மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றம்
மக்களவையில் ஒதுக்கப்பட்டிருந்த 96 மணி நேரத்தில் 21 மணி நேரம் 14 நிமிடங்களுக்கு மட்டுமே அலுவல்கள் நடந்ததாகவும் அலுவல் செயல்திறனில் இது வெறும் 22 சதவீதம் மட்டுமே என்றும் அதன் தலைவர் ஓம் பிரகாஷ் பில்ரா தெரிவித்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆகஸ்ட் 11ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
இத்துடன் புதன்கிழமைக்கான பிபிசி தமிழின் நேரலை பக்கம் நிறைவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு, பரணி தரன்
பட மூலாதாரம், RAJYA SABHA TV
படக்குறிப்பு, மாநிலங்களவையில் புதன்கிழமை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரின் இரு அவை அலுவல்கள், ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்கள் முன்பாக ஆகஸ்ட் 11ஆம் தேதியே தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.
மாநிலங்களுக்கு அவற்றின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை வழங்க வகை செய்யும் அரசியலமைப்பு திருத்த மசோதா, தேசியமயமாக்கப்பட்ட பொது காப்பீடு திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.
பிற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அந்த அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்க அரசியலமைப்பின் 127ஆவது திருத்தம் வகை செய்வதாக, மாநிலங்களவையில் இந்த மசோதா குறித்துப் பேசிய இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மாநிலங்களவையில் கூட்டத்தொடரை தள்ளி வைக்கும் முன்பாக பேசிய அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு, முந்தைய நாள் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் நடந்து கொண்ட செயல் மிகவும் கவலை தருவதாகக் கூறினார். அப்போது ஒரு கட்டத்தில் வெங்கய்ய நாயுடு கண் கலங்கினார்.
மாநிலங்களவையின் புனிதம் சில எதிர்கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டால் அழிக்கப்பட்டு விட்டதாகவும், தன்னால் முந்தைய நாள் இரவு சரியாக தூங்க முடியாத அளவுக்கு எம்.பிக்களின் செயல் வலியைத் தந்தது என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
முன்னதாக, அவை பல்வேறு கட்ட ஒத்திவைப்புக்கு பிறகு மாலை 6 மணியளவில் கூடியபோது, அரசியலமைப்பின் 127ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அப்போது எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கை சில நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டன.
பிறகு அவை கூடியபோதும் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எதிர்கட்சி எம்.பிக்கள் மையப்பகுதியை சூழ்ந்து கொண்டு பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி குரல் கொடுத்தனர்.
இந்த அமளிக்கு மத்தியில் காப்பீடு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவை நடவடிக்கை 18.38 முதல் 7.04வரை தள்ளிவைக்கப்பட்டது.
பிறகு அவை கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் அமைதியை விரும்புபவர்கள். ஆனால், இங்கு பல ஆண், பெண் மார்ஷல்கள் எங்களை சூழ்ந்து கொண்டு அரண் போல நிற்கிறார்கள். பெண் எம்.பி.க்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் அவமானம்," என்று கூறினார்.
பாஜக புகார்
அப்போது பாஜக உறுப்பினர் பிரஹ்லாத் ஜோஷி, அவைக் காவலர்களை எதிர்கட்சியினர் சிலர் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
எதிர்கட்சியினரின் இந்த செயல், திட்டமிட்டே செயல்படுத்தப்படுவதாக இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.
இதைத்தாடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து பேசிய வெங்கய்ய நாயுடு, கூட்டத்தொடரை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக அறிவித்தார்.
மக்களவையில்...
மக்களவையிலும் இதேபோன்ற சூழ்நிலை நிலவியதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லாவுடன் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள்.
இருப்பினும் அவை கூடியபோது அமளி தொடர்ந்ததால் மக்களவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஓம் பிரகாஷ் பிர்லா தள்ளிவைப்பதாக அறிவித்தார்.
வீணாகிப் போன அலுவல் நேரங்கள்
மக்களவையில் அதன் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா, மழைக்கால கூட்டத்தொடர் சமூகமாக நடக்காமல் போனதற்காக தமது கவலைகளை தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவையின் மையப்பகுதிக்கு வந்து பதாகைகளுடன் கோஷமிட்ட எதிர்கட்சிகளின் செயல்பாடு நாடாளுமன்ற மரபுக்கு உகந்ததாக இருக்கவில்லை," என்று அவர் கூறினார்.
மக்களவையில் 74 மணிநேரம், 46 நிமிடங்களுக்கு அலுவல்கள் வீணாகியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா கூறினார்.
ஒதுக்கப்பட்டிருந்த 96 மணி நேரத்தில் 21 மணி நேரம் 14 நிமிடங்களுக்கு மட்டுமே அலுவல்கள் நடந்ததாகவும் அலுவல் செயல்திறனில் இது வெறும் 22 சதவீதம் மட்டுமே என்றும் ஓம் பிரகாஷ் பில்ரா தெரிவித்தார்.
