ராஜராஜ சோழன் பற்றிய கருத்து: பா. ரஞ்சித் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை என்று பா.ரஞ்சித் மனுவில் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. செப்டம்பர் 30ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. டைனோசர் இனங்களின் 50 எலும்புகள் - புதிய பார்வை தந்த கண்டுடிப்பு

    டைனோசர்

    பட மூலாதாரம், ANTHONY HUTCHINGS

    125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தென் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு புதிய டைனோசர் இனங்களின் கண்டுபிடிப்பு, அவை பற்றிய புதிய பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துள்ளது.

    இந்த மாமிச ஊர்வனங்களில் ஒன்றை "நரக ஹெரான்" என்று விவரிக்கும் பறவையியலாளர்கள், அதன் வேட்டை பாணியை பறவையின் அச்சுறுத்தும் வடிவத்துடன் ஒப்பிடுகின்றனர்.

    இங்கிலாந்தின் ஐல் அவ் வைட் கடற்கரையில் மூன்று கால்விரல் டைனோசர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அவை ஸ்பினோசாரிட் குழுவைச் சேர்ந்தவை என்றும் அவற்றின் நீளம் ஒரு மீட்டர் (3 அடி) மற்றும் மண்டை ஓடுகள் 9 மீ (29 அடி) நீளம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.விரிவாக படிக்க

  3. கோவை விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்புணர்வு புகார்: குற்றம்சாட்டப்பட்ட ஆண் அதிகாரியை விமானப்படையிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவு

    பாலியல் புகார்

    பட மூலாதாரம், Getty Images

    கோவை விமானப்படை பயிற்சிக்கல்லூரியில் பெண் அதிகாரியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந் விமானப்படை அதிகாரியை விமானப்படையிடமே ஒப்படைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 29 வயதாகும் ஆண் அதிகாரி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த பெண் அதிகாரி புகார் தெரிவித்தவுடனேயே அந்த ஆண் அதிகாரி மாவட்ட நீதிபதி முன்பு சரண் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி அளித்த பாலியல் வன்புணர்வு புகாரை விமானப்படையே விசாரிக்க முடியும். அதை உள்ளூர் காவல்துறை விசாரிக்க வரம்பு இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியும் விமானப்படை தரப்பும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீது முடிவு எடுக்கும்வரை குற்றம்சாட்டப்பட்ட ஆண் அதிகாரியை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு சட்டவிரோதமாக இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா விமானப்படை தளபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி விரிவாக அறிய இங்கே படிக்கவும்.

  4. பெஷாவரில் சீக்கிய ஹக்கிம் சுட்டுக் கொலை - அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

    பாகிஸ்தானின் பெஷாவரில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் ஒரு சீக்கிய ஹக்கிம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    அந்த குழுவினர் ஹக்கிம் சர்தார் சத்னம் சிங் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    பெஷாவரில் உள்ள பிபிசி செய்தியாளர் அஸிசுல்லா கான், "45 வயதான சத்னம் சிங் மிகவும் பிரபலமான ஹக்கிம்," என்று கூறியுள்ளார்.

    பெஷாவரில் உள்ள சீக்கிய சமூகத்தின் முக்கிய முகமான சாஹிப் சிங், "சத்னம் தனது சமூகத்தின் திறமையான மற்றும் நன்கு அறியப்பட்ட நபர்," என்று கூறியுள்ளார்.

    சத்னம் சிங் பெஷாவரில் உள்ள சார்சாடா சாலையில் ஒரு கிளினிக் நடத்தி வந்தார். ஹக்கிம் சத்னம் சிங் தனது நோயாளிகளை பெஷாவர், ஹசன் அப்தல் மற்றும் ராவல்பிண்டியில் பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    பாகிஸ்தான்

    பட மூலாதாரம், SAHIB SINGH

    படக்குறிப்பு, சத்னம் சிங்
  5. ராஜராஜ சோழன் பற்றிய கருத்து: பா.ரஞ்சித்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

    பா.ரஞ்சித்
    படக்குறிப்பு, பா. ரஞ்சித், திரைப்பட இயக்குநர்

    ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய இயக்குநர் பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டதால் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக, ரஞ்சித் தாக்கல் செய்திருந்த மனுவில், 2019ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, நடந்த பொதுக்கூட்டத்தில், பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் "செந்தமிழ் நாட்டு சேரிகள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

    பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர்.

    தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர்.

    ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்," என கேட்டுக் கொண்டிருந்தார்.

    ரஞ்சித் குறிப்பிட்டிருந்த அந்த கூட்டத்தில் அவர் வெளியிட்ட கருத்துகளுக்காக அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் சார்பில் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கலகம் உண்டாக்குதல் மற்றும் சாதிமத மோதல் உருவாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  6. எக்வடோர் சிறை கைதிகள் சண்டையில் உயிர் பலி 100ஐ தாண்டியது

    எக்வடோர் சிறை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, எக்வடோர் சிறையின் முழு கட்டுப்பாடும் தற்போது தங்கள் வசம் வந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

    எக்வடோர் சிறை கைதிகளில் இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சிறை வன்முறை என கருதப்படுகிறது.

