இந்தியாவுடனான சரக்கு போக்குவரத்தை நிறுத்தியது ஆப்கன் தாலிபன்
இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான தரைவழி வர்த்தகம் சரக்கு வாகனங்கள் மூலமாகவே நடக்கும். இந்த வாகனங்கள் ஆப்கானிஸ்தானை அடைய பாகிஸ்தான் சாலை வழியையே பயன்படுத்துகின்றன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நேரலை நிறைவடைகிறது
பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,
எங்களுடைய இன்றைய நேரலை பக்கத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இத்துடன் ஆகஸ்ட் 19ஆம் தேதி நேரலை யை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவுடனான சரக்கு போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தியது தாலிபன்
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபன், இந்தியாவுடன் இதுநாள் வரை நடந்து வந்த சரக்கு போக்குவரத்து வர்த்தக தொடர்புகளை நிறுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானின் பெரும்பாலான மலைப்பிரதேச சாலைகள் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் இந்திய வாகனங்கள் சென்று வந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தானை இணைக்கும் தமது அனைத்து எல்லைகளையும் தாலிபன் மூடி விட்டது. இதனால், வழிநெடுகிலும் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டு வந்த சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து தரைவிரிப்பான்கள், படுக்கை விரிப்பான்கள், உலர் பழ வகைகள், மருத்துவ குணமுள்ள மூலிகைகள் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
அவை அந்த நாட்டின் 20 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டும் ஆதாரங்களாக விளங்கின. அந்த நாட்டிடம் இருந்து பாகிஸ்தான் 48 சதவீத பொருட்களையும் இந்தியா 19 சதவீத பொருட்களையும் பெற்று வந்தன. ரஷ்யா, துருக்கி, இராக்கும் சில வகை பொருட்களை இறக்குமதி செய்து வந்தன.
பட மூலாதாரம், Getty Images
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆப்கானிஸ்தானுக்கு உதவ ஐ.நா, சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகள் வழங்க நிதியுதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாக அவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகள் வழங்க தங்களுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு தட்டுப்பாடு உள்ளது," என கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான இந்த ஆண்டுக்கான தமது பங்கு நிதியுதவியை இரட்டிப்பாக்கி 286 மில்லியனாக வழங்குவதாக பிரிட்டன் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, வெளிநாட்டினரை வெளியேற்ற தாலிபன்கள் ஒத்துழைப்பு: மீட்பு அதிகாரி
ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரை காபூல் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்க தாலிபன்கள் ஒத்துழைப்பு தருவதாக மீட்பு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
"வெளிநாட்டினர் மட்டுமின்றி தாயகத்தை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கன் மக்கள் பாதுகாப்பாக செல்லவும் நாங்கள் வழி ஏற்படுத்தியிருக்கிறோம். ஆப்கானியர்கள், வெளிநாட்டினர், தாலிபன்கள் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம், தகராறு போன்ற எந்த வகை வன்முறை ஏற்படாமல் இருக்க நாங்கள் முயன்று வருகிறோம்," என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனினும், சில இடங்களில் மக்களிடம் உரிய விசா ஆவணம் இருந்தாலும், காபூல் விமான நிலையம் நோக்கி செல்லாமல் தாலிபன்கள் தடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த விவகாரத்தில், ஐ.நா ரகசிய ஆவணத்தை பிபிசி பார்வையிட்டதில், நேட்டோ, அமெரிக்க படைகளுடன் நெருக்கமாக பணியாற்றியவர்களை தாலிபன்கள் தேடி வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து வாய்தா: ராஜேந்திர பாலாஜி மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
படக்குறிப்பு, ராஜேந்திரபாலாஜி, தமிழக முன்னாள் அமைச்சர்
தன் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து ஒத்திவைக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
தெரிவித்துள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரையிலான
காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது 7 கோடி ரூபாய்
அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில்
புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில்
கடந்த ஏப்ரல் மாதம் சத்தியநாராயணன் - ஹேமலதா அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். சத்தியநாராயணன் வழக்குப் பதிவு செய்யலாம்
என்றும் நீதிபதி ஹேமலதா, காலம் கடந்து வழக்குப் பதிவுசெய்வதால்
பயனிருக்காது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இரு நீதிபதிகளும்
மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக
நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அதன்படி அந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில்
நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றத்
தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
செய்திருப்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி
தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு அரசின்
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் பிழைகள்
கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து மனுதாரர் வாய்தா
கேட்டுவருவதாகவும் கூறினார்.