பட மூலாதாரம், LOK SABHA TV
படக்குறிப்பு, மக்களவையில் புதன்கிழமை
நெய்வேலியில் சுரங்க லாரி மோதி தொழிலாளி சாவு - 3 லாரிகளுக்கு தீ வைத்த கிராமமக்கள், நடராஜன் சுந்தர், புதுச்சேரி
படக்குறிப்பு, தீக்கிரையான லாரி
நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு சாம்பல் ஏற்றி வந்த தொழிலாளி ஒருவர் மீது மோதியதில் அவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அருகே இருந்த கிராமமக்கள் வேகமாக வாகனத்தை ஓட்டி வருவதாகக் கூறி அந்த வழியாக வந்த மூன்று லாரிகளுக்கு தீ வைத்தனர். மேலும் சில லாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன் (வயது 45),
என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதியுடன் கோவிந்தன் விருத்தாசலம் அருகே பூதாமூரில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார்.பின்னர் கோயில் தரிசனம் செய்து விட்டு, கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மேலக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மேலக்குப்பம் அருகில் சென்ற போது, அவ்வழியாக நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவிந்தன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் ஓட்டிவந்த கோவிந்தன சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி திலகவதி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விபத்து பற்றி அறிந்த தெர்மல் பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து, உயிரிழந்த கோவிந்தனின் சடலத்தை கைப்பற்ற முயன்றபோது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பிரேதத்தை எடுக்க அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதி கோவிந்தன் உயிரிழந்தது பற்றிய தகவல், அப்பகுதி முழுவதும் தெரிய தொடங்கியது. இதை கேட்டு ஆத்திரமடைந்த மேலக்குப்பம் கிராம மக்கள் விபத்து நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் அவர்கள் அவ்வழியாக நிலக்கரி சாம்பல் ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து வந்த லாரிகளை வழிமறித்தனர்.
தொடர்ந்து லாரிகளின் முன்பகுதியிலும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரிகளில் வந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரிகள் எரியூட்டதில் 3 லாரிகள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், அவ்வழியாக வந்த சில லாரிகளை வழிமறித்து சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
`போலிச் செய்திகளை நீக்கிவிடுங்கள்`- சீனாவை எச்சரித்த சுவிட்சர்லாந்து தூதரகம்
பட மூலாதாரம், Getty Images
சீனாவில் உள்ள
சுவிட்சர்லாந்து தூதரகம், போலியான செய்திகள் மற்றும் பதிவுகள் சிலவற்றை நீக்கும்படி
சீனாவை வலியுறுத்தியுள்ளது.
சில தினங்களாக
சீன ஊடகங்களில் சுவிட்சர்லாந்தின் தாவரவியல் நிபுணர் என்று சொல்லப்படும் நபர் உண்மையில்
இல்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
கோவிட் – 19-ன்
தோற்றம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சுயாதீனம் ஆகியவை குறித்த செய்திகளில் அரசு
ஊடகம் உட்பட பல்வேறு ஊடகங்கள் வில்சன் எட்வேர்ட் என்னும் நபரை சுட்டிக் காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தின்
இந்த அறிக்கைக்கும் பிறகு பல ஊடகங்கள் அந்த செய்தியை நீக்கியுள்ளது.
சிஜிடிஎன், ஷாங்காய்
டெய்லி, குளோபல் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் அந்த நபரின் முகநூல் பக்கத்தை வைத்து சுட்டிக்
காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்த முகநூல்
கணக்கு தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள்தான் ஆகிறது என்றும், மூன்று பேர் மட்டுமே நண்பர்கள்
பட்டியலில் உள்ளனர் என்றும் சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் எஸ்.பி. வேலுமணி: திடீர் வருகை பற்றி உளவுத்துறை விசாரணை
பட மூலாதாரம், S.P. Velumani FB
படக்குறிப்பு, எஸ்.பி. வேலுமணி
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ரகசியமாக திருச்செந்தூர் வர காரணம் என்ன என்பது குறித்து தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி க்கு சொந்தமான வீடுநிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என சுமார் 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இன்றும் பல இடங்களில் சோதனை தொடருகிறது.
இந்த நிலையில், அவர் இன்று திடீரென திருச்செந்தூர் வந்ததாக தகவல் வெளியானது.
இது குறித்து விசாரித்தபோது, சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து வேலுமணி, காரில் திருச்செந்தூர் நோக்கி சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் இன்று திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர் அங்கு செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
வேலுமணி எங்கு சென்றார் என்பதை கண்டறிய முடியாத நிலையில், மீண்டும் பிற்பகல் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வேலுமணி வந்தார்.
