இந்திய பிரதமர் மோதியிடம் அமெரிக்கா ஒப்படைத்த 157 தொல்பொருட்கள்
பட மூலாதாரம், PMO INDIA
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் 157 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை அந்நாட்டு அரசு ஒப்படைத்துள்ளது.
பழங்கால பொருட்களை அமெரிக்கா திருப்பித் தருவதற்காக நரேந்திர மோதி தமது பாராட்டை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அவரது அலுவலகம்.
157 கலைப்பொருட்களின் பட்டியலில் பொதுக்காலம் 10ல் மணற்கல்லில் உள்ள ரேவண்டாவின் ஒன்றரை மீட்டர் சிற்பம் முதல் 8.5 செ.மீ உயரம் பொதுக்காலம் 12இல் தயாரிக்கப்பட்ட நேர்த்தியான வெண்கல நடராஜர் சிலை வரையிலான பொருட்களின் பல்வேறு தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பொருட்கள் பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியையும், கிமு 2000ஆம் ஆண்டின் தாமிர மானுடப் பொருள் அல்லது 2 ஆம் கிபி முதல் டெரகோட்டா குவளை போன்ற வரலாற்றுப் பழங்காலத்தையும் சேர்ந்தவை.
சுமார் 45 தொல்பொருட்கள் பொதுவான சகாப்தத்திற்கு முந்தையவை.
கலைப்பொருட்களில் பாதி (71) கலாசாரம் சார்ந்தவையாக இருந்தாலும், மற்ற பாதி இந்து மதம் (60), பெளத்த மதம் (16) மற்றும் சமணம் (9) ஆகியவற்றுடன் தொடர்புடைய சிலைகளைக் கொண்டுள்ளன.
அவை உலோகம், கல் மற்றும் டெரகோட்டாவால் தயாரிக்கப்பட்டவை.
வெண்கல சேகரிப்பில் முதன்மையாக லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன் பார்வதி மற்றும் 24 சமண தீர்த்தங்கரர்கள், கண்கலமூர்த்தி, பிராமி மற்றும் நந்திகேசன் ஆகியோரின் புகழ்பெற்ற தோரணைகளின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் உள்ளன.
இந்து மதத்தில் இருந்து மத சிற்பங்கள் (மூன்று தலைகள் பிரம்மா, ரதம் ஓட்டும் சூர்யா, விஷ்ணு மற்றும் அவரது துணைவியார், சிவன் தட்சிணாமூர்த்தி, நடன விநாயகர் போன்றவை), பெளத்த மதம் (நிலை புத்தர், போதிசத்வ மஜுஸ்ரீ, தாரா) மற்றும் சமணம் (ஜெயின் தீர்த்தங்கரர், பத்மாசன தீர்த்தங்கரர், ஜெயினா) ஆகியவை இதில் அடங்கும். சமபங்காவில் உருவமற்ற ஜோடி, சவரம் தாங்குபவர், மேளம் வாசிக்கும் பெண் சிற்பமும் உள்ளன.
56 டெரகோட்டா தயாரிப்பில், 2வது பொதுக்கால குவளை, 12வது பொதுக்கால மான் ஜோடி, 14ஆம் பொதுக்கால பெண் மார்பளவு சிற்பம், 18ஆம் பொதுக்கால பாரசீக எழுத்துகளில் குரு ஹர்கோவிந்த் சிங் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுடன் கூடிய வாள் போன்றவை அமெரிக்கா வழங்கியுள்ள தொல்பொருட்களில் அடங்கம். இவற்றை டெல்லி திரும்பும்போது பிரதமர் மோதி தன்னுடன் கொண்டு வரவிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், PM INDIA
பட மூலாதாரம், PMO INDIA
குடியரசு தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு
பட மூலாதாரம், TNDIPR
படக்குறிப்பு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் (வலது) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்ற பிறகு டெல்லி வந்த ஆர்.என்.ரவி, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, ஆளுநராக பதவியேற்ற பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு வந்த ரவியை தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையாளர் ஜக்மோகன் சிங் ராஜு வரவேற்றார். அவருக்கு டெல்லி திஹார் சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புக் காவல் படையணி சார்பில் காவல்துறை மரியாதையும் கொடுக்கப்பட்டது.