    குயாகுவில் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது ஐந்து கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் எக்வடோரியன் கும்பல், லிடோரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். எக்வடோரிலேயே இதுதான் மிக ஆபத்தான சிறைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

    மோதலில் ஈடுபட்ட கைதிகளில் சிலர் கையெறி குண்டுகளை வீசியதாக காவல்துறை தலைவர் ஃபாஸ்டோ புவானாகோ தெரிவித்தார்.

    அங்கு நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர 400 காவல்துறையினர் தேவைப்பட்டது.

    எக்வடோரில் தற்போது செயல்படும் சக்திவாய்ந்த மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் இந்த கைதிகள் எழுச்சி நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்குள்ள நிலைமை பயங்கரமாக இருப்பதாக எக்வடோர் சிறைத்துறை இயக்குநர் பொலிவார் கார்சான் தெரிவித்தார். "அந்த சிறையின் கட்டுப்பாடு நேற்று, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு காவல்துறை வசம் வந்தது. ஆனால் நேற்றிரவு வேறு இடத்தில் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வெடிப்பு சத்தம் கேட்டது. இன்று காலை முழு கட்டுப்பாடும் காவல்துறை வசம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

    மெக்சிகோவின் சக்திவாய்ந்த சினாலோவா போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் லாஸ் கொனேராஸ் என்ற எக்வடோரிய கும்பல் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால், சினோலோவா போட்டியாளர்களிடம் இருந்து எக்வடோர் முதல் மத்திய அமெரிக்கா வரையிலான கடத்தல் பாதையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் எக்வடோரிய குழுக்களுடன் கூட்டணி சேர ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் என்ற மெக்சிகோ குற்றக்கும்பல் முயன்று வருகிறது. எக்வடோர் சிறைச்சாலை, காவலில் வைக்கப்பட வேண்டிய கைதிகளின் எண்ணிக்கையை விட 30 சதவீதம் கூடுதலாக உள்ளது என்று அதன் அதிபர் லாஸ்ஸோ கடந்த ஜூலை மாதம் தான் தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, சிறையில் கைதிகளின் நெரிசலை தவிர்க்க குற்றச்செயல்களுக்கான தண்டனை காலத்தில் பெரும்பாலானவற்றை கழித்தவர்களை விடுவிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தப் போவதாக லாஸ்ஸோ கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த சிறை வன்முறை நடந்துள்ளது.

    எக்வடோர் சிறை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சிறைக்குள் உள்ள தங்களுடைய உறவினர்களுக்கு என்ன ஆனது என்பதை அறிய அதன் வளாகத்துக்கு வெளியே பல கைதிகளின் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
  7. உள்ளாட்சித் தேர்தலில் புகார் வராத வகையில் நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம்

    தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நாளைக்குள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் கூறியது சென்னை உயர் நீதிமன்றம்.

    ஒன்பது மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநிலதேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளரும் முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரதான எதிர்கட்சியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும் கடந்த தேர்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் நேரடி வெப் காஸ்டிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்று கூறிய அவர், இந்த அம்சங்கள் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் தெரிவித்தார் இதையடுத்து தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? என்று கூறிய தலைமை நீதிபதி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும் கிராமங்களில் வீடியோ பதிவு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

    வெறும் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற் கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை மதியம் 12 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

  8. பஞ்சாப் முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் சித்து

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தற்போது பஞ்சாப் முதல்வர் தம்மைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    பேச்சுவார்த்தைக்காக சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனுக்கு செல்லவிருப்பதாக கூறிய சித்து முதல்வர் எல்லாவிதமான உரையாடலுக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

    அவர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்வார் என்று அவரது ஆலோசகர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.

    பஞ்சாப் மாநில காங்கிரசில் குழப்பம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

    இதற்குள் சித்து விவகாரம் தணிவதைப் போலத் தெரிகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. மோரூர் பேருந்து நிலைய விவகாரத்தில் ஆதரவு கொடுத்த சீமானுக்கு திருமாவளவன் நன்றி

    மோரூர் பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றத்துக்கு தடைவிதித்த காவல்துறையின் ஒரு சார்பு நிலையிலான பாகுபாட்டையும் சாதி வெறியர்களையும் கண்டித்த அன்புச் சகோதரர் சீமான் அவர்களுக்கும் எஸ்டிபிஐ தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. தாலிபன்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது - அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

    கடந்த பிப்ரவரி 2020-ல் தாலிபன்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தோஹாவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்குலகப் படைகள் பின்வாங்கின. அந்த ஒப்பந்தம் ஆப்கன் படைகள் மற்றும் ஆப்கன் அரசின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க ராணுவ படைத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் மெக்கென்ஸி கூறினார். இவர் தான் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கையை மேற்பார்வை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஜோ பைடன் படைகளைக் குறைக்க ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது, தீவிர விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கூறினார். அதே போல தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின் கூறினார்.தோஹா ஒப்பந்தத்தின் படி, தாலிபன்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், தாலிபன்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கன் தரப்பில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் கூறினார். நேற்று (செப்டம்பர் 29, புதன்கிழமை) பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் கூட்டம் நடந்தது. அக்குழுவின் முன்னிலையில் இக்கருத்துகள் கூறப்பட்டன.

  11. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய இன்றைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.