இதையடுத்து
ராஜேந்திர பாலாஜி தரப்பு மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இனி இந்த வழக்கில் வாய்தா கேட்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் வழக்கை
எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறி வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தமிழக எம்.பி.க்கள் கடிதம்: ஆங்கிலத்திலேயே பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எம்.பிக்கள் ஆங்கில மொழியில் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அனுப்புமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை தொகுதி எம்.பி வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், "தமிழ்நாட்டில் எம்.பி.கள் ஆங்கிலத்தில் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கில மொழிகளிலேயே பதில் அனுப்பப்பட வேண்டும். இது தொடர்பான சட்ட நடைமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு, மனுதாரருக்கு ஹிந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டதால் அந்த செயல், விதியை மீறுவதாக கருதக்கூடாது என குறிப்பிடப்பட்டது.
இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
என்ன வழக்கு?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் காவல் படை பணிக்கு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது. அதில், வட மாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, கிழக்கு மாநிலங்களில் தலா ஒ இடமும் தேர்வு எழுதும் மையங்கள் உள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மையங்கள் இல்லை. இதனால், புதுச்சேரியில் மையம் அமைக்குமாறு மத்திய உள்துறைக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
அவருக்கு ஹிந்தி மொழியில் உள்துறை இணை அமைச்சர் பதில் அனுப்பினார். அதன் உள்ளடக்கத்தை அறிய முடியாததால் மீண்டும் இணை அமைச்சருக்கு வெங்கடேசன் கடிதம் எழுதி, அந்த கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு ஆங்கில மொழியில் பதில் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அரசு தரப்பிடம் இருந்து பதில் வரவில்லை.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆப்கனில் தாலிபன்களுடன் இந்தியா பேச்சு நடத்துகிறதா? வெளியுறவு அமைச்சர் விளக்கம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, எஸ்.எஸ். ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றியிருக்கும் தாலிபன் தொடர்பான நிகழ்வுகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்படுவதை உறுதிப்படுத்துவதிலேயே தற்போதைக்கு இந்தியா கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க்குக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவரிடம் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தாலிபன்களுடன் சமீபத்தில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதா என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு நேரடியாக பதில் தெரிவிக்காத ஜெய்சங்கர், "தற்போதைக்கு ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறியிருப்பதை காண்கிறோம். தாலிபன்களும் அவர்களின் பிரதிநிதிகளும் காபூல் வந்தடைந்துள்ளனர். எனவே, இனி நடக்கும் நிகழ்வுகளை இந்த தொடக்கத்தில் இருந்தே பார்க்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைமை மீதான இந்தியாவின் பார்வை குறித்து கேட்டதற்கு, "இப்போது தானே வந்திருக்கிறார்கள், பார்க்கலாம்," என்று ஜெய்சங்கர் பதிலளித்தார்.
ஆப்கானிஸ்தானுடனான பிற உறவுகள், முதலீடுகள் தொடருமா என கேட்டதற்கு, "அந்த நாட்டு மக்களுடனான வரலாற்றுபூர்வ உறவுகள் அப்படியே இருக்கும். வரும் நாள்களில் நமது அணுகுமுறையை அது தீர்மானிக்கும். இப்போதைக்கு அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது," என்று ஜெய்சங்கர் கூறினார்.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் உண்மையான பட்ஜெட்டை மறைத்து
படத்தை மெகா பட்ஜெட் படமாக காட்ட 32 கோடி என மிகைப்படுத்திநாங்கள்
அறிவித்தது முட்டாள்தனம் என 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின்இயக்குநர்
செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2010ம் வருடம் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில்
வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
படம்
வெளியான போது கார்த்தி, ரீமா சென், பார்த்திபன் ஆகியோரது நடிப்பு, ஜிவி பிரகாஷின் இசை பாராட்டப்பட்ட
அதே சமயம், படத்தின் கதையை பொருத்தவரை கலவையான
விமர்சனங்களை எதிர்கொண்டது 'ஆயிரத்தில்
ஒருவன்'.
இந்த நிலையில்தான், படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து,
'ஆயிரத்தில் ஒருவன்' பட்ஜெட் குறித்தும் அதனால் தான் கற்றுக்கொண்ட விஷயம்
குறித்தும் ட்விட்டரில் மனம் திறந்துள்ளார் செல்வராகவன். அதாவது 'ஆயிரத்தில் ஒருவன்'
படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான். ஆனால், இதனை ஒரு மெகா பட்ஜெட் படமாக காட்ட
விரும்பி, அதன் எதிர்ப்பார்ப்பை கூட்டுவதற்காக படத்தின் மொத்த பட்ஜெட்
32 கோடி என அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்! படத்தின் உண்மையான பட்ஜெட்டை
படம் வெளியாகி அந்த சமயத்தில் வசூல் செய்தாலும் அது சுமாரான படமாகவே கருதப்பட்டது.
