட்டவர் தங்கள் தாயகம் திரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு இரான் தலைநகர் டெஹ்ரான் நோக்கி செல்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் ஆப்கானிஸ்தான் செல்வர் என்று ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

  3. ''சீனாவுடன் தைவான் மீண்டும் இணைக்கப்படும்'' - ஷி ஜின்பிங்

    சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் மற்றும் சீனாவில் என மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

    இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு மக்களின் கையில்தான் உள்ளது என்று கூறுகிறது.

    தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக தன்னைக் கருதுகிறது. ஆனால் தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக சீனா தைவானைப் பார்க்கிறது.

    இணைப்புக்காக ஆயுதம் பயன்படுத்தப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் சீனா மறுக்கவில்லை .

  4. இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய இரானின் முதல் அதிபர் மரணம்

    இரானில் 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி நடந்த பின்பு அந்நாட்டின் முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஆபூல்ஹசன் பனிசதர் தமது 88ஆவது வயதில் உயிரிழந்தார்.

    1980இல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்தற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    பின்பு இரானில் இருந்து தப்பி பிரான்சில் வசித்து வந்தவர் இன்று பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளார். இரானின் அதிஉயர் தலைவராக இருந்த ஆயத்துல்லா ரோஹுல்லா காமனெயிக்கு நெருங்கிய சகாவாக அரசியல் களத்தில் அறியப்பட்ட அவவர் அதிபர் பதவிக்கு வந்த பின்பு மதகுருக்கள் அரசியல் தலையிடுவதை எதிர்த்தார்.

    இரான் - இராக் போர், அமெரிக்க தூதரகத்தினர் பிணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிகழ்வு ஆகியவை இவரது பதவிக் காலத்தில் நடந்தவை.

  5. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

    நடப்பு அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ள இந்தக் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவராக மட்டுமே இருக்கும் சூழலில் முழு நேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை இந்தக் கூட்டத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

  6. கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு

    திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக சந்தேக மரணமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

  7. ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம்

    ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாட்டா குழுமத்தின் வசமே செல்லவுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1978ஆவது ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடாவுக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பிப்ரவரி 1978ல் அப்போதைய மொரார்ஜி தேசாய் அரசால் முன்னறிவிப்பின்றி ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்று ஜெய்ராம் ரமேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 1953ஆவது ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்தப் பொறுப்பில் ஜே.ஆர்.டி டாடா இருந்தார் என்றும் அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. பெருநிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 15% கார்ப்பரேட் வரி

    பெருநிறுவனங்கள் நியாயமான விகிதத்தில் வரிசெலுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலான உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

    பெருநிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் 15 சதவிகிதத்தை கார்ப்பரேட் வரியாக செலுத்த வைப்பதற்கான ஒப்பந்தத்தில் 136 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

    பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Cooperation and Development) எனும் பன்னாட்டு அமைப்பு பெருநிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கார்ப்பரேட் வரியை விதிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை சுமார் பத்தாண்டு காலமாக முன்னின்று நடத்தி வந்தது.

    இந்த வரி விகிதத்தால் ஆண்டுதோறும் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) கூடுதல் வருவாய் உலக நாடுகளின் அரசுகளுக்கு கிடைக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    எனினும் 15 சதவிகித கார்ப்பரேட் வரி என்பது மிகவும் குறைவானது என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏதாவது சட்டவிதிகளை பின்பற்றி வரி செலுத்தாமல் இருந்து விடுவார்கள் என்றும் அதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

  9. செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

    செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்திலேயே தங்களது ரோபோ ஆய்வு செய்து கொண்டிருப்பதாக இப்போது அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கான தடயங்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

    கடந்த பிப்ரவரி மாதம் "பெர்சி" என்ற செல்லப் பெயரும் அழைக்கப்படும் பெர்சவரென்ஸ் உலவு வாகனம், ஜெசெரோ எரிப் பள்ளத்தில் செவ்வாயின் தரையைத் தொட்டது. அதன் பின்னர் தனது சுற்றுப்புறத்தில் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

  10. லக்கிம்பூர் கேரி வழக்கு: பாஜக அமைச்சர் மகனிடம் விசாரணை

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டுப் பேர் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைக்காக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று காவல்துறை விசாரணைக்கு முன்னிலையானார்.

    விசாரணைக்கு வர வேண்டும் அனுப்பப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை.

    நேற்று விசாரணைக்கு அவர் வரவும் இல்லை.

    ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  11. ஆப்கானிஸ்தான் தாக்குதல்: ஐ.நா கண்டனம்

    ஆப்கானிஸ்தானில் வெள்ளியன்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த தற்கொலை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மத நிறுவனங்களைத் தாக்கும், இந்த வாரத்தில் நடந்த, 3வது தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியுள்ளது.

    சென்ற ஞாயிற்றுக் கிழமை காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேற்கத்திய படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் அது.

    அதன்பின் புதனன்று இஸ்லாமியப் பாடசாலையான மதரஸா ஒன்றின்மீதும் தாக்குதல் நடந்தது.

  12. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் தடங்கல்; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் ஃபேஸ்புக்,

    இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் ஏற்பட்ட தடங்கல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

    உலகம் முழுவதும் பலர் ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் சில மணி நேரங்களுக்குக் கிடைக்கவில்லை.

    எனினும் கடந்த திங்கள்கிழமையன்று சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என ஃபேஸ்புக் விளக்கம் அளித்திருக்கிறது.

    இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்காதது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட வேறு சமூக வலைத்தளங்களில் இதுபற்றி ஏராளமானார் பதிவிட்டிருந்தனர்.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் விக்னேஷ்.அ., எம். மணிகண்டன்

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.