'கொரோனா தோன்றியது எங்கே?' - மேலதிக விசாரணைக்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு

கொரோனா வைரஸின் மூலம் எங்கு என கண்டறிய மீண்டும் விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்மொழிந்த சரத்துகளை ஏற்க சீன அரசு மறுத்துள்ளது. சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கர்நாடகாவுக்கு புதிய முதல்வர்?

    ஜூலை 26ஆம் தேதி தமது அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, பாஜக தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    75 வயதுக்கும் மேலானவர்கள் அரசியல் பதவிகள் வகிக்கக் கூடாது என்று பாஜகவில் விதி உள்ளது. அதையும் மீறி 78 வயதாகும் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக உள்ளார்.

    கர்நாடக முதல்வர் மாற்றப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே பேச்சு உள்ள நிலையில், ஜூலை 26க்கு பிறகு கர்நாடகாவுக்கு புதிய முதல்வர் பாஜக தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாம் பதவி விலகுமாறு இதுவரை கட்சி மேலிடத்தால் அறிவுறுத்தப்படவில்லை என்று பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    எடியூரப்பா

    பட மூலாதாரம், Getty Images

  2. சீனாவில் வெள்ளம்: சமூக வலைதளத்தில் ஒன்றுகூடும் மக்கள்

    சீனாவின் க்ஹெனான் மாகாணம் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.

    அந்தமாகாணத்தின் ஜெங்ஜோநகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வீய்போ சமூக ஊடகத்தின் மூலம் மக்கள் இணைந்துள்ளனர்.

    இதில் ஹெனான், ’ஸ்டே ஸ்ட்ராங் ஹெனான’ போன்ற ஹாஷ்டாகுகளுடன் உதவி தேவைப்படும் நபர்களை மீட்புக் குழுவினருடன் இணைத்து வருகின்றனர்.

    பல வீய்போ சமூக வலைதளத்தில் தாங்கள் பாதிக்கப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

    பலர் உதவி கோருபவர்களின் பதிவை மீட்புக் குழுவினருக்கு ஃபார்வேட் செய்து வருகின்றனர்.

    இந்த ஆபத்தான சூழலில் மனநலம் உறுதியோடு இருக்க அறிவுரைகளையும் சமூக வலைதளத்தில் பலர் வழங்கி வருகின்றனர்.

  3. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை - ஒத்துழைக்க மறுக்கும் சீனா

    china deputy health minister

    பட மூலாதாரம், Reuters

    கொரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து மேலும் விசாரிக்க உலக சுகாதார நிறுவனம் முன் மொழிந்த திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது.

    கொரோனா தொற்றின் உருவாக்கம் குறித்த விசாரணையில் சீனா அதிக ஒத்துழைப்பை தர வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    மேலதிக விசாரணையில் சீன ஆய்வகங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சீனா மறுத்துள்ளது.

    இருப்பினும் உலக சுகாதார நிறுவனத்தின் அந்த திட்டம் பொது “அறிவுக்கு எதிரான அவமரியாதை என்றும் அறிவியலை நோக்கிய முரட்டுத் தனம்” என்றும் சீனாவின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    “இந்த திட்டம் அரசியல் சார்ந்தது எனவே சீனா அதை ஒப்புக் கொள்ளாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  4. யூத இனபடுகொலை குறித்து நகைச்சுவை – ஒலிம்பிக் தொடக்க விழா இயக்குநர் நீக்கம்

    kent

    பட மூலாதாரம், NEWSCOM / ALAMY STOCK PHOTO

    ஒலிம்பிக்கின் தொடக்க விழா நிகழ்ச்சியின் இயக்குநர்அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    கென் டாரோ கொபாயாஷி 1990களில் யூத இன படுகொலை குறித்து நகைச்சுவை செய்தவீடியோ ஒன்று தற்போது வெளியானதால், நிகழ்ச்சி நடைபெற ஒரு நாளே மீதம் இருக்கும் நிலையில் அவர் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ஒலிம்பிக் போட்டியை ஒட்டி நடைபெற்று வரும் பல்வேறு சர்ச்சைகளில் இதுவும் ஒன்று.