தேடி வந்த நிலையில் மதியம் சென்னை செல்லும் விமானத்தில் அவர் பயணிக்க டிக்கெட் எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்த செய்தியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
எதிர்பார்த்தது போல சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்க கார் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு எஸ்.பி வேலுமணி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை தவிர்த்து விட்டு விமான நிலையம் உள்ளே செல்ல முயற்சி செய்தார்.
செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் ஒருசில வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது அவர் பேசுகையில் நேற்று கோவிலுக்கு வருவதாக இருந்தேன் இந்த சம்பவம் காரணமாக வர முடியவில்லை தலைவர்கள் அறிக்கை அளித்து இருக்கின்றனர்.
இரு தினங்களில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அனுமதியோடு விரைவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பேன் என கூறி சென்றார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் திடீரென எஸ்பி வேலுமணி தூத்துக்குடி மாவட்டதிற்கு வர காரணம் என்ன?, திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தில் ரகசியமாக யாரையும் சந்தித்தாரா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையை திசை திருப்ப வந்தாரா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இது குறித்து பல்வேறு இடங்களில் தூத்துக்குடி உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: புதிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு, பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் தயாரிக்க தொழிற்சாலை மூலப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியே கொண்டு வர அனுமதி கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் அவசரகால பணிகளை மேற்கொள்ளும் விவகாரம் தொடர்பாக அதன் மேலாளர் சுமதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ரூ.200 கோடி மேல் மதிப்புள்ள மூலப்பொருள்களை தொழிற்சாலையின் உள்ளே உள்ளது அதனை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் இது தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில் அவ்வாறு எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மனுவில் என்ன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?
'தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை அனைத்து அனுமதியும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை முடியது.
மேலும் தமிழக அரசு ஆணை 72 ன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.
வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டது
அதன் விளைவாக அவசரகால நிலைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே அமிலம், ரசாயனம் மற்றும் பல மூலப் பொருட்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்தும் அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து ஆலையின் உள்ளே இருக்கும் மூலப்பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அரசாணை எண் 83-ன் படி உள்ளூர் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது 2132.64 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்ஸிஜனை மற்றும் 7833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.
இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர்.
தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை வெளியேற்றவும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணை, மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவை வெளியேற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எனவும், அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள், கழிவுகள் ஆகியவை வெளியே கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும்.' என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, மு. ஹரிஹரன்
பட மூலாதாரம், S.P.Velumani FB
படக்குறிப்பு, எஸ்.பி. வேலுமணி
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்களின் நிறுவனங்களிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக இன்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது. எஸ்.பி.வேலுமணியின் நெருக்கமான நண்பர்களாக அறியப்படும் சந்திரப்பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் நிர்வகிக்கும் கே.சி.பி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், மதுக்கரை அருகே உள்ள கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகத்திலும், திருப்பூர் அருகே வேலுமணிக்கு நெருக்கமான நபர்களின் மற்றொரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அதிகாலை குனியமுத்தூரில் உள்ள வேலுமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகரின் இல்லம் மற்றும் கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சந்திரப்பிரகாஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்றுவரை அவர் மருத்துவமனையில் இருப்பதாகவே தெரியவருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் A4 என இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வேலுமணியின் மற்றொரு நெருக்கமான நண்பராக கருதப்படும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், கே.சி.பி நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் A5 என இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வேலுமணியின் மூத்த சகோதரரான எஸ்.பி.அன்பரசன் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் நகைக்கடையிலும் நேற்று சோதனை நடைபெற்றது.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அன்பரசன், சட்டரீதியாக இதனை எதிர் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களை கொண்டு எங்களது அனைத்து நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
சமீபத்தில் இந்த அரசாங்கம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் எனது சகோதரர் அமைச்சராக இருந்த உள்ளாட்சித் துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிமுக பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் தொழில் வரி போன்ற வரியினங்களை உயர்த்தவில்லை.
திமுக அமல்படுத்தியிருந்த வரிகளை மட்டுமே வசூலித்து வந்தோம். மேலும் 2019ஆம் ஆண்டு முதல் கோவிட் காரணமாக வரி உயர்வு செய்யவில்லை. இப்படி இருக்க திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை.
மேலும், நடக்கவிருக்கும் சட்டசபை கூட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
டெண்டர் மோசடி மற்றும் நிறுவனங்களில் வளர்ச்சி என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. எனது நிறுவனம் 100 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10 கோடி டர்ன்ஓவர் செய்யும் நிறுவனம் அடுத்த ஆண்டு 20 கோடி டர்ன்ஓவர் செய்வதில் ஆச்சரியமில்லை.
