கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42வது திருத்தத்தின் மூலம் கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்தத் திருத்தத்தை எதிர்த்து தி.மு.கவின் ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நா. எழிலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கல்வியை பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசென்ற சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரியும், கல்வி தொடர்பாக மாநில அரசு சட்டங்கள் இயற்ற முடியாத நிலை இருப்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் பட்டியலில் இருப்பது குறித்தும் மாநில அரசுகளால் மட்டுமே அந்தந்தப் பிராந்தியங்களின் கல்வித் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசியல் சாஸனத்தில் அடிப்படைக் கட்டமைப்பில் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவர முடியாது எனவும், அரசியலமைப்புச் சட்டக் குழுவில் கல்வியை பொதுப் பட்டியலில் வைக்கும் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதையும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு அரசையும் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டதோடு, மத்திய அரசு இந்த விவகாரத்தில் எட்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை பத்து வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.