ரஷ்ய விமானம் சைபீரியாவில் மாயம்; 13 பேரை காணவில்லை
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் 31ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடதிட்ட தயாரிப்பு உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கொரோனா - மூன்றாவது அலையின் தொடக்கமா?, நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக
பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியில் 5 வயதிற்கு உட்பட்ட 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறையத் தொடங்கியதை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனிடையே கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 21 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 4 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பச்சிளங் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில், ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
மீதமுள்ள 4 குழந்தைகளுக்கு முடிவுகள் நிலுவையில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கொரோனா குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
"புதுச்சேரியில் கொரோனா மூன்றாவது அலை பரவல் ஏதும் ஏற்படவில்லை. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், தங்களது குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். மேலும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதினால் கொரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்க முடியும்," எனப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.
இதனிடையே புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை செயலர், இயக்குநர் மற்றும் பல துறைகளை சார்ந்த செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்த முழுமையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
ஒருவேளை குழந்தைகளை தாக்கினால் அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது," என்றார்.
தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் எந்த நேரத்திலும் மூன்றாவது அலை தாக்கலாம் எச்சரிக்கை உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும்.
குழந்தைகளை வெளியே கூட்டி செல்வதையும், உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து குழந்தை நல மருத்துவர்களும், பொது நல மருத்துவர்களும் குழந்தைகளுக்கு கொரோனா தொடரில் ஏற்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என துணை நிலை ஆளுநர் பேசினார்.
குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் அபாய கட்டத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றி இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக இயங்க வேண்டும். பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. இதனை முழு கவனத்தில் கொண்டு எப்பொழுதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்," என்று சீராய்வு கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய விமானம் மாயம்
சைபீரியாவில் ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
விமானத்தில் 13 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நீட் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மோதியிடம் வலியுறுத்திய மு.க. ஸ்டாலின்
பட மூலாதாரம், CMOTAMILNADU/TWITTER
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநில முதல்வர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழி வகுத்திடலாம். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
ஆப்கானிஸ்தானில் பிரபல இந்திய புகைப்பட நிரூபர் மரணம்
புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிரூபர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக, டெல்லியில் உள்ள அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட நிரூபரான சித்திகி, ஆஃப்கானிஸ்தான் மோதல்களை படம்பிடிக்க சென்றிருந்தார்.
பாகிஸ்தான் எல்லை போஸ்ட் அருகே தாலிபன்கள் உடனான சண்டையில் ஈடுபட்டிருந்த ஆப்கன் படைகளுடன் சித்திகி இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், DANISH SIDDIQUI/ TWITTER
படக்குறிப்பு, டேனிஷ் சித்திகி
சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
பட மூலாதாரம், BARCROFT MEDIA/GETTY IMAGES
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில் எப்படி வெள்ளம் புகுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் 22 மீட்பு வாகனங்கள், 5 நீரேற்றும் நிலையங்கள் ஆகியவற்றின் துணையுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுரங்கப்பாதை கட்டப்பட்டு வரும் பகுதி ஒரு நீர்த்தேக்கத்துக்கு அருகே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை விசித்திரமான குரல்கள் கேட்பதாக அங்கு பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்தப் பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். இணைந்திருங்கள்!