நன்றி நேயர்களே...!
இன்றைய நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுவது பிபிசி தமிழின் அ.தாபாலசுப்ரமணியன். நாளை காலை வேறொரு நேரலையில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடசென்னையில் பிரபல அரசியல்வாதியாக உருவெடுத்து, எதிர்கட்சிகளுக்கு சவால் விடுப்பராக வலம் வந்தவர் மதுசூதனன். ஒரு காலத்தில் தனது அதிரடியான செயல்பாடுகளால் எதிர்கட்சி பிரமுகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவர் அவர்.
இன்றைய நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுவது பிபிசி தமிழின் அ.தாபாலசுப்ரமணியன். நாளை காலை வேறொரு நேரலையில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன் என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை இந்திய அரசு ரத்து செய்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
இந்த அமைப்பின் பொதுச் செயலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச ரீதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி என்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்திருக்கிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அந்த அமைப்புக்கு உரிமை இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வியாழக்கிழமை 1997 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.1943 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 33 பேர் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
அசாம் - மிசோரம் இரு மாநிலங்களின் எல்லை தொடர்பாக எழுந்த தகராறில் அண்மையில், அசாம் மாநில போலீசார் 5 பேர் மிசோராம் மாநிலத்தவரால் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவு இருக்கலாம்.
இதையடுத்து எழுந்த பதற்றம் காரணமாக அசாம் மாநில மக்கள் மிசோராம் மாநிலத்துக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்று அசாம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இரு மாநில பிரதிநிதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஜூலை 29ம் தேதி பிறப்பித்த அந்த பயணத்தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக அசாம் மாநில உள்துறை செயலாளர்/ஆணையர் மு.ச.மணிவண்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய தீர்மானம் ஒன்றை இந்திய அரசியலமைப்பின் 161ஆவது விதியின் கீழ் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை கூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூறினர்.
அதனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததார்.
இதனை நீதிமன்றத்தில் ஆளுநர் தனது பதிலாக தெரிவித்தார்.தமிழ்நாடு ஆளுநரின் இச்செயல் மாநில அரசையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும் என்று சட்ட வல்லுநர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.இந்l நிலையில் உச்ச நீதிமன்றம் 03.08.2021 அன்று 'ஹரியானா-எதிர்- ராஜ்குமார்' என்ற வழக்கில் மிகத் தெளிவான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்ட உறுப்பு எண் 161-இன் படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவு என்பது அரசின் முடிவுதானே தவிர ஆளுநரின் முடிவு அல்ல. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநரின் ஒப்புதலானது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு சடங்கு மட்டுமே என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், "அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் -161 இன் கீழும் தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தமிழ்நாடு அரசுக்கு அளித்த மனுவின் மீது மாநில அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்," என மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, இதனடிப்படையிலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகளின்படியும்,30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்திட தமிழ்நாடு அரசு உடனே அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் புதிதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்க வாய்ப்பை இந்திய வீரர் தீபக் புனியா இழந்துள்ளார்.
ஐரோப்பிய நாடான 61 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சான் மெரினோவைச் சேர்ந்த வீரர் மைல்ஸ் எமினேவுடன் தீபக் புனியா மோதினார்.
86 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் கடுமையாக மோதியபோதும், பதக்க வாய்ப்பை இழந்தார் தீபக்.
போட்டியில் தோல்வி அடைந்தாலும், அவரை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோதி தமது ட்விட்டர் பக்கத்தில், "தீபக் புனியா வெண்கல பதக்கத்தை இழந்தாலும் நமது இதயங்களை வென்று விட்டார். பொறுமையும் திறமையும் மிக்க அவருக்கு எனது வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார்.
மைல்ஸ் எமினேவின் விடா முயற்சி
ஐரோப்பாவின் சிறிய நாட்டில் இருந்து வந்த மைல்ஸ் மட்டுமே அந்த நாட்டின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். 2019ஆம் ஆண்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமது தாயகத்துக்கு அவர் வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
அதே ஆண்டில் நடந்த ஐரோப்பிய விளையாட்டுகளிலும் அவர் வெண்கல பதக்கம் வென்றார். மல்யுத்த வீரர்களைக் கொண்டது மைல்ஸின் குடும்பம். இவரது தாத்தா லெபனான் அணி சார்பில் 1960இல் ரோமில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கெடுத்தவர். இவரது சகோதரர் மாலிக்கும் மல்யுத்த வீரர்.
