You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

`முக்கிய பிராந்திய தலைநகரை தாலிபன்கள் கைப்பற்றினர்` – ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்

நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகரான சராங்கை, வெள்ளிக்கிழமை மதியம் தாலிபன்கள் கைப்பற்றியதாக இருவரிடமிருந்து தகவல் கிடைத்திருக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    வணக்கம் நேயர்களே, பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. முக்கிய பிராந்திய தலைநகரை தாலிபன்கள் கைப்பற்றினர் – ஆப்கன் அதிகாரிகள்

    தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு முக்கிய மாகாண தலைநகரை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.

    நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகரான சராங்கை, வெள்ளிக்கிழமை மதியம் தாலிபன்கள் கைப்பற்றியதாக இருவரிடமிருந்து தகவல் கிடைத்திருக்கின்றன.

    ஆனால் இந்த தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை.

    மேற்குலகப் படைகள் பின்வாங்கிய பின், ஆப்கானிஸ்தானில் தாலிபன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதையே இது காட்டுகிறது.

    முன்பு தாலிபன்கள் ஆப்கனின் கிராமபுறங்களைக் கைப்பற்றி வந்தனர். தற்போது முக்கிய நகரங்களைக் இலக்கு வைக்கின்றனர்.

    எனவே ஆப்கனின் மேற்கில் இருக்கும் ஹெராத் நகரும், தெற்கில் இருக்கும் லஷ்கர் கா நகரமும் பெரும் அழுத்தத்தில் இருக்கின்றன.

    சராங் நகரம் இரானின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்று. சராங் நகரத்தைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களைக் கைப்பற்றிய பிறகு, தற்போது சராங் நகரைக் கைப்பற்ற தாலிபன்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

    தேசிய பாதுகாப்பு இயக்குநரக அலுவலகத்தைச் சுற்றி போர் நடந்து கொண்டிருப்பதாக அரசு தரப்பில் இருந்து பிபிசியிடம் கூறப்பட்டுள்ளது.

    அரசு தரப்பில் இருந்து போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், சராங் நகரத்தை தாலிபன்களால் கைப்பற்ற முடியும் என பெயர் குறிப்பிட விரும்பாத நிம்ரோஸ் நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் வைத்து அரசின் ஊடக மற்றும் தகவல் மையத்தின் இயக்குநர் தாலிபன்களால் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. தவா கான் மெனாபால் அவரது செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார் என அவரது மரணம் குறித்து தாலிபன்கள் கூறியுள்ளனர்.

  3. கிழக்கு லடாக் கோக்ராவில் இருந்து இந்திய-சீனப் படைகல் விலகல்

    கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா பகுதியில் இருந்து இந்தியா சீனா ஆகிய நாடுகளின் படைகளும் விலகி பின்வாங்கியுள்ளன. ராணுவ மட்டத்தில் நடைபெற்ற 12வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. “ஒப்பந்தத்தின்படி இருதரப்பு படைகளும் விலகும் பணி கட்டங்களாக, ஒருங்கிணைந்து, கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இரு தரப்பிலும் செய்யப்பட்டிருந்த தாற்காலிக கட்டுமானங்கள், பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு இரு தரப்பாலும் சரிபார்க்கப்பட்டது. அங்கே மோதல் ஏற்படுவதற்கு முன்பிருந்த நிலை திரும்பியுள்ளது என்று இந்திய ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது பிடிஐ.

  4. தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளி திறக்க உத்தேசம் - முதல்வர்

    தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினர் கருத்துகளையும் கேட்டு செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளி திறக்க உத்தேசம் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  5. தோனியில் டிவிட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டிவிட்டர் கணக்கிலிருந்த `ப்ளூ டிக்` நீக்கப்பட்டுள்ளது.

    டிவிட்டரில் தோனியை 82 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 3.45 மில்லியன் பேரும், முகநூலில் 25 மில்லியன் பேரும் தோனியை பின் தொடருகின்றனர்.

    மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் அரிதாகவே பதிவிடுவார்.

    கடைசியாக ஜனவரி 8ஆம் தேதி தோனி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு முன்பு செப்டம்பர் 10ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.

    எனவே கடந்த இரு வருடங்களில் தோனி மொத்தமாக 11 ட்வீட்களை மட்டுமே பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் இணைந்ததிலிருந்து 480 ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெறும் 107 பதிவுகளை மட்டுமே இட்டுள்ளார்.

