தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் அரசை கண்டித்த உயர் நீதிமன்றம்

`துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ` கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தில் இந்தளவு ஆதிக்கம் செலுத்தக் கூடாது எனவும் அவர்களுக்காக இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை மக்கள் மீது நடத்தக் கூடாது, இப்படியொரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது' எனவும் கருத்து தெரிவித்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. செப்டம்பர் 13 நேரலை நிறைவடைகிறது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் செப்டம்பர் 13ஆம் தேதி நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் செப்டம்பர் 14ஆம் தேதி காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.இன்றைய முக்கிய செய்திகளை அறிய, எங்களுடன் இந்த நேரலை பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  2. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க குடியரசு தலைவருக்கு அழுத்தம் கொடுப்போம்: மா. சுப்ரமணியன்

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க குடியரசு தலைவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 84 ஆயிரம் பொதுமக்களின் கருத்து, சட்ட வல்லுநர்களின் கருத்து போன்றவை அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதாக திருப்பி அனுப்பக் கூடிய தீர்மானம் கிடையாது. இந்த மசோதாவை விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்போம். அவரது ஒப்புதலை பெறுவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்," என்று தெரிவித்தார்.

  3. செளதி செல்ல புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    செளதி அரேபியா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செட்பம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    செளதி அரேபியா நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செளதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியின்படி செளதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    செளதிக்கு வந்தவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

    முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. தூத்துக்குடி துப்பாக்கி சூடு: "கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தலாமா?" - ஸ்டெர்லைட் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு

    பட மூலாதாரம், AFP

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    `கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதமும் பலியானோரின் புகைப்படங்களும்வெளியாகி நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?' என்ற கேள்விகளும் எழுந்தன.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அளித்த அறிக்கையின் வழக்கை முடித்து வைத்து உத்தரவு வெளியானது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை மையமாகக்கொண்டு செயல்படும் `மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதில், `தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி,

    நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `சீலிடப்பட்ட அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்' எனக் கூறியுள்ளது. `சீலிடப்பட்ட அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தார்.

    இதன்பிறகு மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இந்த அறிக்கையின் நகலை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுக்கும் வழங்குமாறு உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்குக்கூடுதல் இழப்பீடு வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைக் கைவிடவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

    பின்னர், `துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ` கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தில் இந்தளவு ஆதிக்கம் செலுத்தக் கூடாது எனவும் அவர்களுக்காக இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை மக்கள் மீது நடத்தக் கூடாது, இப்படியொரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது' எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும், `இந்த அறிக்கையை பொதுவெளியில் வைக்கக் கூடாது' எனவும் அறிவுறுத்தினர்.

    முடிவில், `துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு விசாரணை பிரிவின் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

  5. ஆப்கானிஸ்தான் மனிதாபிமான உதவிக்கு ரூ. 4,442 கோடி நிதி கேட்கும் ஐ.நா

    காங்கிரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 4,442 கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இன்றைய நாளின் பிற்பகுதியில் ஐ.நா அவை ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தாலிபன் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் ரூ. 4,442 கோடி அளவிலான நிதியுதவி அந்நாட்டுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.

    "நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீடித்த மோதல், கடுமையான வறட்சி மற்றும் கோவிட் -19 பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. அங்கு வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஏற்கெனவே உதவி தேவைப்பட்டிருந்தது," என்று செய்திக்குறிப்பில் ஐநா தெரிவித்துள்ளது.

    "ஆப்கானிஸ்தானில் சமீபத்திய முன்னேற்றங்கள் அங்கு ஏற்கெனவே நிலவி வந்த பாதிப்பை அதிகரித்துள்ளது," என்றும் ஐ.நா கூறியுள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமியவாத போராளிகள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு முன்பே, உள்நாட்டு மோதல் காரணமாக இந்த ஆண்டு 5,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது, அந்நாட்டில் தற்போது 35 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் அக்டோபர் 6,9ல் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்

    தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

    வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - செப்டம்பர் 15

    வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - செப்டம்பர் 22

    வேட்புமனு பரிசீலனை - செப்டம்பர் 23

    வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - செப்டம்பர் 25

    முதல் கட்ட தேர்தல் நாள் - அக்டோபர் 6

    2ஆம் கட்ட தேர்தல் நாள் - அக்டோபர் 9

    வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 12

  7. இலங்கை நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எம்பி பதவியை ராஜநாமா செய்தார், மப்றூக், இலங்கை

    இலங்கை

    பட மூலாதாரம், Self

    படக்குறிப்பு, நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

    லங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்துள்ளார்.

    நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் பொதுஜனபெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2020ஆம் ஆண்டு அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

    மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்தார்.

    பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு அமைந்த அரசாங்கத்தில் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கப்ரால் -நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.

    இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் தனது பதவியிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதி விலகவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

    பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

    தற்போது 80 வயதாகும் பேராசிரியர் லக்ஷ்மன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது இவ்வாறிருக்க, அஜித் நிவாட் கப்ரால் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டாகொட நியமிக்கப்படவுள்ளார் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டாகொட; மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான தற்போதைய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்காக, தனது பதவியை சில மாதங்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார்.