தீபக் புனியாவின் குடும்பம்
தமது குடும்பத்தில் முதலாவதாக மல்யுத்த மேடை ஏறும் வீரர் தீபக் புனியா. ஹரியாணாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள சாரா கிராமத்தில் பால் விற்பனையாளரான சுபாஷ் என்பவரின் மகன் தீபக் புனியா.
கடுமையான உழைப்பும், பயிற்சியும் மிக்கவராக அறியப்பட்ட இவர், ஒலிம்பிக் விளையாட்டுக்குள் ஏழு ஆண்டுகளில் நுழைந்துள்ளார்.
மகனின் ஒலிம்பிக் போட்டிக்காக அவர் பயிற்சி பெறும் 60 கி.மீ தூரத்தில் உள்ள சத்ராசால் விளையாட்டரங்குக்கு பால், பழம், பாதாம் பருப்பு போன்றவற்றை தாமே கொண்டு போய் கொடுப்பார்.
வெய்யிலோ மழையோ, மகனுக்கு இந்த பொருட்களை தமது மிதிவண்டியில் கொண்டு போய் தருவதை சுபாஷ் நிறுத்தியதே இல்லை. ஊட்டச்சத்து, உணவு முறை எந்த வகையிலும் தீபக்கின் பயிற்சிக்கு தடங்கலாக இருக்கக் கூடாது என்பதற்காக மொத்த குடும்பமும் அவரது முயற்சிக்கு உறுதுணையாக நின்றிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈமு கோழி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் யுவராஜ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூவருக்கும் சேர்த்து ரூ. 2.47 கோடி ஆபாரதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.2012ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி பண்ணை நிறுவனம் நடத்தி வந்த யுவராஜ் மற்றும் இருவர், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து முதலீட்டு தொகையாக பணம் வசூலித்துள்ளனர்.
2 ஆண்டுகளில் திட்டத்தில் குறிப்பிட்டபடி பணத்தொகையை திருப்பி அளிப்பதாகவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில், ஒப்பந்த காலத்திற்குள் தொகையை திருப்பி செலுத்தாமல், 121 முதலீட்டாளர்களிடம் ரூ.2,70,15,550 பணத்தை ஏமாற்றி தலைமறைவாகி உள்ளனர்.
இதையடுத்து 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மூவரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 139 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த கோவை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ரவி, ஈமு கோழி பண்ணை நிறுவனம் நடத்தி பண மோசடி செய்த யுவராஜ் உட்பட 3 குற்றவாளிகளுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூவருக்கும் சேர்த்து ரூ. 2,47,50,000 ஆபாரதமும் விதிப்பதாக தீர்ப்பில் கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் அவைத் தலைவருமான மதுசூதனன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது பங்கேற்று வந்தார். கடந்த ஜூலை 18 ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல்காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில், மதுசூதனன் காலமானதாக பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
யார் இந்த மதுசூதனன்?
அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் அங்கம் வகித்த மதுசூதனன், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ;;சட்டப்பேரவை தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த காலகட்டத்தில் கைத்தறித் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். வட சென்னையில்பிரபல அரசியல்வாதியாக உருவெடுத்து, எதிர்கட்சிகளுக்கு சவால் விடுக்கக் கூடியவராக விளங்கினார் மதுசூதனன்.
ஒரு காலத்தில் தனது அதிரடியான செயல்பாடுகளால் எதிர்கட்சி பிரமுகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் வலம் வந்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.கவின் அவைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தவர், பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் திரும்பினார்.அதன் மூலம் ஓ.பி.எஸ் பக்கம் சென்ற முதல் மூத்த நிர்வாகியாகவும் அவர் பார்க்கப்பட்டவர்.
அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்ற காலகட்டத்தில் கட்சியின் பெயர், இரட்டை இலை ஆகியவற்றை மதுசூதனனிடமே தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது.
அண்மையில் மதுசூதனை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் ஒரேநேரத்தில் அப்போலோ சென்றது விவாதப் பொருளாக மாறியது.