    நகைச்சுவை கலைஞரான கோபாயாஷி 23 வருடங்களுக்கு முன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் யூத இனபடுகொலையை சுட்டிக் காட்டி நகைச்சுவை செய்ததாக கூறப்படுகிறது.

    பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோபாயாஷி, “நகைச்சுவை என்பது பிறரை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது. அந்த சமயத்தில் நான் பயன்படுத்திய வார்த்தை தவறானது அதற்காக நான் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

  5. இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைவாக எண்ணப்பட்டதா?, மறுக்கும் அரசு

    இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் மிகவும் குறைவாகவே கணக்கில் கொள்ளப்பட்டன என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை இந்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நிகழ்ந்த மரணங்கள் குறைவாகவே எண்ணப்பட்டன என்று துறைசார் வல்லுனர்களும், ஆய்வாளர்களும் கூறிய வருகின்றனர். அவை ஊடகங்களில் தொடர்ந்து செய்தியாகவும் வெளியாகின்றன.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த கூடுதல் மரணங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக நிகழ்ந்தவை என்று கூறுவது மிகவும் தவறானது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் நிகழும் விகிதம், இந்தியாவில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கிடப்பட்டு இந்தியாவில் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

  6. டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்

    டெல்லி மாநில எல்லைகளில் இருந்து வந்த சுமார் 200 விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இந்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று 'விவசாயிகள் நாடாளுமன்ற' அமர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    ஜந்தர் மந்தர் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளது.

    நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டம் நடந்து முடியும் வரை நாள்தோறும் இந்த போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர், துணை சபாநாயகர், தேநீர் இடைவேளை என நாடாளுமன்ற அமர்வின் விதிகளே இங்கு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவிட் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது டெல்லி காவல் துறை.

    இதனிடையே, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் , வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். போக்குவரத்து துறையில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாக இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர் அமைச்சராக இருந்தபோது ஜிபிஎஸ் கருவிகளைக் கொள்முதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கே ஏலம் வழங்கப்படுவதாக அப்போது புகார் எழுந்தது.

    விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் இவர் தோல்வியுற்றார்.

    M R Vijayabaskar
  8. கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்

    கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் காணொளிகள் சிலவற்றை தங்கள் இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது.

    கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை; உள்ளடக்க விதிகள் காரணமாகவே நீக்கியுள்ளோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பொது முடக்கம், முக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார்.

    கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்

    பட மூலாதாரம், Reuters

  9. சீனாவில் கனமழையால் 25 பேர் பலி, மஞ்சள் நதியில் பெருவெள்ளம்

    சீனாவின் ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.

    ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

    ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.

    ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது. பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.

    மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள நகரமான ஜங்ஜோ வெள்ள ஆபத்து அதிகம் உள்ள மஞ்சள் நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

    ஹெனான் மாகாணத்தில் சமீபத்திய மழை காரணமாக இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் கனமழையால் இங்கு வெள்ளம் உண்டாகும். இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

    china floods

    பட மூலாதாரம், Getty Images

    china floods

    பட மூலாதாரம், bbc

  10. ஆர்எஸ்எஸ் தலைவர் வருகை குறித்த சுற்றறிக்கை, முரளிதரன் காசி விஸ்வநாதன்

    மதுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையை ஒட்டி சாலைகளைச் சரிசெய்து, தெரு விளக்குகளை சரிபார்க்கும்படி சுற்றறிக்கை வெளியிட்ட மாநகராட்சி உதவி ஆணையர், அவரது பணியிலிரு்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத் ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குறிப்பாக சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

    rss

    பட மூலாதாரம், Getty Images

  11. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவிலான செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பிபிசி தமிழ் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.