சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக எடுத்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் கூட அனுமதிப்பது தொற்றுப் பரவலுக்கு வழி வகுக்கும் என்றுகூறி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து, சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக, இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
போலீசார் அதைத் தடுத்தனர்.
உடனே இந்து அமைப்பினர் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன்பு சிலை வைத்து, மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினர்.
போலீஸ் தடுப்பை மீறி பிறகு விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அவர்கள் முற்பட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் சிலை எடுத்து வந்தவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து இந்து முன்னணி சேலம் மண்டலத் தலைவர் சந்தோஷ்குமார் காவல்துறையினரிடம் சிலையை தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் சிலையை எடுத்து செல்ல ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர்.
இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் கூறும்போது, வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று எல்லைப்பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள பீடத்தில் வைத்துதான் மூன்று நாட்கள் பிள்ளையாரை வழிபடுவோம்.
தற்போது அனுமதி மறுத்து உள்ளதால் சிலையை நாங்கள் எங்கள் கடைக்கு எடுத்துச் செல்கிறோம் ஊர்வலமாக செல்ல வில்லை என்றார்.