அ.தி.மு.கவில் அதிகாரம்மிகுந்த பதவியாகப் பார்க்கப்படும் அவைத் தலைவர் பதவியில் 15 ஆண்டுகளாக மதுசூதனன் பதவி வகித்தார். அவரது மறைவால் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க தொண்டர்களும் சோகம் அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்திய விவகாரம் ஆகியவற்றை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் டெல்லி ரைசினா சாலையில் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவை இடம் பெற்றுள்ள பகுதியில் இந்தப் போராட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வண்டி மூலம் தண்ணீர் அடித்தனர்.
டோக்யோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப் பிரிவில் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தின் இறுதிப் போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சவுர் உகெவை எதிர்கொண்ட ரவிகுமார் தஹியா தங்கப் பதக்கத்தை வெல்லத் தவறினாலும், இந்தியாவுக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவைத் தோற்கடித்து இந்தியாவிற்கு மீண்டும் பதக்க நம்பிக்கை கொடுத்த தஹியா, இறுதிப் போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டவேண்டும் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், அவர் இறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் இந்தியா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. மீராபாய் சானுவுக்குப் பிறகு, தஹியா மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அனந்தபூர் - சேமங்கலம் சாலை அருகேயுள்ள மலட்டாற்று முட்புதரில் நேற்று மாலை எரியூட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்த திருவெண்ணைய்நல்லூர் காவல் நிலைய காவலர்கள், சம்பவ பகுதியில் கருகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், இறந்த பெண் சுமார் 30 வயது மதிக்கதக்க திருமணமான இளம்பெண் என தெரியவந்துள்ளது.
பெண் எரியூட்ட இடத்தில் கிடந்த ஹேண்ட் பேக்கில் செல்பேசி ஒன்று இருந்துள்ளது. அதை வைத்து பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த காவல்துறையினர் முயன்று வருகிறார்கள்.
இறந்த பெண் கொலை செய்யப்பட்டு மலட்டாற்றில் எரிக்கப்பட்டாரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திருமணமான இளம்பெண் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணின் சடலத்தை எரிந்த நிலையில் மீட்கப்பட்டதால் அது கொலையாக இருக்கலாம் எனக் கருதி 302 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
"இறந்த பெண்ணின் வயதானது 30லிருந்து 35க்குள் இருக்கலாம். அவரின் முகம் முழுவதும் தீயில் சிதைந்துவிட்டது. அதனால் அவரை அடையாளம் காண முடியவில்லை," என காவல்துறையினர் தெரிவித்தனர்.
டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வென்றதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கை செல்பேசியில் அழைத்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
பிரதமர் மோதியும் மன்பிரீத் சிங்கும் பேசிக் கொள்ளும் அந்த காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகுர்.
"உங்களுக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துகள் பல. மிக அற்புதமான பணியை செய்திருக்கிறீர்கள். ஒட்டுமொத்த நாடும் குதூகலிக்கிறது. நாம் அனைவரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்திக்கப் போகிறோம். ஒவ்வொருவரையும் அழைத்து நான் பேசி வருகிறேன். மொத்த தேசமும் பெருமை கொள்கிறது," என்று செல்பேசியில் பாராட்டினார் மோதி.
இதைத்தொடர்ந்து அதே செல்பேசியில் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்த்துடனும் பேசிய மோதி, அவருக்கும் வாழ்த்து கூறினார்.
பிரதமர் தங்களுக்கு பக்க பலமாக இருந்தது தங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்று மன்பிரீத் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் அதிதி அசோக் கோல்ஃப் விளையாட்டில் இரண்டாவது சுற்றில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-க்கு 4 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆண்கள் 20 கிலோமீட்டர் நடை போட்டியில் கலந்து கொண்ட இந்திய விரர்கள் முறையே 23, 47, 51ஆவது இடங்களைப் பிடித்தனர்.
பெண்கள் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப் பிரிவில் வலேரியா கொப்லோவாவிடம் தோல்வியுற்றார் இந்தியாவின் அன்ஷூ மலிக்.
அதே போல 53 கிலோ பெண்கள் மல்யுத்த போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வினேஷ் போகத், காலிறுதியில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வனெசா கலட்சின்ஸ்கயாவிடம் தோல்வியுற்றார்.