    ஆக்டிவாக இல்லாத காரணத்தால் தோனியின் டிவிட்டர் கணக்கிலிருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

    கிட்டதட்ட குடியரசுத் துணை தலைவர் வெங்கயா நாயுடுவின் டிவிட்டர் கணக்கிலிருந்த ப்ளூ டிக்-கும் இதேபோன்றதொரு காரணத்திற்காக நீக்கப்பட்டது. அது பெரும் சர்ச்சையானது.

    வெங்கயா நாயுடு டிவிட்டர் கணக்கு தொடர்பாக விளக்கமளித்திருந்த டிவிட்டரின் செய்தி தொடர்பாளர், “வெங்கயா நாயுடுவின் டிவிட்டர் கணக்கு ஜூலை 2020லிருந்து ஆக்டிவாக இல்லை. எனவே ப்ளூ டிக் தானாக மறைந்துவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

    இருப்பினும் தோனியின் டிவிட்டர் கணக்கிலிருந்த ப்ளூ டிக் ஏன் நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

  6. ஜான்சன் & ஜான்சன் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் பயன்படுத்த விண்ணப்பம்

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரே டோசில் செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதற்கான அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய அரசிடம் இதற்காக விண்ணப்பித்துள்ளது ஜான்சன் & ஜான்சன் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

  7. பஜ்ரங் புனியா தோல்வி

    டோக்யோ ஒலிம்பிக், ஆடவர் 65கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வியுற்றார்.

    வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் நாளை பங்கேற்பார்.

  8. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி

    இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    இதனால், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையும் அமளி நிலவுகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் உளவு செயலியைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும், விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்குக் காரணமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனிடையே வரிவிதிப்பு திருத்தச்சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

  9. மூங்கில் குச்சி மூலம் ஹாக்கி கற்றுக்கொடுத்தேன் - இந்திய வீராங்கனையின் தந்தை பேட்டி

    'சிறு வயதில் அவளுக்கு மூங்கில் குச்சியைப் பயன்படுத்தி ஹாக்கி விளையாடக் கற்றுக்கொடுத்தேன்' என்று ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனை சாலிமா தேட்டேவின் தந்தை சுலக்ஷன் தேட்டே கூறியுள்ளார்.

    இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

    "ஹாக்கி போட்டிகளுக்கு சாலிமாவுடன் நான் செல்வேன். ராஞ்சி அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டபோது அவள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவள் தோற்றிருக்கலாம். ஆனால், அவள் அடைந்த உயரத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்" என்று சுலக்ஷன் தெரிவித்துள்ளார்.

  10. சுகாதார அமைச்சரை சந்தித்த கொரோனா தடுப்பூசி கம்பெனி எம்.டி.

    கோர்பிவேக்ஸ் என்ற புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்கிவரும் பயலாஜிகல் இ என்ற கம்பெனியின் மேலாண் இயக்குநர் மஹிமா டட்லா, இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார்.

    புதிய தடுப்பூசி உருவாக்கத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தைப் பற்றி அவர் விவரித்தார் என்றும், தேவையான அரசாங்க உதவிகள் வழங்கப்படும் என்று தாம் வாக்குறுதி அளித்ததாகவும் இந்த சந்திப்பு பற்றி கூறினார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

  11. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

    இந்தியாவில் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரொக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டிக்குப் பெயர் ரெப்போ ரேட் ஆகும். வணிக வங்கிகள் தங்களிடம் உள்ள ரொக்கத்தை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யும்போது அதற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகும். ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் ஏற்கெனவே உள்ளபடியே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    பணப்புழக்கம் எந்த அளவில் நிலவவேண்டும் என்று பணவியல் வல்லுநர்கள் முடிவு செய்கிறார்களோ, அதற்கேற்பவே இந்த வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும். பணப்புழக்கம் அதிகமானால், அது பண வீக்கத்துக்கு இட்டுச் செல்லும். பணப்புழக்கம் குறைந்தால் அது மந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில் எந்தவிதமான பணவியல் கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து, தங்கள் இலக்கை அடைவதற்கு இந்த வட்டி விகிதங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள் வல்லுநர்கள்.