அப்படிப்பார்த்தால் அவர்களுக்கு சொந்தமான சன் குழுமங்களில், அன்றைக்கு 10 கோடியாக இருந்த டர்ன்ஓவர், தற்போது 10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே இந்த சோதனை நாடகம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அதிமுகவின் பலத்தை நிரூபிப்போம். கடந்த தேர்தலில் கோவையில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியும் வெற்றி பெற்றதை திமுகவினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிமுகவை முடக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற ரீதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கமும், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு இப்போது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம்' என வேலுமணியின் சகோதரர் எஸ் பி அன்பரசன் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
வானதி ஸ்ரீனிவாசன் ஆதரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து பாஜக தரப்பில் கோவை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இச்சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த தொடர் சோதனைகள், அதிமுகவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் சேர்ந்த அதிமுகவினர்
இந்நிலையில், இன்று காலை கோவை 25வது வார்ட்டுக்குட்பட்ட தெப்பக்குளம் வீதி பகுதியில், திமுகவின் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்நிகழ்வு கோவை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நேற்று குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தபோது, கோவையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதனையடுத்து, உரிய அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதற்காகவும், தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாகவும் 3 பிரிவுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 200 பேர் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஹிமாச்சல பிரதேச மலைப்பகுதியில் நிலச்சரிவு - இருவர் சாவு, மீட்ப்புபணிகள் தீவிரம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னார் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற பேருந்தும் டிரக்கும் சிக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் இருந்தவர்கள் நிலை என்ன எனத் தெரியவில்லை. தற்போதுவரை இருவர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 40 பேர் வரை இந்த சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அங்குள்ள ரீகோங் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகுர் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி என்பதால், அங்கு மீட்பு நடவடிக்கையில் பயிற்சி பெற்ற இந்திய திபெத்திய எல்லை காவல் படையின் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில முதல்வர் ஜெய் ராம் தாகுரை தொலைபேசியில் தொடர்பு கொணன்டு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி நிலைமையை கேட்டறிந்தார்.
இந்த நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள் வழக்கமாக நடப்பவை என்றாலும், மலைப்பகுதி நெடுஞ்சாலையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை.
கடந்த மாதம் நிலச்சரிவு ஏற்பட்டபோது, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாறைகள் விழுந்தன. அதில் 9 பேர் பலியானார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் - புதிய ஆய்வுக்கு அனுமதி
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளின் இரு வெவ்வேறு டோஸ்களை செலுத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்த ஆய்வு மற்றும் மனித உடலில் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியால் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக வழங்கப்படும் இந்த இரு தடுப்பூசிகளையும் இரு வேறு டோஸ்களாக செலுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் துறைசார் வல்லுநர்களால் ஆராயப்படவில்லை. அவ்வாறு வல்லுநர்கள் ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவுகளை அங்கீகரித்தால், இந்தியாவில் வெவ்வேறு தடுப்பு மருந்துகளின் இரண்டு டோஸ்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மு.க. ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் விமர்சனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார் என்று கோவை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
வேலுமணி வீட்டில் ரெய்டு மற்றும் தொடர் நடவடிக்கைகள் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூடிய நடவடிக்கை என்று அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்திய நிலையில், அவரது கோவை வீட்டில் மாலை 5.30 மணியளவில் சோதனையை அதிகாரிகள் நிறைவு செய்தனர்
ராஜேந்திர சோழன்: ஆடித் திருவாதிரை விழா இனி அரசு விழா
மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1.000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நிகழும் ஆடித் திருவாதிரை விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அதனால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
AY1 (B.1.617.2.1), AY2, AY3 மற்றும் இன்னொரு வைரஸ் உள் பரம்பரை ஆகிய நான்கும் டெல்டா ப்ளஸ் திரிபு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் சுஜித் சிங் கூறியுள்ளார்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34, மத்தியப்பிரதேசத்தில் 11 மற்றும் தமிழ்நாட்டில் 10 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
'ஆஃப்கனில் இருந்து அமெரிக்க படைகள் விலகியது பற்றி வருத்தம் இல்லை' - ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டின் படைகளை விலக்க முடிவு செய்தது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தாலிபன்களை எதிர்க்க அந்நாட்டு தலைவர்கள் "தங்கள் நாட்டுக்காக ஒன்றிணைத்து போராட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய பின்னர் அந்நாட்டில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
நாட்டில் உள்ள 34 மாகாணங்களில் குறைந்தது எட்டு மாகாணங்களின் தலைநகர்களை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இப்போது சண்டை ஏன்?
இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தாலிபன்களின் அரசு புகலிடம் தருவதாகக் கூறி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.
அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அதன் பின்னரே ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன.
வெளிநாட்டுப் படைகளின் இருப்பால் தாலிபன்கள் கை ஓங்காமல் இருந்தது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.
இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைச் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.
எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் கலால் வரி மூலம் தாலிபன்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும்
இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது செய்தியாளர் விக்னேஷ். இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளுக்கு இப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நேயர்களே.