இந்திய மல்யுத்தம் சார்பாக ரவிகுமார் தாஹியா (சவுர் உகுவ் உடன்) மற்றும் தீபக் பூனியா (நசீம் மைல்ஸ் உடன்) இன்று வெண்கலப் பதக்கத்துக்காக மோத உள்ளனர்.
அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார், அரசியல் உத்திகள் வகுப்பாளராக பரவலாக அறியப்படும் ஐபோக் ஆலோசனை நிறுவன உரிமையாளர் பிரசாந்த் கிஷோர்.
இது தொடர்பான தமது நிலையை முதல்வர் அமரிந்தர் சிங்கிடம் தெரிவித்த அவர், "இந்த பொறுப்பை தற்போது கையாளும் நிலையில் நான் இல்லை," என்று கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவரது பதவி விலகல் முடிவு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், "பொதுவாழ்வில் இருந்து தான் தற்காலிகமாக ஓட்வு எடுக்க விரும்புவதாகவும், முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பில் முழு நேரமும் ஈடுபட தன்னால் இயலாது என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கின் வெற்றிக்காக தமது ஐபேக் நிறுவனம் மூலம் உத்திகள் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர் அமரிந்தர் சிங்குக்காக உழைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை வழங்கினார் அமரிந்தர் சிங். இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் உத்திகள் வழங்கும் உறுதிப்படுத்தியிருந்தார் அமரிந்தர் சிங்.
இதற்கிடையே, அரசியல் உத்திகள் வகுப்பு பணியில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாகவும், அந்த பணியை இனி தமது ஐபேக் நிறுவனத்தின் சிறந்த நிர்வாகிகளே கவனிப்பார்கள் என்றும் பிரசாந்த் கிஷோக் அறிவித்தார்.
ஆனால், கடந்த மாதம் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஆகியோரை சந்தித்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
ஒருபுறம் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை கட்டியெழுப்ப பிரசாந்த் கிஷோர் உத்திகளை வகுப்பதாக பேசப்பட்டாலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களை சந்தித்திருப்பதன் மூலம் அந்த கட்சியிலேயே அவர் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம் என்றும் பேச்சு அடிபட்டது.
இது குறித்து எந்த கருத்தையும் பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பணியில் இருந்து விலகும் அறிவிப்பை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்தியா ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்று இந்திய அணி பெருமை சேர்த்திருக்கிறது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனி அணியுடன் ஆடியது போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது.
எனினும் இரண்டாவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் 17-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து சமன் செய்தது. நீலகண்ட சர்மா அளித்த பந்தை சிம்ரஞ்சித் அருமையாக கோலாக்கினார்.
ஜெர்மனி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினார். இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது. இதே போல் இந்திய அணியும் இரண்டு கோல்களை அடித்தது. இதனால் இரு அணிகளும் 3-3 என்ற கோல்கணக்கில் மீண்டும் சமநிலை பெற்றன.
மூன்றாவது கால் பகுதி ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணி பெனால்ட்டி கார்னர் மூலம் இன்னொரு கோலை அடித்தது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங் மற்றொரு கோலை அடித்தார் இதனால் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
பரபரப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்களால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் 53 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் ஸ்வீடன் நாட்டின் சோஃபியா மேட்சனுடன் மோதிய அவர் தொடக்கம் முதலே வலுவான நிலையில் இருந்தார்.
வினேஷ் போகத்தின் கிடிக்கிப் பிடிக்குள் சிக்கிய சோஃபியாவால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை.
இறுதியில் 7-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சென்று சேரும் வரை பூஸ்டர் டோஸ் போடும் திட்டங்களை நிறுத்தும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேராவது தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.
இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி ஏழை நாடுகளில் நூறு பேருக்கு 1.5 டோஸ் தடுப்பூசியே கிடைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனி அணியுடன் ஆடி வருகிறது.
போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது.
எனினும் இரண்டாவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் 17-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து சமன் செய்தது.
நீலகண்ட சர்மா அளித்த பந்தை சிம்ரஞ்சித் அருமையாக கோலாக்கினார்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.