    இந்த நிலையில், மீண்டும் ஜயந்த கெட்டாகொட நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா - தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

    மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதா தமிழ்நாடு சடட்ப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதா மீதான விவாதத்தின் முடிவில் மசோதாவுக்கு எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

  9. நீட் தேர்வு: மாணவர் தனுஷின் தற்கொலை முடிவு - கண்ணீரில் குடும்பம்

    நீட் தேர்வு
    படக்குறிப்பு, மாணவர் தனுஷ்

    நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது.

    சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு நிஷாந்த், தனுஷ் என இரு மகன்கள் உள்ளனர்.

    நிஷாந்த் தனியார் கல்லூரியில், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.தனுஷ் மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு, தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார். ஆனால் இரு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்துள்ளார்

    இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக மேச்சேரி காவேரி கல்லூரியில் நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது, இதில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என அச்சமடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என அவரது குடும்பத்தினரும், காவல்துறையினரும் கூறுகின்றனர்..

    இது தொடர்பாக விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

  10. நீட் தேர்வு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

    Stalin

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின்

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதன்போது எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது நீட் தேர்வு தொடர்பாக முவைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

    "அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று, ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்," என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

    "நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் ," என்றும் நேற்றைய அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

  11. அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமனம்

    அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் இன்று வெளியிட்டுடள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார்.

  12. வாணியம்பாடி சமூக செயல்பாட்டாளர் படுகொலை: முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம், ஆ. விஜயானந்த்

    வாணியம்பாடி பகுதியில் சமூக செயல்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம், இன்று சட்டசபையில் எதிரொலித்தது. `கொலை சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிவிட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்' என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடியதும் கறுப்பு நிற பட்டையை அணிந்தபடி அ.தி.மு.க உறுப்பினர்கள் சபைக்கு வந்தனர். நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாணவர் தனுஷ் மரணம் மற்றும் வாணியம்பாடியில் சமூக விரோதிகளால் சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை காரணமாககறுப்பு நிற பட்டையை அணிந்து வந்ததாக அ.தி.மு.க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    பின்னர், சபை கூடியதும் வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். மேற்கண்ட சம்பவத்தில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்னைகளை இந்த அவையில் கிளப்பி அவற்றின் நிலை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் சொல்கிறபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிவிட்டு, சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறி இங்கே ஒப்புதல் தந்திருக்கிறார். எனவே, அதுகுறித்து நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.

    தொடர்ந்து பேசுகையில், "கடந்த 26-7-2021 அன்று வாணியம்பாடி ஜீவா நகரைச் சார்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் துறையினர் ரெய்டு செய்துள்ளனர். அதில் 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக்கைப்பற்றி, பைசல் உள்ளிட்ட மூன்று நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கஞ்சா குறித்த தகவலை வசீம் அக்ரம் என்பவர்தான் காவல் துறையினருக்குத் தகவல் கூறியதாக இம்தியாஸ் கருதியுள்ளார்.இந்நிலையில், 10-9-2021 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் வசீம் அக்ரமை வழிமறித்து, அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

    இந்தக் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரைச் சார்ந்த பிரசாத் மற்றும் மண்ணிவாக்கத்தைச் சார்ந்த டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களைஇரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

  13. 5 சவரன் நகை வரை அடகுவைத்த கடன்கள் தள்ளுபடி - மு க ஸ்டாலின்

    கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு முதல் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார் முதல்வர். இதனால் அரசுக்கு 6,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

  14. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வு நிரந்தர விலக்கு மசோதா தாக்கல்

    மு க ஸ்டாலின்

    பட மூலாதாரம், @mkstalin, Twitter

    படக்குறிப்பு, மு க ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். ` பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்' என்றார் முதலமைச்சர்.

    தமிழ்நாடு சட்டமன்றம் இன்று தொடங்கியதும் அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு நிற பட்டையை அணிந்தபடி வருகை தந்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக இவ்வாறு அணிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சபை கூடியதும் வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை குறித்து போலீஸில் புகார் அளித்த வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

    தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சபையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `` நீட் தேர்வினை நாங்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை பெறும் வகையில் இந்த மசோதா உள்ளது" என்றார்.

    தொடர்ந்து பேசுகையில், `` தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்வதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம்" என்றார். மேலும், ``சி.ஏ.ஏ சட்டம் வந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு கொடுத்தால் அதனை ஆதரிப்போம் என அ.தி.மு.க கூறியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அதைச் செய்வதற்கான சக்தி அ.தி.மு.கவுக்கு இல்லை" என்றார்.

  15. புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா - தென்கொரியா ஆய்வு

    ஜப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு க்ரூஸ் ஏவுகணையை வட கொரியா இன்று (திங்கட்கிழமை) பரிசோதித்து இருப்பதாக வடகொரியாவின் செய்தி முகமையான கே.சி.என்.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.

    க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை.

    வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் போதும், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

    தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    North Korea tests new long-range cruise missile

    பட மூலாதாரம், kcna

  16. நீட் தேர்வு - எடப்பாடி பழனிசாமி கேள்வி

    அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அமலானது குறிப்பிடத்தக்கது.

    "நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்."

    "அதற்கு சரியான பதிலைக் கூறி, மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி
  17. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகச் செய்திகளுக்கு தொடர்ந்து இப்பக்கத்தில் இணைந்திருங்கள்.