தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில்
நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல்
பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தேர்தல் ஆணையத்திடம்அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு
அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு
உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச்
செயலாளர் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப்
பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில்
விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல்
ஆணையம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
`மாவட்டத்தில் 20
சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு
கேமரா மற்றும் இணையதள நேரலைவசதிகள் ஏற்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டது. மேலும், ` ஸ்டிராங்க் ரூம், வாக்கு எண்ணிக்கை
மையங்கள் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். சிக்கலான மற்றும்
பதட்டமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும்'
எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து,
அ.தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த
வழக்கறிஞர் விஜய் நாராயண், ` மாவட்டத்தில் 20
சதவீத வாக்குச்சாவடிகள் மட்டுமல்லாமல்
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதிகளைச்
செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஸ்டிராங்க்ரூம்கள் குறித்த
விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், ` வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஸ்ட்ராங்
ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர்களின்
விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடுஅரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக
சுந்தரம், `ரகசியமாக செயல்படக்கூடிய தேர்தல்
பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது. வாக்கு எண்ணிக்கை மையத்திலும்,
ஸ்ட்ராங்க் ரூம்களுக்கு வெளியே
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே பொருத்த வேண்டிய அவசியமில்லை' எனவும்வாதிட்டார்.
இருப்பினும், ` முடிந்தளவு அனைத்து
வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்'
என்றார்.
அரசுத் தரப்பு பதிலை நீதிபதிகள் ஏற்க
மறுத்தனர். பின்னர், 100 சதவிகித இடைவிடாத
வீடியோ பதிவுக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பில் ஒப்புதல் அளித்ததை பதிவு
செய்த நீதிபதிகள், இதே நடைமுறைகளைப்
பின்பற்றி அரசால் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக தெரிவித்தனர்.மேலும் அனைத்து ஒன்றியங்களிலும்
கூடுதல் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள்,
`எந்தப் புகாருக்கும் இடம் தராத
வகையில் அதிகாரிகள் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்'
என அறிவுறுத்தினர்.