  12. ரூ.48 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல், 4 பேர் கைது

    நான்கு போதைப் பொருள் சப்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.48 கோடி என்று தெரிவித்துள்ளது, டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு. ஏ.என்.ஐ. செய்தி முகமை இந்த தகவலை ட்வீட் செய்துள்ளது.

  13. ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா

    ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் 65 ப்ரீஸ்டைல் பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பஜ்ரங் புனியா தகுதி பெற்றுள்ளார்.

    ஈரானின் மொர்தேவை தரையில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் அஸர்பைஜானின் ஹாஜி அலியேவுடன் புனியா மோதுகிறார்.

  14. களத்துக்குள் கண்ணீர் வடித்த இந்திய ஹாக்கி வீராங்கனைகள்

    ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததும் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் கண்ணீர் விட்டுத் தேம்பி அழுதனர்.

    பலர் களத்தில் இருந்து வெளியேற இயலாமல் சோகத்துடன் நின்றனர்.அவர்களுக்கு பிரிடன் வீராங்கனைகள் சிலர் ஆறுதல் கூறினர்.

    களத்துக்கு வெளியே இருந்த இந்தியக் குழுவினரும் கண்ணீர் வடித்தனர்.

    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது.

    ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

  15. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போராடித் தோற்றது இந்திய அணி

    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது.

    ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

    முதல் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது காற்பகுதி தொடங்கியதுமே பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    பிரிட்டன் வீராங்கனை அடித்த பந்து இந்திய வீராங்கனை தீப் கிரேஸின் மட்டையில் பந்து கோலுக்குச் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் பிரிட்டன் மற்றொரு கோலை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது.

    இதற்குப் பதிலடி தரும் வகையில் 25-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோலை அடித்து 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்குச் சென்றது. இந்த இரு கோல்களையும் குர்ஜித் கவுர் அடித்தார்.

    பாதி நேர ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடம் இருந்த நிலையில் இந்திய அணி மற்றொரு கோலை அடித்த 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்குச் சென்றது.

    மூன்றாவது கால்பகுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணி மற்றொரு கோலை அடித்து சமநிலைக்குக் கொண்டுவந்தது.

    இதனால் நான்காவது கால்பகுதி ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக அமைந்தது. 48-ஆவது நிமிடத்தில் பிரிட்டனின் கிரேஸ் கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

    அதன் பிறகு ஆட்ட நேர இறுதி வரை இந்திய அணியால் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை.

  16. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: நான்காவது கோலை அடித்து பிரிட்டன் முன்னிலை

    ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நான்காவது கோலை அடித்து பிரிட்டன் முன்னிலை பெற்றிருக்கிறது

    முதல் மூன்று கால்பகுதி ஆட்டம் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்திருந்தன.

  17. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி இந்தியா - பிரிட்டன் சமநிலை

    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியை எதிர்த்து ஆடி வருகிறது.

    மூன்று கால்பகுதி ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்துள்ளன.

  18. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையில் இந்திய அணி

    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியை எதிர்த்து ஆடி வருகிறது.

    பாதி நேர ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    முதல் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது காற்பகுதி தொடங்கியதுமே பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    பிரிட்டன் வீராங்கனை அடித்த பந்து இந்திய வீராங்கனை தீப் கிரேஸின் மட்டையில் பந்து கோலுக்குச் சென்றது.

    அடுத்த சில நிமிடங்களில் பிரிட்டன் மற்றொரு கோலை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது.

    இதற்குப் பதிலடி தரும் வகையில் 25-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோலை அடித்து 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்குச் சென்றது. இந்த இரு கோல்களையும் குர்ஜித் கவுர் அடித்தார்.

    பாதி நேர ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடம் இருந்த நிலையில் இந்திய அணி மற்றொரு கோலை அடித்த 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்குச் சென்றது.

    அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி ஆடி வருகிறது.

    1980ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, டோக்யோ உட்பட மூன்று ஒலிம்பிக் போட்டிகளில்தான் இதுவரை பங்கேற்றிருக்கிறது. அதிலும் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி மோதுவது இதுவே முதல்முறையாகும்.

    டோக்யோ ஒலிம்பிக் லீக் சுற்றில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த இரு போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இந்திய அணி.

    காலிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்தது

    கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பிரிட்டனுடன் 1-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதற்குப் பழிதீர்த்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர்.

  19. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை இந்தப் பகுதியில் விரைவாகத் தொகுத்து அளிப்பவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.