இதிலிருந்து முரண்பாடு இருந்தாலும் பொய் செல்லக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன் என
மனம் திறந்துள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 2024-ல் வெளியாகும் என படம் குறித்தான அறிவிப்பில் சொல்லப்பட்டு இருந்தது. இரண்டாம் பாகத்தில் தாம் சோழ இளவரசனாக நடிப்பதையும் உறுதி செய்துள்ளார் தனுஷ்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலைய மரணங்கள் - எண்ணிக்கை எவ்வளவு?
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காபூல் விமான நிலையம் மற்றும் அதனைக் சுற்றியுள்ள பகுதிகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தாலிபன் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பெயர் வெளியிடாமல் பேசிய அவர் இந்த மரணங்களுக்கு காரணம் துப்பாக்கிச் சூடு அல்லது கூட்ட நெரிசல் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களால் காபூல் விமான நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் உண்டாகியுள்ளது.
பாராலிம்பிக் கிராமத்தில் கொரோனா
ஜப்பானில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டோக்யோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கிராமத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
தொற்றுக்கு உள்ளானவர் விளையாட்டு வீரர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள 70க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா பாதித்துள்ளது.
பட மூலாதாரம், istock
தாலிபன்கள் பாகிஸ்தானுக்குள் வருவதைத் தடுக்க முயற்சி
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் முன்னரே அந்நாட்டுடனான எல்லையை மூடியது பாகிஸ்தான்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தோர்காம் எல்லை நுழைவை, பாகிஸ்தான் வர்த்தக மற்றும் பாதாசாரிகளின் பயண நோக்கத்துக்காகத் திறந்துள்ளது.
இரு தரப்பிலும் இருந்து, நாளொன்றுக்கு சராசரியாக 6,000 பேர் முதல் 7,000 பேர் வரை இந்த எல்லை நுழைவைப் பயன்படுத்துவர்.
தற்போது சுமார் 50 பேர் மட்டுமே எல்லையைக் கடக்க காத்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தானியர்கள் ஆவர்.
தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் வழக்குத்துக்கும் அதிகமான நேரம் எடுத்து அவர்களைச் சோதனை செய்து, விசாரித்து பாகிஸ்தானுக்குள் அனுப்புகின்றனர்.
வர்த்தகம் செய்வோர், ஆஃப்கனில் சிக்கிக்கொண்டோர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.
படக்குறிப்பு, தமது குழந்தையுடன் பாகிஸ்தானுக்குள் நுழையைக் காத்திருக்கும் ஆஃப்கன் தந்தை.
தாலிபன்களுக்கு சர்வதேச செலாவணி நிதியம் தடை
பட மூலாதாரம், Getty Images
தங்கள் வசம் இருக்கும் நிதி ஆதாரத்தை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் இனி பெற முடியாது என சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்திருக்கிறது.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அங்கீகரிப்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தில் தெளிவு இல்லாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருக்கிறது.
சர்வதேச செலாவணி நிதியத்தால் ஆகஸ்டு 23 அன்று 370 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ஆப்கானிஸ்தானுக்கு தரப்பட இருந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் 2750 கோடி ரூபாய் ஆகும்.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு அமெரிக்காவில் இருக்கும் நிதி ஆதாரங்களை அமெரிக்கா முடக்கிவிட்டது.
ஆப்கனில் 15 ஆயிரம் அமெரிக்கர்களின் கதி என்ன? ஜோ பைடன் பதில்
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவைச் சேர்நத கடைசி நபரும் வெளியேறும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும் என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் இதைத் தெரிவித்தார்.
"ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரையும் மீட்பதற்கு முயற்சி செய்வோம். இல்லாவிட்டால் அங்கேயே தங்கியிருந்து மீட்புப் பணிகளை முடிப்போம்" என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இன்னும் தங்கியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
இவர்கள் தவிர அமெரிக்காவுக்காகப் பணியாற்றிய சுமார் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரையிலான ஆப்கானியர்களையும் மீட்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக பைடன் தெரிவித்தார்.
தாலிபன்கள் இந்த வேகத்தில் முன்னேறுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்றும் ஏபிசிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறினார்.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.