நான்கு பேரை கொன்று உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்ட தாலிபன்
ஆப்கானிஸ்தானில் 'ஆள் கடத்தலில் ஈடுபட்டார்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் 4 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டார்கள் தாலிபன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி பாரசீக சேவை தெரிவிக்கிறது.
முதலில் தாலிபன்களுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிறகு அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் இவர்களுடைய உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றன.
இவர்கள் 'ஒரு வணிகரையும், அவரது மகனையும் கடத்தி' அவர்கள் குடும்பங்களிடம் இருந்து பணம் கேட்டதாக ஒரு தாலிபன் அதிகாரியை மேற்கோள் காட்டி டோலோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தாலிபன்கள் மரண தண்டனை வழங்கியதாக சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால் தடங்கள் கண்டுபிடிப்பு.
பட மூலாதாரம், BOURNEMOUTH UNIVERSITY
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது.இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த சுவாரசியமான தகவல்கள் அடங்கிய செய்தியைப் படிக்க இதைக் கிளிக் செய்யவும்.
மோதி - யோகிக்கு எதிராக பதிவிட்ட இருவர் கைது
பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை விமர்சித்து ஆட்சேபகரமான இடுகைகளை பதிவிட்டதாகக் கூறி இருவரை அந்த மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக பலியா மாவட்டத்தில் உள்ள பன்சித் சாலை காவல் நிலைய ஆய்வாளர் மன்டூ ராம் புகார் பதிவு செய்திருந்தார்.
அதில், பத்கி செரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் வர்மா, ரமேஷ் யாதவ் ஆகியோர் தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோதி, முதல்வர் யோகி குறித்து ஆட்சேபகரமான இடுகைகளை பதிவிட்டிருந்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீறிப்பாயும் இந்திய பங்குச் சந்தை - 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்
பட மூலாதாரம், Getty Images
வரலாறு காணாத முறையில் இந்தியப் பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சென்றிருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? பங்குச் சந்தை குறியீட்டை உயர்த்தும் முக்கியப் பங்குகள் எவை? இதில் உள்ள ஆபத்துகள் என்ன?
2019ஆம் ஆண்டிலேயே பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்தது. ஜனவரி 2019 முதல் ஜனவரி 2020 வரை இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.6 சதவீதத்துக்கு மேல் இருந்தது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை தடதடவென சரிந்தது. 2018 - 19 காலகட்டத்தில் உள்நாட்டில் வாகன விற்பனை 2.62 கோடியாக இருந்தது, 2019 - 20 காலகட்டத்தில் 2.15 கோடியாகவும், 2020 - 21 காலத்தில் 1.86 கோடியாக சரிந்ததாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM) தரவுகள் கூறுகின்றன.
2019ஆம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தல், செப்டம்பர் மாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளை தற்காலிகமாக உயர்த்தின.
ஜனவரி 2020-ல் அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ் குறியீடு. அதன் பிறகு மெல்ல சரியத் தொடங்கி, கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் மற்றும் பாதிப்புகள் வந்த பின் மார்ச் 2020-ல் 25,638 புள்ளி வரை தொட்டது.
விரைவில் புதிய கூட்டுறவுக் கொள்கை கொண்டுவரப்படும் - அமித் ஷா
விரைவில் புதிய கூட்டுறவுக் கொள்கை கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த மத்திய அரசு மாநிலங்களோடு இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்த பிரதமர் மோதி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோதி அழைப்புவிடுத்திருப்பதாக மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாள் சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே குவாட் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோதி ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை.
இந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. பைடனும் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை எதிர்பார்ப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கூறியுள்ளார்.
மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்குவதற்கு மோதியைப் பாராட்டிய பைடன்
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை வரும் அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்குள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது இந்தியா.இதற்காக மோதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
நரேந்திர மோதி - ஜோ பைடன் சந்திப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த செய்தியை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ முகமை கூறுகிறது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான கோவேக்ஸ் திட்டத்துக்கு இந்தியா தடுப்பூசி வழங்கத் தொடங்குவதை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் வரவேற்றுள்ள செய்தியும் இப்போது வந்துள்ளது.
வணக்கம் நேயர்களே!
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்பான செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்கிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.